Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

பிரான்ஸின் உயரிய திரைப்பட விழாவான கான் விழாவினை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது இந்திய திரையுலகம்.

இன்பாக்ஸ்

பிரான்ஸின் உயரிய திரைப்பட விழாவான கான் விழாவினை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது இந்திய திரையுலகம்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்று அடுத்தடுத்து இருவரையும் சந்தித்துப் பேசிவிட்டார் விஜய். இன்னும் தமிழக முதல்வரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்காதது நுட்பமான கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனவே விஜய் ஹைதராபாத் படப்பிடிப்பு முடித்து வந்ததும் தமிழக முதல்வரைச் சந்திக்கவிருக்கிறார் என நம்பகமான விஜய் வட்டாரம் கூறுகிறது. தளபதி அண்ட் தளபதி!

இன்பாக்ஸ்

தங்க நகைகள் அணிவதைப் பெரிதாக விரும்பாதவர் அஜித். மனைவி ஷாலினியின் அன்பான வேண்டுகோளுக்காக தன் வலது கை ஆட்காட்டி விரலில் ஒரே ஒரு மோதிரம் அணிந்திருக்கிறார். இப்போது `அஜித் 61' படத்தின் லுக்கிற்காக இடது காதில் ஒரு தங்கக் கம்மல் அணிந்திருக்கிறார். அதை அஜித்தின் சைக்கிளிங் நண்பர்கள் வட்டாரம் பெரிதும் பாராட்டியிருக்கிறது. ஸ்டைலு ஸ்டைலுதான்!

மலையாள சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த தம்பதி பூர்ணிமா - இந்திரஜித் ஜோடி. விரைவில் வெளியாகவிருக்கும் `துறைமுகம்' படத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா, புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். தனது வீட்டின் சுவரில் சிமென்ட் பூசும் பணியைச் செய்து அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருக்கிறார் பூர்ணிமா. `சொந்த வீட்டின் வேலையை சொந்தமாகச் செய்வது பெரும் சந்தோஷம்' என்று பூர்ணிமா சொல்லியிருக்க, `மெதுவாக... சுவருக்கு வலிக்கப்போகிறது' என்றும், `இது முகத்தில் பூசி நடிப்பது போன்று அல்ல' என்றும் ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். ஆயிரம் ஜன்னல் வீடு!

இன்பாக்ஸ்

ஷாருக்கான் படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகளாகிறது. விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக பம்பரமாகச் சுழல்கிறார் ஷாருக். `பதான்' படத்தின் பெரும்பகுதியை முடித்துக் கொடுத்துவிட்ட ஷாருக், அடுத்து அட்லி மற்றும் ராஜ்குமார் ஹிரானி படங்களில் நடித்துவருகிறார். வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தால் நேரம் வீணாகும் என்று ஷாருக் கருதியதால், இப்போது இரண்டு ஷூட்டிங்கும் மும்பை பிலிம் சிட்டியில் அருகருகே நடக்கிறது. கம்பேக் கிங்!

பிரான்ஸின் உயரிய திரைப்பட விழாவான கான் விழாவினை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது இந்திய திரையுலகம். தமிழகத்தில் இருந்து கமல், ரஹ்மான், பா.இரஞ்சித் உட்பட பலர் இந்த முறை கான் திரைப்பட விழாவுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்திய பெவிலியன் நிகழ்ச்சியில் தமன்னா, தீபிகா, பூஜா, நவாஸூதின் என பல பிரபலங்கள் பங்கேற்றனர். மாதவனின் ‘ராக்ட்ரி தி நம்பி எஃபெக்ட்', ஷங்கர் ஸ்ரீகுமாரின் ‘அல்ஃபா பீட்டா காமா' உள்ளிட்ட சில படங்களை இந்தியாவின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கான் திரைப்பட விழாவுக்கு இந்தியா சார்பில் அனுப்பியிருக்கிறது. ‘‘கான் திரைப்பட விழாக்களில் இந்தியப் படங்களும் இந்தியர்களும் இருக்கும் காலம் போய், கான் திரைப்பட விழாவே இந்தியாவில் நடக்கும்'' என்று பெருமை பொங்கப் பேசினார் தீபிகா படுகோன். கான் என்பது பிரான்ஸில் இருக்கும் நகரம், அது எப்படி இந்தியாவில் நடக்கும் என்றெல்லாம் சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்தார்கள். ரொம்ப ஆராயக்கூடாது!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

உடல்நலப் பரிசோதனைக்காக மறுபடியும் அமெரிக்கா போகவிருக்கிறார் ரஜினி. சில நாள்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க இருந்ததும் இதனால் தள்ளிப்போகிறது. சமீப நாள்களில் ரஜினியைச் சந்தித்தது கமல் மட்டும்தான். அடுத்த மாத மத்தியில் அமெரிக்கப் பயணம் இருக்கும் என்கிறார்கள். திரும்பி வந்ததும் அடுத்த படத்துக்குத் தயாராகிறார். நலம் வாழ...

மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை கோவையிலிருந்து இயங்கும் ஆயல் விருதுக்குழுவினர் அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஒரு லட்சம் ரூபாயும் பெறுகிறார். தமிழ் அறிவுச் சூழலில் ஒரு சீரான முன்னுதாரணத்தைக் காட்டியும், தொடர்ந்து விடாமல் தன் பங்களிப்பைச் செய்தும் வந்த அவருக்கு இந்த விருது பொருத்தமுடையதாகிறது. அறிஞருக்கு மரியாதை!

இன்பாக்ஸ்

திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். இவரின் சொந்த ஊரில் முதல் படம் `வெண்ணிலா கபடி குழு' எடுக்கப்பட்டு, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தன் தந்தை பெயரில் சுசீந்திரன் தொடங்கிய நல்லுச்சாமி பிக்சர்ஸ் பேனரில் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் `வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கவுள்ளார். ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி படப்பிடிப்பைத் தொடக்கிவைத்தார். மண்ணும் மக்களும்!

இன்பாக்ஸ்

தடுக்கி விழுந்தால் பாலம் என்கிற ரீதியில், கோவை மாநகரைச் சுற்றி மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. மறுபக்கம் மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கையும் தயாராகிவருகிறது. ஏற்கெனவே, லட்சுமி மில்ஸ் பகுதியில் லூலூ மால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு மால்களும் கட்டப்பட்டுவருகின்றன. சமூக வலைதளங்களில் மற்ற ஊர்க்காரர்கள், “அப்பறம் என்ன... சில்லென்ற கோயம்புத்தூரன்ஸ் கலக்குங்க” என்று கூறிவருகின்றனர். ஆனால் கோவைக்காரர்களோ, “அட அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல இருக்கற ரோடுகள சரிபண்ணுங்கப்பா. வண்டியே ஓட்ட முடியல” எனக் கதறிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. ரோடு முக்கியம் பிகிலு..!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பிரேசிலில் நடந்த செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில், இறகுப்பந்து போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா. இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த இந்த மதுரை மாநகராட்சி ஔவை மேல்நிலைப் பள்ளி மாணவி மதுரை திரும்பியபோது, மக்கள் திரளாகச் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் பி.மூர்த்தி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாழ்த்தினார். சாதனைகள் தொடரட்டும்!

இன்பாக்ஸ்

`அண்ணாத்த'வுக்குப் பிறகு ஸ்கிரிப்ட் வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார் இயக்குநர் சிவா. சூர்யா படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டதால், சூர்யாவின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறார் சிவா. இன்னொரு பக்கம் அஜித்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் மும்முரமாக நடந்துவருகின்றன. ‘வி’ சீரிஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கோவில்பட்டியைச் சேர்ந்த பல் மருத்துவர் தாயப்பா கார்த்திகேயன். இவர் மனைவி கோப்பெருந்தேவி என்ற ஜெயந்தி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர்கள் மகன் இராஜவேலுக்கும், ஜமீன்தேவர்குளத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் ஜோதிலட்சுமிக்கும் திருமணம். அழைப்பிதழை ஜெயந்தி எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தின் அட்டையில் அச்சிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து அச்சிடப்பட்ட மஞ்சள் பையில் வைத்து, அதனுடன் இனிப்பிற்காக சில்லுக்கருப்பட்டியும் போட்டு வழங்கியுள்ளனர். ``தமிழ்முறைப்படி திருமணத்தை நடத்தியதால், அழைப்பிதழிலும் தமிழ் மணக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தோம். பனையைப் போற்ற சில்லுக்கருப்பட்டியை இனிப்பாகக் கொடுத்துத் திருமணத்திற்கு அழைத்தோம்” என்றார் ஜெயந்தி. தமிழ்ச்சுவை!

இன்பாக்ஸ்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத்தான் சிறப்பு அங்கியை அணிந்த நிலையில் பட்டம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்த 29 மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்தி அசத்தியுள்ளனர். ஊராட்சிமன்றத் தலைவி கவிதா சுரேஷ்குமார் கலந்துகொண்டு, மாணவர்கள் அனைவருக்கும் பட்டமளித்தார். இதற்கான உடைகளை ஈரோட்டில் இருந்து வாடகைக்கு எடுத்துவந்தார்களாம். ``இதுபோன்ற விஷயங்கள் மாணவர்களுக்குக் கல்விமீதான ஈர்ப்பைச் சிறுவயதிலேயே கொடுக்கும்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை. சிறப்பு!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பன்குளம் கிராமத்தில், கல்குவாரியில் பாறைகள் சரிந்த விபத்தில் 350 அடி ஆழத்துக்குள் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டார்கள். இவர்களை மீட்க தீயணைப்புப்படையினர் முயற்சி மேற்கொண்டபோது அழைக்கப்பட்டவர் மரிய மைக்கேல். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் கமாண்டோவாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். சென்னையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியாற்றிவருகிறார். குவாரிக்குள் சிக்கியவர்களை மீட்க உயிரைப் பணயம் வைத்து பொக்லைனில் கயிறு கட்டி கீழே இறங்கி, பாறைகளுக்குள் சிக்கியிருந்த முருகன், விஜய் ஆகிய இருவரை சிறிய காயங்களுடன் மீட்டார். இருவரை உயிருடன் மீட்கக் காரணமாக இருந்த மரிய மைக்கேல், “அப்பாவின் கடைசி காலத்தில் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வு பெற்று வந்தேன். இங்கே கற்பாறைகள் சரிந்து உயிருக்குப் போராடியவர்களை என் உறவினர்களாகவே நினைத்தேன். அதனால்தான் முதல் ஆளாக உள்ளே இறங்கினேன்” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார். மனிதம் உயிர்காக்கும்!