Published:Updated:

இன்பாக்ஸ்

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

``எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தும் விதமாக இது உருவாக்கப்படும்'' என்று அப்போதே அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இன்பாக்ஸ்

``எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தும் விதமாக இது உருவாக்கப்படும்'' என்று அப்போதே அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Published:Updated:
யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

தொலைந்துபோன இடத்தில் அனைத்தையும் மறந்து தூங்குவதுகூட சமயங்களில் சொர்க்கம்தான். இந்த வார வைரல் வீடியோவுக்குச் சொந்தக்காரர்கள் 15 யானைகள். சீனாவில் தங்கள் இருப்பிடத்திலிருந்து 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்திருக்கும் இந்த யானைகளின் சேட்டைகளை வளைத்து வளைத்துப் படம் பிடிக்கிறது இணையம். 16 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு யானைகள் திரும்பிச் சென்றுவிட, வழியிலேயே ஒரு கன்று பிறந்திருக்கலாம் என்கிறார்கள். ஒரு குடும்பமாக இந்த யானைகள் ஒரே இடத்தில் தூங்கும் காட்சி ஆசிய யானைகள் குறைந்துவரும் சூழலில், சிறு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கூட்டு உறக்கம்!

இன்பாக்ஸ்

`கே.ஜி.எஃப்' படத்திற்குப் பிறகு, ஹீரோ யஷ்ஷைவிட அதன் இயக்குநர் பிரஷாந்த் நீல் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவருகிறார். கன்னட சினிமாவில் ஒரு மாஸ் படம் எடுத்த காரணத்திற்காக, டோலிவுட் ஹீரோக்கள் அவரைக் குத்தகைக்கு எடுத்துவிட்டனர். பிரபாஸை வைத்து 'சலார்' படத்தை இயக்குகிறார். அதை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆருக்கு ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதன்பிறகு, மீண்டும் பிரபாஸுக்கு ஒரு படம் இயக்கவிருக்கிறார். இது வரலாற்றுக் கதை என்கிறார்கள். படங்களைப் படு பயங்கர மாஸாக எடுக்கும் இவர், கொரோனாத் தடுப்பூசிக்கு பயந்ததுதான் ஆச்சர்யம்! பயப்புடுறியா குமாரு...

மீண்டும் வரவிருக்கிறது ஜுராஸிக் பார்க். முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் டைனோசர்களைப் பெரிய திரையில் பார்க்கும் வியப்பு குறையவில்லை. ஜுராஸிக் பார்க் தொடரின் ஆறாவது பாகமான Jurassic World: Dominion படத்தின் சிறப்புக் காட்சியை fast & furious படத்துடன் வெளியிடவிருக்கிறார்கள். இதற்கிடையே நெட்ஃபிளிக்ஸில் Jurassic park camp cretaceous என்கிற அனிமேஷன் தொடரையும் வெளியிட்டு அசத்தினார்கள். இந்த ஜூனில் வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம், கொரோனா செய்த சூழ்ச்சியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. வெயிட்டிங்!

சல்மான் கானுக்கு `ராதே' ப்ளாப். அதனால், மீண்டும் பழைய டெக்னிக்கைக் கையிலெடுத்திருக்கிறார். ஏற்கெனவே, தன்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தபோது, பிளாக்பஸ்டரான படங்களின் ரீமேக்கில் நடித்து ஃபார்முக்கு வந்தார். அதற்கு உதாரணங்கள் `வாண்டட்', `பாடிகாட்'. இரண்டுமே விஜய் பட ரீமேக். தற்போது `ராதே' தோல்விக்குப் பிறகு, `மாஸ்டர்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம் சல்மான் பாய். லெட் மீ டெல் எ சோட்டா ஸ்டோரி...!

தமிழ் ட்வீட்களால் நம் மனதுக்கு நெருக்கமான டர்பனேட்டர் ஹர்பஜன் சிங்கின் மனைவியும் நடிகையுமான கீதா பஸ்ரா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். கொரோனா நாள்களில் கர்ப்பிணிகள் வெளியில் வாக்கிங் செல்வதும் எளிய உடற்பயிற்சிகள் செய்வதும் கடினமாக இருக்கிறது. அவர்களுக்காக எளிய யோகா பயிற்சிகளைத் தன் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் செய்துகாட்டுகிறார் கீதா. அதேசமயம், `டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது' என எச்சரிக்கவும் செய்கிறார். நன்று!

இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதில்லை. முதல்முறையாக அந்தத் தகுதியைப் பெற ஆயத்தமாகியுள்ளது அகமதாபாத். கடந்த பிப்ரவரியில் இங்கு நரேந்திர மோடி ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட்டது. கூடவே, சர்தார் படேல் விளையாட்டு வளாகத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ``எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தும் விதமாக இது உருவாக்கப்படும்'' என்று அப்போதே அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போது அகமதாபாத் நகர வளர்ச்சிக் குழுமம், `ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இன்னும் என்னென்ன வசதிகள் தேவை' என்று ஆலோசனை சொல்வதற்கு நிபுணர்களைக் கேட்டிருக்கிறது. 2032 வரை ஒலிம்பிக் நடைபெறும் இடங்கள் அநேகமாக முடிவாகிவிட்ட நிலையில் 2036 அல்லது 2040 ஒலிம்பிக் போட்டிகளைக் குறி வைக்கிறது அகமதாபாத். செம!

இன்பாக்ஸ்

சர்வதேச சர்ச்சைகளின் மன்னன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் லேட்டஸ்ட்டாகப் போட்டிருக்கும் உத்தரவு வினோதமாக உள்ளது. அந்நாட்டு மக்கள் யாரும் அயல்நாட்டு சினிமாவோ, வெப் சீரிஸோ பார்க்கக்கூடாதாம். மீறினால் சிறைத் தண்டனை முதல் மரண தண்டனை வரை நிச்சயம் என்று ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளார். `ஏற்கெனவே அநியாயத்திற்கு அந்நியப்பட்டு வாழும் மக்களுக்கு இது கொடூரத்தின் உச்சம்' என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சோதிக்காதீங்க டா!

இன்று வரை சோஷியல் மீடியாவின் டாப் ஆஃப் தி டாக் ஆக இருந்துவருவது மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்தும் அவரைச் சுற்றிய விவகாரங்களும்தான். சுஷாந்த் உயிரிழந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. அவரது மரண மர்மம் அவிழ்வதற்கு முன்பாகவே, அவர் வாழ்க்கையை மையமாக வைத்து நான்கு படங்கள் தனித்தனியாக உருவாகின்றன. அவற்றில் ‘நியாய்: தி ஜஸ்டிஸ்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி வெளியாவதாக அறிவித்ததும் சுஷாந்தின் தந்தை கிருஷ்ண கிஷோர் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். `என் மகனைக் களங்கப்படுத்த நினைக்கிறார்கள்' என்று எல்லாப் படங்களுக்கும் தடை கோரினார். ஆனால், நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. ‘நியாய்: தி ஜஸ்டிஸ்’ படத்தில் சுஷாந்த் வேடத்தில் ஜூபர் கானும், ரியா சக்கரபோர்த்தி வேடத்தில் ஸ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர். நீள்துயில் கொண்டுள்ள கலைஞனுக்கு நீதி கிடைக்கட்டும்!

பாலிவுட் நடிகர் அமீர் கான் கைதேர்ந்த நடிகர் மட்டுமல்ல, மெர்சலான செஸ் ப்ளேயரும்தான். ஆறு வயதுச் சிறுவனாக தன் பாட்டியிடம் செஸ் கற்றுக்கொண்டதாக அவரே பலமுறை கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர்கள் யாராவது செம செஸ் ப்ளேயர் என்று தெரிந்தால், அவர்களிடம் ஒரு கை பார்க்காமல் விட மாட்டாராம். கொரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக செஸ்.காம் என்ற அமைப்பு ‘செக்மேட் கோவிட்’ என்ற நிகழ்வை நடத்துகிறது. இதற்காக ஒரு போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தத்துடன் மோத உள்ளார் அமீர் கான். ஏற்கெனவே இருபுயலும் ஒன்றோடு ஒன்று சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. களத்துல ச(சி)ந்திப்போம்!

இன்பாக்ஸ்

சமீபத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸ் ஏற்படுத்திய சர்சைகளைத் தாண்டி உதய் மகேஷ் நடித்திருந்த ‘செல்லம் சார்’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளியுள்ளது. எல்லா விஷயத்தையும் மனுஷன் புட்டுப் புட்டு வைக்க, ‘அமெரிக்காவுல விக்கிப்பீடியானா இந்தியாவுல எங்க செல்லம் சார்’ என்று நெட்டிசன்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு மீம்ஸ்களால் அலப்பறை செய்கின்றனர். `வலிமை' அப்டேட் இருக்கா செல்லம் சார்?!

பிரபாஸின் அடுத்த மெகா ரிலீஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்த சூழலில் கொரோனா வந்து வேலைகளுக்குப் பூட்டு போட்டுவிட்டது. சுமார் 350 கோடி ரூபாய் மாஸ் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தை ஜூலை மாதம் தெலுங்கு, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தொடரும் கொரோனாச் சூழலால் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று படத்தின் அனைத்து உரிமைகளையும் சேர்த்து நல்ல விலைக்கு டீல் பேசினர். இருந்தாலும் படம் தியேட்டர் ரிலீஸ் என்பதில் குறியாக உள்ளதாம் தயாரிப்புத் தரப்பு. மாஸ்!

`கட்சியிலிருந்து விலகியவர்கள் மூன்று மாதங்களுக்குள் திரும்ப வரலாம்' என மேற்கு வங்காள முதல்வரானதும் அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி. பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்காத ஏமாற்றத்தில் இருந்த முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் பலரும் `தப்பு செய்துவிட்டேன்' எனத் திரும்பி வருகிறார்கள். இந்தத் தூண்டிலில் சிக்கிய பெரிய மீன், முகுல் ராய். ஒரு காலத்தில் மம்தா கட்சியில் நம்பர் 2 ஆக இருந்த இவர், சர்ச்சைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி ஓரங்கட்டப்பட்டார். பா.ஜ.க அவரை இழுத்து தேசியத் துணைத்தலைவர் பொறுப்பு கொடுத்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க பெற்ற வெற்றிகளுக்கு மூளையாக இருந்தவர் இவர்தான். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அழுத்தமான மௌனம் காத்தார். இடையில் மோடிகூட இவருக்கு போனில் பேசினார். ஆனால், சட்டென மம்தாவிடம் சரணடைந்துவிட்டார். நாரதா ஸ்டிங் ஆபரேஷன் விவகாரம், சாரதா சிட் பண்ட் வழக்கு இரண்டிலும் சிக்கியவர்களில் இவரும் ஒருவர். சி.பி.ஐ வசமிருக்கும் அந்த வழக்குகளில் இவர் பங்கு குறித்து இனி ஆராயப்படலாம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க...!

இன்பாக்ஸ்

கொரோனாவைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி கும்பல்கள் இணையம் வாயிலாகவும், சமூக வலைதளங்களின் வாயிலாகவும் பிரபலங்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்குகளைத் தொடங்கி கைவரிசை காட்டிவருகின்றனர். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலியான கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்கள் சிலரிடம் பணம்பறிக்க முயன்றனர் சிலர். அலெர்ட் ஆன ஒருவர் விஷயத்தை கலெக்டரிடமே கொண்டு சேர்க்க, இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் விஜயகார்த்திகேயன். கலெக்டருக்கே விபூதி அடிக்கப் பார்த்திருக்காய்ங்களே!

2019-ல் வெளியான ‘சாஹோ’ படத்தின் வெளியிடப்படாத ஹீரோ தீம் ஒன்றை தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். சில காரணங்களால் படத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த தீம், இணையத்தில் குறிப்பிட்ட தொகை செலுத்தி நேயர்கள் கேட்கும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகையில் 50 சதவிகிதம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதோடு கொரோனாவால் வேலையின்றி முடங்கியுள்ள இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மாஸா ஒரு பிஜிஎம் போடுங்கப்பா தலைவனுக்கு!

90ஸ் கிட்ஸ் எல்லாம் சூப்பர் மேரியோ ஆடிக்கொண்டிருந்த வயதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் புத்தகம் எழுதி வெளியிட்டு செம ஃபேமஸ் ஆகியுள்ளார். அலென் கிரெவன் என்னும் 21 வயது இளைஞர் இதுவரை ஐந்து புத்தகங்களை வெளியிட்டு அதன் விற்பனையிலும் தூள் கிளப்பிவருகிறார். இவரது முதல் புத்தகமான ‘How to talk to Girls’ கடந்த 2008-ம் ஆண்டு வெளியானது. அப்போது இவருக்கு வயது 9. வேற லெவலுங்க நீங்க!

பயாலஜிக்கல் ஈ நிறுவனத்தின் Corbevax என்ற கொரோனாத் தடுப்பூசி 30 கோடி டோஸ் வாங்குவதற்காக ரூ. 1,500 கோடி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. கோவிஷீல்டு, கோவேக்ஸினுக்கு அடுத்து இந்தியாவில் தயாராகும் மூன்றாவது தடுப்பூசி இது. இப்போது மூன்றாம் கட்டப் பரிசோதனையில் இருக்கும் இது, உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக மிகச் சிறந்த பாதுகாப்பு தருகிறதாம். வரும் செப்டம்பரில் இது அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்கிறார்கள். அதுவரை ஸ்புட்னிக் மற்றும் வெளிநாட்டுத் தடுப்பூசிகளை வாங்கி பற்றாக்குறையை சரி செய்ய முயல்கிறது அரசு. மகிழ்ச்சி!

லாக்டௌனில் 2K கிட்ஸின் ரீசன்ட் க்ரஷ், பிரக்யா நாக்ரா. (பயப்படாதீங்க... பேருதான்!) எரும சாணி யூ-ட்யூப் சேனலில் வெளியான ‘லாக்டௌன் காதல்’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமான பிரக்யாவுக்கு ரசிகர்கள் ஹார்டின்களை அள்ளி இறைத்தனர். தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதையடுத்து, விஜய் சேதுபதியின் படத்திலிருந்தும் அழைப்பு வந்துள்ளதால், என்ன ரோல் என்றுகூட கேட்காமல் செம குஷியில் ஓகே சொல்லிவிட்டாராம். அதே எரும சாணி டீமின் விஜய்தான் அருள்நிதியை வைத்து புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார். சூப்பர் ஜி... சூப்பர் ஜி!

இன்பாக்ஸ்

டோலிவுட்டில் ‘சன் ஆஃப் இந்தியா (Son of India)’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகர் மோகன் பாபு. சால்ட் & பெப்பர் லுக்கில் மாஸான சிரஞ்சீவியின் வாய்ஸ் ஓவரில் வெறித்தனம் காட்டும் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளிவருகிறது. படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா என்பது கூடுதல் ஸ்பெஷல். சாரே கொல மாஸு!