Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய், லோகேஷ் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய், லோகேஷ் கனகராஜ்

கங்கனா ரணாவத் மிகவும் எதிர்பார்த்த ‘தாக்கட்’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

இன்பாக்ஸ்

கங்கனா ரணாவத் மிகவும் எதிர்பார்த்த ‘தாக்கட்’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

Published:Updated:
விஜய், லோகேஷ் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய், லோகேஷ் கனகராஜ்
இன்பாக்ஸ்

விஜய்க்கு இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸாகும்போதே அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிவிடுகின்றன. கமல்ஹாசன் வெளிப்படையாகவே `விஜய் கால்ஷீட் கொடுத்தால் இணைந்து நடிக்கத் தயார்’ எனக் கூறியதும் வைரல் ஆனது. தற்போது விஜய் நடித்துவரும் #தளபதி 66 படத்துக்கு அடுத்து #தளபதி 67 படத்தை இயக்கவிருப்பது லோகேஷ் கனகராஜ்தான் என்பதை லோகேஷே உறுதி செய்திருக்கிறார். ‘மாஸ்டர்’ கூட்டணி மீண்டும் இணைவதால், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரையே மீண்டும் டிக் செய்திருக்கிறதாம் விஜய் தரப்பு. இதுவும் கேங்ஸ்டர்கள் பற்றிய படமாக இருக்கும் எனப் பேசப்படுகிறது. மாஸ்டர் யுனிவர்ஸ்!

இன்பாக்ஸ்

வித்தியாசமான மினியேச்சர்கள் சேகரிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர் குஷ்பு. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றால் அங்கே விதவிதமான மினியேச்சர் கைவினைப் பொருள்களைக் காணமுடியும். அத்தனையும் குஷ்புவின் கலெக்‌ஷன்ஸ். அவர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்கே பார்த்து வியந்த பொருள்களை வாங்கி வந்து ரசனையாக அலங்கரித்து வைத்திருக்கிறார். நல்ல ரசனை!

இன்பாக்ஸ்

கங்கனா ரணாவத் மிகவும் எதிர்பார்த்த ‘தாக்கட்’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ரூ.85 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம், தியேட்டரில் வெறும் ரூ.2.58 கோடி மட்டும்தான் வசூல் செய்தது. கங்கனாவின் திரைப்பட வரலாற்றில் இந்த அளவுக்குத் தோல்வியடைந்தது இதுவே முதல்முறை. வழக்கமாக டி.வி-யில் ஒளிபரப்பு செய்யும் உரிமை, ஓ.டி.டி உரிமை போன்றவற்றைப் படம் வெளியாகும் முன்பே விற்பனை செய்வது வழக்கம். ஆனால், படம் வெளியான பிறகு அதிக விலைக்கு விற்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு அதிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 5 கோடிக்கும் குறைவாகவே ஓ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்துள்ளனர். ஆசையே துன்பத்திற்குக் காரணம்!

இன்பாக்ஸ்

போகேஷ்வர் என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த கபினி யானை, இந்தக் காட்டின் அடையாளமாகவே இருந்துவந்தது. ஆசியாவின் மிக நீண்ட தந்தத்தைக் கொண்டிருந்த கம்பீரமான இந்த யானையைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யானை ஆய்வாளர்கள் பந்திப்பூர் மற்றும் கபினி காட்டைச் சுற்றி வட்டமடித்து வந்தனர். 8 அடி நீளத் தந்தம் தரையில் குத்தி நிற்கும் பிரமாண்டமான கபினி யானை சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலம். இந்த யானை வயது மூப்பால் அண்மையில் உயிரிழந்தது. 80 ஆண்டுகளாகக் கபினியைக் கட்டி ஆண்ட அந்த பிரமாண்ட யானைக்கு கர்நாடக வனத்துறையினர் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்திப் பிரியாவிடை கொடுத்தனர். போய் வா பொம்மராயா!

இன்பாக்ஸ்

அநியாயத்தைக் கண்டால் பொங்கும் மலையாள நடிகர்களில் முன்னிலை வகிப்பவர் ஹரீஷ் பேரடி. மலையாள சினிமா நடிகைகள் பாலியல் வன்கொடுமையை சகிக்க முடியாமல், “கிரிமினல்களுக்குப் பாதுகாப்பாகவும், பெண்களுக்கு எதிராகவும் செயல்படும் அம்மா என்ற மலையாள நடிகர்கள் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்குங்கள்” என கடந்த மே 4-ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தார். இப்போது அம்மா சங்கத்திலிருந்து ஹரீஷ் பேரடியை நீக்கியதாகச் அறிவிக்கப்பட்டதும், அதை ஹரீஷ் பேரடி மத்தாப்பு ஏந்திக் கொண்டாடினார். ‘முதுகெலும்பு உள்ளவர்’ என பல ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள். துணிச்சல் கலைஞன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இன்று நீங்கள் குரோம், ஃபயர்ஃபாக்ஸ் எனப் பல பிரௌசர்கள் பயன்படுத்தலாம். ஆனால், பிரௌசர் உலகின் முதல் ராஜா இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான். 1995-ல் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்திய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைச் சுற்றியே அன்றைய இணையம் சுழன்றது. காலப்போக்கில் மற்ற பிரௌசர்களைப் பதிவிறக்க மட்டும் பயன்படும் பிரௌசராக மாறியது. ‘இது வெடிகுண்டு இல்ல, வெறும் குண்டு’ என முடிவெடுத்து மொத்தமாக அதற்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். ஜூன் 15 தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் கடைசி நாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் காலத்தின் இணைய நினைவுகளை மீட்டு அதற்குப் பிரியாவிடை கொடுத்துவருகின்றனர் 90ஸ் கிட்ஸ். கடந்த வாரம் இணையம் எங்கும் அதுபற்றிய மீம்களையும் வீடியோக்களையும் பார்க்க முடிந்தது! நாஸ்டாலஜியா!

நாகை மாவட்டம் கோடியக்காடு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நீலமேகம், அவரின் மனைவி ஆசிரியர் கவிதா பணியாற்றுகின்றனர். பள்ளி திறக்கப்பட்ட நாளில் இருவரும் இணைந்து பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை அகற்றி, வகுப்பறைகளைக் கழுவி சுத்தம் செய்தனர். கழிவறைகளையும் தயக்கமின்றிக் கழுவிவிட்டனர். ‘`நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியை எங்கள் இல்லம் போல் நினைத்து சுத்தம் செய்கிறோம். இந்தப் பணி எங்களுக்கு மனநிறைவு அளிக்கிறது’’ என்கிறார்கள் ஆசிரியர் தம்பதியினர். மனசும் சுத்தம்!

இன்பாக்ஸ்

ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து தடதடத்துக் கொண்டிருக்கிறது ஊட்டி மலைரயில். இது தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பிரேக் மென் பிரிவு ஆண்களுக்கானதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்றை பிரேக் செய்து முதல் பிரேக் வுமனாக மலை ரயில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சிவஜோதி. 8 ஆண்டுகளாக மலை ரயில் பணிமனையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இவர் தற்போது புதுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள்!

இன்பாக்ஸ்

தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைத் தவிர மற்ற இடங்களில் சர்வதேச, ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதில்லை. கோவையிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். சில ஆண்டுகளாக எஸ்.என்.ஆர் கல்லூரி வளாகத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் சர்வதேசத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. நடப்பு டி.என்.பி.எல் சீசனில் முதல் முறையாக கோவையில் சில போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டியும் இங்குதான் நடக்கவுள்ளது. மைதானத்தை இன்னும் மேம்படுத்தி ஐ.பி.எல் போட்டியை நடத்துவதுதான் லட்சியம் என்கின்றனர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள். அடிச்சு ஆடுங்க பாய்ஸ்..!

இன்பாக்ஸ்

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். போதிய வகுப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்த வீரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும் துபாய் தொழிலதிபருமான அருள்சூசை என்பவர் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ. 20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி பலரும் அருள் சூசையை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கல்விக்கொடை!

இன்பாக்ஸ்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ராகேஷ். மன்னார்குடி அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த மாணவர் தொல்காப்பியன். எளிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இருவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டியில் கலந்து கொண்டனர். ராகேஷ் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், தொல்காப்பியன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தங்களது இலக்கு என்கிறார்கள். தங்கமகன்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism