Published:Updated:

இன்பாக்ஸ்

மஹிமா நம்பியார்
பிரீமியம் ஸ்டோரி
மஹிமா நம்பியார்

கோவையில் முதல்முறையாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன. கொட்டும் மழைக்கு நடுவேயும், ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது

இன்பாக்ஸ்

கோவையில் முதல்முறையாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன. கொட்டும் மழைக்கு நடுவேயும், ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது

Published:Updated:
மஹிமா நம்பியார்
பிரீமியம் ஸ்டோரி
மஹிமா நம்பியார்
இன்பாக்ஸ்

முந்தைய தி.மு.க ஆட்சியில் சென்னையில் ‘சங்கமம்’ கலைத்திருவிழாவை நடத்தியதைப் போல, தூத்துக்குடியில் ‘நெய்தல்’ கலைத்திருவிழாவை 4 நாள்கள் நடத்தி முடித்துள்ளார், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி. இதில் கலை நிகழ்ச்சி நடத்திய கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஜெட்கிங் களரி குழுவினர், நிகழ்ச்சியை முடித்ததும் புராதனமான 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாள் ஒன்றைப் பரிசாக அளித்தனர். ‘தூத்துக்குடியின் ஜான்சி ராணியே' என கோஷம் எழுப்பி வாளைக் கொடுத்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார் கனிமொழி. வீரம் அழகு!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பாராகப் பணிபுரிந்தவர் கிளெமெண்ட். சமீபத்தில் ஓய்வுபெற்ற இவர் எழுதிய தஞ்சை மாநகராட்சி, நம்ம மாநகராட்சி என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மாநகராட்சியின் சிறப்புகள், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட, வெளியே தெரியாத வரலாற்றுச் சிறப்புமிக்க பல தகவல்கள் கொண்ட அந்தப் புத்தகம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறப்பு!

இன்பாக்ஸ்

கோவையில் முதல்முறையாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன. கொட்டும் மழைக்கு நடுவேயும், ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. மழை பெய்தாலும் உடனடியாக மைதானத்தைத் தயார் செய்யும் தொழில்நுட்பம் போன்றவற்றை வீரர்களே பாராட்டுகின்றனர். இப்படி நிறைகள் பல இருந்தாலும், முறையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பலவும் செய்யப்படாமல் உள்ளன. தற்காலிகமாகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால் போட்டிகளை ரசிக்க வரும் மக்கள் முகம் சுளிக்கும் சூழ்நிலை உருவாகிறது. குறைகளைச் சரி செய்தால் கிரிக்கெட்டை நிறைவாக ரசிக்க முடியும். ஆவன செய்யுங்க ஆபிசர்ஸ்!

இன்பாக்ஸ்

ஊட்டி ஃபிங்கர்போஸ்ட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்துவருகிறார் தமிழ்வாணி. இவரது குடியிருப்பு அருகில் ஒரு பூனைக்குட்டியை நாய்கள் சூழ்ந்து குதறத் தயாராக இருந்ததைக் கண்டு மீட்டிருக்கிறார். அதை வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார். ஆதரவற்ற அந்தப் பூனை இவரிடம் தஞ்சமடைந்த ஓராண்டைக் கொண்டாடும் வகையில் அந்தப் பூனையின் வடிவத்தில், அதே நிறத்தில் கேக் தயாரித்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்துப் பிறந்தநாள்போலக் கொண்டாடியிருக்கிறார். இந்த அரவணைப்பை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். அன்பெனும் பெருஞ்செல்வம்!

இன்பாக்ஸ்

சுஷ்மிதா சென் - லலித் மோடியின் காதல்தான் தற்போது பிரபஞ்சத்தின் பேசுபொருளாகியுள்ளது. ‘மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை' என்று மட்டும் சுஷ்மிதா விளக்கம் தந்துள்ளார். கடந்த ஆண்டு பிரிந்த சுஷ்மிதாவின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷால், ‘‘காதல் அழகானது. இருவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். சுஷ்மிதா யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் நிச்சயம் மதிப்புமிக்கவர்தான்'' என்று பெருந்தன்மையுடன் வாழ்த்தியுள்ளார். நலம் வாழ...!

இன்பாக்ஸ்

அப்பா பெருமிதப்படும் மகனாகப் பெயரெடுத்ததில் மகிழ்ந்து திளைக்கிறார் சிம்பு. அப்பாவின் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய அவரைக் கூப்பிட்டு கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு' படத்தின் காட்சிகளைக் காண்பித்திருக்கிறார். படம் பல மடங்கு திருப்தியாக வந்திருப்பதில் குஷியாகிவிட்டார் சிம்பு. உடனே கௌதமைக் கட்டியணைத்து, ‘‘நீங்க எப்போ கால்ஷீட் கேட்டாலும் தர்றேன்'’ எனப் பூரிப்புடன் வாக்குறுதி அளித்திருக்கிறார். மாற்றம்... முன்னேற்றம்!

இன்பாக்ஸ்

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம், பிரபாஸுடன் ‘சலார்' என டாப் ஹீரோக்களின் ஜோடியாக நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். இந்த லைன் அப்பைத் தொடர்ந்து, தமிழில் ஹீரோயின் சப்ஜெக்ட் கதையொன்றில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை டீகே இயக்குகிறார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கவிருக்கின்றன. வெல்கம் பேக் ஸ்ருதி!

இன்பாக்ஸ்

`நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக' மலையாளப் படத்தில் அறிமுகமாகி பாலிவுட் வரை ஹீரோயினாகக் கொடிகட்டிப் பறந்தவர் அசின். 8 மொழிகள் அறிந்துவைத்திருந்த அசின், சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது நடிப்புக்கு முழுக்கு போட்டவர். பிரபல தொழில் அதிபர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டு டெல்லியில் செட்டில் ஆனார். சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் அசின். சமீபத்தில் மகள் அறினின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அசினும் ஜூனியர் அசினும் ஒரே சாயலில் இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கமென்ட்டைத் தெறிக்கவிட்டுள்ளனர். அடிப்பொலி!

இன்பாக்ஸ்

`சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பித்துவிட்டது. இயக்குநர் பி.வாசு, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் தோட்டா தரணி, இசையமைப்பாளர் கீரவாணி என படம் டெக்னிக்கலாக செம ஸ்ட்ராங். ராகவா லாரன்ஸ் - வடிவேலு கூட்டணியில் காமெடி நிச்சயம் பேசப்படும் என அழுத்தமான நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. நாயகியாகப் பல பெயர்களைப் பரிசீலித்து, இறுதியாக படத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள் லட்சுமி மேனனும் மஹிமா நம்பியாரும். இதில் யார் சந்திரமுகி என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ரா ரா..!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை பிரபலப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி வளர்ச்சி தினத்தையொட்டி அருங்காட்சியகத்தில் மணல் ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, மோடி, ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் மணல் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஓவியங்களை உருவாக்கிய கேரளாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ‘‘கன்னியாகுமரி கடற்கரையில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை, பிரௌன் எனப் பல வண்ணங்களில் மணல் கிடைக்கிறது. அந்த மணலை கவனமாக எடுத்துத் தனித்தனியே பிரித்துக் காயவைத்து ஓவியங்களில் பயன்படுத்தினேன்” என்றார். மண் பேசும் பெருமை!

கடந்த இதழ் ‘இன்பாக்ஸ்’ பகுதி செய்தி ஒன்றில், அமீர்கான் மகள் சாரா அலிகான் என்று வெளியாகியிருந்தது. அது, சயீப் அலிகான் மகள் சாரா பற்றிய செய்தி. தவற்றுக்கு வருந்துகிறோம்.