Published:Updated:

இன்பாக்ஸ்

கொரோனா காலத்தில் பல ஆட்சியாளர்களின் நாக்கில் சனி உட்கார்ந்துவிடுகிறது. இதில் லேட்டஸ்ட், கர்நாடக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா.

பிரீமியம் ஸ்டோரி

பீகாரில் கொரோனா ஊரடங்கில் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு தருவதற்காக அரசு சார்பில் கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு சாப்பிடும் ஏழைகளுடன் சமீபத்தில் முதல்வர் நிதிஷ் குமார் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார். நிகழ்ச்சிக்கு முன்பாக அதிகாரிகள், ``எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுங்க. வேறு எதுவும் சொல்லக்கூடாது'' என மக்களுக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட, அது செம வைரல். முதல்வர் நிகழ்ச்சிக்காக டேபிள், சேர் போட்டு, கைகளில் கிளவுஸ் அணிந்து சுத்தமாக உணவு பரிமாறினர். அடுத்த நாளே சுகாதாரமே இல்லாமல் உணவு பரிமாறும் காட்சிகளும் வெளியாகின. அத்தனையும் நடிப்பா கோபால்?

கொரோனா அச்சத்துக்கு இடையிலேயும் 'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. மெக்ஸிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா கிரீடம் வென்றிருக்கிறார். அடுத்த நாளே, `அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. விதிகளை மீறிப் போட்டியில் கலந்துகொண்டார்' எனப் பரபரப்பு கிளம்பியது. மெக்ஸிகோ நாட்டின் ஜார்ஜ் சியன்ஸ் என்ற மாடலும் ஆண்ட்ரியாவும் திருமணக் கோலத்தில் ஒரு மலைவிளிம்பில் நிற்கும் படங்கள் வைரலாகின. `இன்று எங்கள் புது வாழ்க்கை ஆரம்பமாகிறது. உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக இப்போது இருக்கிறேன்' என சியன்ஸ் அந்தப் படத்துக்குக் கீழே குறிப்பு எழுதியிருந்ததும் சர்ச்சையானது. ``ஒரு சுற்றுலா விளம்பரத்தில் நாங்கள் இணைந்து நடித்தோம். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை'' என விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா. இன்னுமா இப்படி ரூல் இருக்கு?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

`புதிய நாடாளுமன்றம் கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்காகச் செலவிடும் 20,000 கோடி ரூபாயை கொரோனாத் தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துங்கள்' என சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சமீபத்தில் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இதற்கு பிரதமர் பதில் தரவில்லை. பதில் தந்தவர், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. `எங்களை நிறுத்தச் சொல்கிறீர்கள். ஆனால், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்றம், முதல்வர் இல்லம் மற்றும் கவர்னர் மாளிகை கட்டும் பணிகள் இப்போதும் தொடர்கிறதே... உங்களுக்கு ஒரு நியாயமா?' என நட்டா கேட்டிருந்தார். இப்போது சத்தீஸ்கர் சட்டமன்றக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தொடர்கிறது. ஏட்டிக்குப் போட்டி!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பிரதமேஷ் ஜாஜூ என்பவர் தனது டெலஸ்கோப்பைக் கொண்டு நிலாவை டிசைன் டிசைனாக 55,000 புகைப்படங்களை எடுத்துள்ளார். முழுத் தொகுப்பை ஒன்றாகக் கோத்து ஒரே புகைப்படமாக 50 எம்.பிக்கு உருவாக்கியுள்ளார். பிரதமேஷ் எடுத்த இந்த நிலாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் இரவு பகல் பாராது வைரலாகி வருகிறது. கொரோனாவிற்கு மத்தியில் இதனை கூலாகச் செய்து முடித்துள்ள பிரதமேஷுக்கு வானியல் ஆய்வாளராவதுதான் கனவாம். கனவு மெய்ப்பட வேண்டும்!

கொரோனா காலத்தில் பல ஆட்சியாளர்களின் நாக்கில் சனி உட்கார்ந்துவிடுகிறது. இதில் லேட்டஸ்ட், கர்நாடக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா. `கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கும் எல்லோருக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன. இதுபற்றிக் கேட்டபோது, ``நாங்கள் என்ன நோட்டு அடிக்கும் மிஷினா வைத்திருக்கிறோம், இவர்கள் சொன்னவுடன் அச்சடித்துக் கொடுப்பதற்கு? எதிர்க்கட்சியினர் வாய்க்குதான் லாக்டௌன் போட வேண்டும்'' என்று கோபமாகச் சொன்னார் ஈஸ்வரப்பா. இன்னும் என்னலாம் பார்க்கணுமோ?

கோவையில் கொரோனா தேவிக்குச் சிலை வைத்துக் கடவுளாக்கியது கடந்த வாரத்துப் பரபரப்பு. ஆனால், வட இந்தியர்கள் எப்போதோ இதைத் தாண்டிப் போய்விட்டனர். உக்கிரமாக ஆட்டம் போடும் கொரோனா தேவியை சாந்தப்படுத்த உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, குஷிநகர் பகுதி கிராமங்களில் ஏற்கெனவே வழிபாடுகள் தொடங்கிவிட்டன. பல ஊர்களில் பெண்கள் இணைந்து பரிகார பூஜைகள் செய்கிறார்கள். `நாத்தனாருக்குப் புடவை வாங்கிக் கொடுத்தால் கொரோனா தாக்காது' என்று யாரோ வதந்தி கிளப்பிவிட, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல கிராமங்களில் புதுப்புடவைகளுடன் பெண்கள் நாத்தனார் வீட்டுக்குப் பயணம் செய்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளார். வரும் ஜூலை 21-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் `தி ஹண்ட்ரட்' டி-20 கிரிக்கெட் தொடரை ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலின் பிரபல தொகுப்பாளர்களுடன் இணைந்து முதல்முறையாகத் தொகுத்து வழங்கவுள்ளார். நீ கலக்கு குமாரு!

புதிதாக ஏதாவது ஐடியா பிடிப்பதே நெட்ஃப்ளிக்ஸின் வாடிக்கையாகிவிட்டது. இன்டரேக்டிவ் சினிமா வரை சென்றவர்கள், தற்போது ஒரு ட்ரைலாஜி படத்தை எடுத்திருக்கிறார்கள். ட்ரைலாஜி புதிதல்லதான், ஆனால் இந்த மூன்றையும் அடுத்தடுத்த வாரங்களில் ஒரு வெப்சீரிஸ் டைப்பில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டைனின் கிளாசிக் படைப்பான 'ஃபியர் ஸ்ட்ரீட்' புத்தகங்களை அடிப்படையாக வைத்து இவற்றை எடுத்திருக்கிறார்கள். ஹாரர் படங்களான இவை 1994, 1978 மற்றும் 1666 என மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதைகள். டீன் ஏஜ் குரூப்பை டார்கெட் செய்து உருவாகியிருக்கும் இந்தப் படைப்பில் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' நடிகர்கள் சிலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹாரர் நைட்ஸ் வெயிட்டிங்!

மன்னார்குடித் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா கஜா புயல் நேரத்தில், அவசர உதவிகளுக்காக ஹெல்ப்லைன் நம்பர் வெளியிட்டு அசத்தினார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஒரு பிரத்யேக அலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் எந்த உதவி தேவைப்பட்டாலும் இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு உடனடியாக உதவிகள் தேடிப் போகும். காலத்தினால் செய்த உதவி!

`ஊருக்குள் மட்டுமல்ல... கடலுக்குள் செல்லும்போதும் முகக் கவசம் அவசியம்' என மீனவர்களுக்குக் கடற்படை அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, செங்காடு உள்ளிட்ட மீனவர் குடியிருப்புகளுக்கு திடீரென வருகை புரிந்த கடற்படை அதிகாரிகள், மீனவர்களுக்குத் தரமான முகக்கவசங்களை வழங்கி, ``எச்சரிக்கையோடு இருங்கள். வீட்டிலிருக்கும்போது மட்டுமல்ல, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போதும் முகக்கவசம் அணியுங்கள்'' என அன்போடு அறிவுறுத்தினர். இது இப்பகுதி மீனவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடற்படை அதிகாரிகளுக்கு மீனவர்கள் மட்டுமல்ல... மீன்களும்கூட தேங்க்ஸ் சொல்லும்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா சவாலான புதுப்புதுக் கதைகளைப் படமாக்கக் கூடியவர். அந்த வரிசையில் காண்டம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் காண்டம் பரிசோதனையாளரின் கதையைப் படமாக்கவுள்ளார். இதில் நடிப்பதற்காக முதலில் சாரா அலிகான், அனன்யா பாண்டே ஆகியோரை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் தயங்கவே. ‘நான் வர்றேன்’ என்று வாலண்டியராக வந்து படத்தில் ஆன் போர்டு ஆகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். `சிங்’கப் பெண்ணே!

இன்பாக்ஸ்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்படும் மையம் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சையில் உள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, வாரம் இருநாள் இங்கு ஆய்வுக்குச் செல்வது வழக்கம். அப்போது சிலர், ``நாங்கள் செல்போனை மட்டுமே பார்க்கும் சூழல் உள்ளது. அதில் பரவும் தகவல்கள் பதற்றதை ஏற்படுத்துகின்றன. படிக்க புத்தகம், உள்ளேயே விளையாடும்படி கேரம், செஸ் போர்டுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்'' எனக் கூறியுள்ளனர். இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் 500 புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்களை அன்றே வாங்கிக் கொடுத்துள்ளார் மணிகண்ட பிரபு. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கவலை, சோர்வு இன்றி இருக்கிறார்களாம். வெல்டன் சார்!

கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் அச்சமின்றி கொரோனா வார்டில் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர். அவர்களுக்குப் பாராட்டு குவிகிறது. ஸ்டூடன்ட் நம்பர் ஒன்!

ரம்ஜான் அன்று வெளியான சல்மான் கானின் ‘ராதே’ படத்தை பிரியாணி போட்டனர் நெட்டிசன்ஸ். `போதும்டா சாமி... முடியல!’ என்கிற ரேஞ்சுக்கு படத்தைப் பார்த்தவர்கள் குமுறினாலும். சல்மானின் வெறித்தனமான ரசிகர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். ஜீ பிளெக்ஸ் தளத்திலும், DTHலும் (Pay-Per-View) முறையில் வெளியான படத்தை முதல் நாளில் மட்டும் சுமார் 4.2 மில்லியன் பேர் அதிகாரபூர்வமாகப் பார்த்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் காட்டில் அடைமழை கொட்டியுள்ளது. இதைப் பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் கைவசமுள்ள பெரிய படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘83’, `சூரியவன்ஷி' உள்ளிட்ட படங்களை விரைவில் வீட்டிலிருந்தே காணலாம் என்கிறார்கள். ஓ, அப்படியா விஷயம்!

ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. மனிதர்கள் பழக்கி அடிமைப்படுத்த முடியாத நாய்கள்தான் ஓநாய்கள். அதனாலோ என்னவோ, நமக்கு என்றுமே ஓநாய்கள் அலர்ஜி. அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணத்தில் கவர்னரின் அனுமதியுடன் 90% ஓநாய்களைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முற்றிலுமாய்த் துடைத்தெறியப்பட்ட ஓநாய்கள், மீண்டும் 1995-ம் ஆண்டுதான் இங்கு கொண்டுவரப்பட்டன. 150 ஓநாய்கள்தான் லிமிட் என வரம்பு வைத்திருந்த மாகாணத்தில் தற்போது 1,556 ஓநாய்கள் இருக்கின்றன. அதனால் ஓநாய் வேட்டையை அனுமதித்திருக்கிறார்கள். மாடுகளையும், ஆடுகளையும் கொன்றுவிடுகின்றன என்பதுதான் ஓநாய்களின் மீதான குற்றச்சாட்டு. ஓர் ஆண்டுக்கு சராசரியாக இப்படியாகும் குற்றங்களின் எண்ணிக்கை 113. ஆண்டுதோறும் சூழலியல் பிரச்னைகள், நோய்களின் பெயரால் 40,000 கால்நடைகளை இழக்கும் ஐடாஹோ மக்களால், 113 குற்றங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் நகைமுரண். உயிர்ச்சங்கிலியில் எந்தவொரு விலங்கையும் கொல்லும் அதிகாரம் மனிதனுக்குக் கிடையாது.

`ஆண் பாவம்' படத்தை 80களின் டிரெண்ட் செட் மூவி என இப்போதும் கொண்டாடி வரும் ரசிகர்களால் சந்தோஷத்தில் திளைக்கும் பாண்டியராஜனுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். அதே `ஆண் பாவம்' க்ளாஸிக்கை இத்தனை வருடங்கள் கழித்து இந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்பு வந்திருக்கிறதாம். `கோல்மால்' சீரீஸ் படங்கள் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கவிருக்கிறாராம். ஹீரோக்களாக அஜய் தேவ்கன் -அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை போகிறதாம். அட!

இன்பாக்ஸ்

ஆஸ்திரேலியாவில் மிக அதிக வயது வாழும் மனிதர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் டெக்ஸ்டர் க்ரூகர். கால்நடை மேய்க்கும் தொழில் செய்துவந்த இவரின் வயது 111. தன் ஆயுள் ரகசியமாக க்ரூகர் சொல்வது, சிக்கன் மூளைக்கறி. ``ஒரு கோழியில் இது கொஞ்சமே கொஞ்சம்தான் இருக்கும். வாரம் ஒருமுறை சாப்பிடுவேன்'' எனும் இவர், தற்போது ஒரு நர்சிங் ஹோமில் உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கிறார். நிறை வாழ்க்கை!

கொரோனா முதல் அலையின்போது பழங்குடி மக்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படவில்லை. ஆனால், கொரோனா இரண்டாவது அலை பழங்குடி கிராமங்களிலும் நுழைந்துவிட்டது. ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலைப் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்கிற 35 வயது பழங்குடி இளைஞர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இவர் வனத்துறையில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வந்தார். ஆனைமலைத் தொடரில் நிலவும் முதல் கொரோனா மரணம் இதுதான். எனவே, ஆனைமலையிலும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அலட்சியம் அறவே கூடாது!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கிராமப் பகுதிகளையும் விட்டு வைக்காத நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மாஞ்சோலை மற்றும் சுற்றிலும் உள்ள பசுமை சூழ்ந்த தேயிலைத் தோட்டங்கள் அனைத்தையும் மூடுவதாக தேயிலைத் தோட்ட நிறுவனம் அறிவித்துவிட்டது. அதனால் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்கள், தோட்டத் தொழிலாளர்கள். எப்ப முடியும் இதெல்லாம்?

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க நெல்லை வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார். கொரோனாத் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் குழந்தைகளும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரித்தபோது, அவன் இந்தியில் பதில் சொன்னான். அமைச்சர் குழம்ப, அருகில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வான நயினார் நாகேந்திரன் அந்தச் சிறுவனிடம் இந்தியில் பேசினார். பின்னர், பீகாரைச் சேர்ந்த அந்தச் சிறுவன் சொன்னதை அமைச்சருக்கு விளக்கினார். ``இதுக்குத்தான் தேசியக் கட்சிகளைக் கூடவே வச்சிக்கணும்ங்கறது'’ என்று அமைச்சர் சொன்னதும், அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது. நல்ல டைமிங்!.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு