Published:Updated:

இன்பாக்ஸ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

பாலிவுட்டில் பம்பரம் போல சுழன்று இயங்கும் டாப்ஸியின் வசம் டஜன் கணக்கில் படங்கள் இருக்கின்றன

இன்பாக்ஸ்

பாலிவுட்டில் பம்பரம் போல சுழன்று இயங்கும் டாப்ஸியின் வசம் டஜன் கணக்கில் படங்கள் இருக்கின்றன

Published:Updated:
பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

தமிழில் ‘முகமூடி’ திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் தெலுங்கு, இந்தி என்றெல்லாம் ஒரு ரவுண்டு சென்ற பின்னர்தான் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. விஜய்யின் ‘பீஸ்ட்’ மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் பூஜா. அதே வரிசையில் மிஷ்கினால் நாயகியாக ‘பிசாசு’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் பிரயாகா ரோஸ் மார்ட்டின். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் `நவரசா’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக நடிக்கிறார். இதில் சூர்யா நடிக்கும் ‘கித்தார் கம்பி மேலே நின்று’ நாயகி அவர்தான். நாயகிகள் வருக!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘மாநகரம்’ இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’, ‘ஃபேமிலி மேன்’ சீரிஸ் இயக்குநர் இயக்கத்தில் ஷாகித் கபூருடன் அமேசானுக்கு ஒரு படம், ‘அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஒரு படம் என விஜய் சேதுபதி பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களை வைத்திருக்கிறார். தவிர, இன்னொரு பாலிவுட் படத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். தமிழிலேயே அவருக்குப் பத்துப் படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன. எல்லாவுட்டிலும் வி.சே!

பாலிவுட்டில் பம்பரம் போல சுழன்று இயங்கும் டாப்ஸியின் வசம் டஜன் கணக்கில் படங்கள் இருக்கின்றன. அதில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிப் படங்களும் அடங்கும். தற்போது, ‘Outsiders Films’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். தன்னைப்போல எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வர நினைப்பவர்களுக்கான களமாக இருக்கும் எனவும், அதற்காகத்தான் இந்தப் பெயரில் நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும் சொல்லிருக்கிறார். `டாப்’ஸி!

வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் விஸ்மயா இறந்த சோகம், கேரளாவில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் ஓர் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார், மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து, திருவனந்தபுரம் காந்தி பவனில் ஒருநாள் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன காந்திய அமைப்புகள் சில. கவர்னர் மாளிகையில் இருந்தபடி தானும் உண்ணாவிரதம் இருந்த ஆரிப் முகமது கான், மாலை காந்தி பவன் வந்து பிரார்த்தனையில் பங்கேற்றார். ‘ஒரு கவர்னர் போராட்டத்தில் ஈடுபடலாமா’ என்ற அரசியல் சட்ட சர்ச்சையைக் கிளப்புகிறார்கள் ஆளும் இடதுசாரிக் கூட்டணியினர். ஆனால், ‘`வரதட்சணை என்கிற சமூக அவலம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதைச் செய்தேன். இது அரசியலைத் தாண்டிய விஷயம். முதல்வர் பினராயி விஜயனிடம்கூட இதுபற்றி விவாதித்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் கவர்னர். கவர்னர்னாலே சர்ச்சைதான்!

உத்தரகாண்ட் முதல்வருக்காகத் தலைநகர் டேராடூனில் அரசு இல்லம் இருக்கிறது. இதில் குடியேறும் எவரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இருக்க முடியாது என்ற சென்டிமென்ட் நிலவுவதால், பலரும் இதைத் தவிர்க்கிறார்கள். ஹரிஷ் ராவத் முதல்வராக இருந்தபோது, கடைசிவரை இந்த வீட்டில் குடியேறாமல், அரசு விருந்தினர் இல்லத்தில்தான் தங்கினார். திரிவேந்திர ராவத் துணிச்சலாக முதல்வர் இல்லத்தில் குடியேறினார். ஆனால், கடந்த மார்ச் மாதம் அவர் பதவி பறிபோனது. அவருக்குப் பிறகு வந்த திரத் சிங் ராவத் இந்த முதல்வர் இல்லத்தைத் தற்காலிக கொரோனா சிகிச்சை முகாமாகவே மாற்றினார். ஆனாலும் அவர் பதவி சமீபத்தில் பறிபோனது. புதிய முதல்வர் புஷ்கர் தாமி பூஜையெல்லாம் செய்துவிட்டு முதல்வர் இல்லத்தில் குடியேறியுள்ளார். அதென்ன ‘சந்திரமுகி’ பங்களாவா?

கோவையில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, ராஜகோபால் சுங்கரா ஐ.ஏ.எஸ் மாநகராட்சி ஆணையராகப் பதவியேற்றார். 31 வயதே ஆன இந்த இளம் அதிகாரி எப்படிச் செயல்படப் போகிறார் என்று சந்தேகப்பட்ட பலருக்கும், அவரது செயல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திவருகின்றன. தார்ச்சாலையை நேரடியாக ஆய்வதில் தொடங்கி, நீண்ட நாள் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் கொடுப்பதுவரை கவனம் ஈர்த்துவருகிறார். வாட்ஸ் அப்பில் யார் புகார் அனுப்பினாலும் உடனடியாகப் பதில் அளிக்கிறார். கோவை மாநகராட்சி கடுமையான பொருளாதாரச் சிக்கலில் உள்ளது. இதனால், பொருளாதாரத்தில் கறார் காட்டும் ராஜகோபால், ‘முக்கியப் பயன்பாட்டுக்கு மட்டுமே A4 காகிதங்களைப் பயன்படுத்த வேண்டும்; மற்ற நேரங்களில் மட்டி காகிதங்களைப் பயன்படுத்துங்கள்’ என்று உத்தரவு போட்டுள்ளார். கலக்குங்க கமிஷனர் சார்..!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர், தனது விலையுயர்ந்த சைக்கிள் ஒன்று காணாமல்போனதையடுத்து அதன் சிசிடிவி காட்சிகளோடு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார். இதனை உடனடியாக கவனத்தில் எடுத்த திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையினர் அவரது சைக்கிளை மீட்டு, குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இதற்குக் காவல்துறையினருக்கு ஒரு பெரிய சல்யூட்டாக அடித்துள்ளார் அஜ்மல். வேற மாரி... வேற மாரி!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மயிலாறு, இஞ்சிக்குழி, காரையாறு உள்ளிட்ட இடங்களில் காணி மக்கள் வாழ்கிறார்கள். மலையை நம்பி வாழும் அந்த மக்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைக்கும் தேன், நெல்லிக்காய், காட்டுப்புளி, மிளகு, கடுக்காய், அத்திப்பழம், மூலிகைகள் போன்றவற்றை வாழ்வாதாரத்துக்காக விற்பனை செய்கிறார்கள். காணி மக்கள் விற்பனை செய்யும் பொருள்களை வியாபாரிகள் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச் சென்றதால் அவர்களுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. கொரோனாத் தடுப்பூசி விழிப்புணர்வுக்காகச் சென்ற நெல்லை ஆட்சியர் விஷ்ணு, அந்த மக்களின் நிலையை அறிந்து உதவி செய்ய முன்வந்தார். அவர்களின் பொருள்களுக்கு ஆர்கானிக் சான்று கிடைக்க ஏற்பாடு செய்துகொடுத்ததுடன், நெல்லையில் விற்பனைக் கூடம் அமைத்துக் கொடுத்துள்ளார். அதனால் அவர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்துவருகிறது. அத்துடன், காணி மக்களின் பொருள்களை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துவருவதால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரவேற்போம்!

இன்பாக்ஸ்

கும்பகோணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பறவைகள் மற்றும் அணில்கள் தானியங்கள் சாப்பிடுவதற்காக பேட்ஸ் பீடர் என்ற பெயரில் வேஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் தட்டின் மூலம் தானியங்கள் வைப்பதற்கான உணவுக்குடுவைகள் தயார் செய்து 250 தெருக்களில் வைத்துள்ளனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் தானியங்கள் வைக்கத் தொடங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்ச்சி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. பட்சிராஜாக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே பாப்பாத்திக் கொட்டாய் எனும் இடத்தில் உள்ள பெரிய பாறை ஒன்றில், பழைமையான மான் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் குழுவினர், இந்த ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். செஞ்சாந்து கொண்டு தீட்டப்பட்டுள்ள இந்த ஐந்து மான் ஓவியங்களும் சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர் ஓவியத்தை ஆவணப்படுத்தியுள்ள குழுவினர்.

ஸ்டார் நடிகர்களின் குட்டீஸை வெளித்திரைக்கு அறிமுகப்படுத்துவதில் டோலிவுட் இயக்குநர் குணசேகர் முக்கியமானவர். 1996-ம் ஆண்டு வெளிவந்த தனது ‘பால இராமாயணம்’ படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆரை அறிமுகப்படுத்தினார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர். மகன் அபய் ராமை ராணா டகுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஹிரண்யாகசிபா’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளார் குணசேகர். அதேபோல், அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹாவை ‘சகுந்தலம்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளார். காளிதாஸ் எழுதிய ‘சகுந்தலா’வை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அர்ஹாவுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்கிறார்கள். வாழ்த்துகள் லிட்டில் ஸ்டைலிஷ் ஸ்டார்!

நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலும் எல்லைப் பிரச்னை ஏற்படும். அசாமும் மிசோரம் மாநிலமும் எல்லைத் தகராறைத் தீர்க்க தலைமைச் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இரு மாநிலங்களுக்கும் இடையிலான 164 கி.மீ நீள எல்லையைத் தாண்டி மிசோரம் மக்கள் வந்து ஆக்கிரமிப்பதாக அசாம் புகார் செய்கிறது. ‘`இதுவரை எங்கள் மாநிலத்தின் 6.5 கி.மீ நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது’’ என்று புகார் செய்கிறார், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. கடந்த வாரம் அசாம் அதிகாரிகள் தங்கள் எல்லை கிராமம் ஒன்றில் ரோடு போட்டபோது, ‘எங்க ஏரியா, உள்ளே வராதே’ என மிசோரம் மக்கள் சிலர் வந்து கையெறி குண்டு வீசித் தகராறு செய்துள்ளனர். இப்போது இரு மாநில எல்லையில் பாதுகாப்புப் படை காவல் புரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism