Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

கோவையின் ஆச்சர்யங்களில் ஒன்று ‘சிறு நறுவிலி’ தாவரம். இது கோவையில் மட்டுமே வளரும் அபூர்வ ரகம்

இன்பாக்ஸ்

கோவையின் ஆச்சர்யங்களில் ஒன்று ‘சிறு நறுவிலி’ தாவரம். இது கோவையில் மட்டுமே வளரும் அபூர்வ ரகம்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி என டோலிவுட் க்ரஷ்களின் வரிசையில் லேட்டஸ்ட், ஸ்ரீலீலா. இவரும் கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். கன்னடப் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கும் இவரை, தெலுங்கு சினிமா கைப்பற்றிக்கொண்டது. ரவிதேஜாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். பிரபாஸின் அடுத்த பட நாயகிகளுள் இவரும் ஒருவர். ஸ்ரீலீலாவைக் கொண்டாடத் தயாராகிவிட்டது, டோலிவுட். நெக்ஸ்ட் கோலிவுட்தான்..!

இதுவரை தான் மேடையில் பேசியவற்றையெல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார் நடிகர் சிவகுமார். பொதுவான மேடைப் பேச்சு, மகாபாரதம் பற்றிய பேச்சுகள் எனப் பிரித்து முறைப்படுத்தி அவற்றை யூ டியூபில் வெளியிட்டிருக்கிறார். சூர்யா தொகுத்து வெளியிட்ட இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் சிவகுமார்.

ஹெச்.வினோத் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்குப் பிறகு அதன் இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் நல்ல ரேப்போவில் உள்ளார். அதன்பிறகு ‘நேர் கொண்ட பார்வை', ‘வலிமை'யில் யுவனைப் பயன்படுத்தியிருந்தாலும், வினோத்தும் ஜிப்ரானும் அவ்வப்போது சந்தித்து மணிக்கணக்காகப் பேசிவந்தனர். இந்த முறை அஜித் படத்துக்கு ஜிப்ரான் என வினோத் முடிவு செய்துவிட்டார். அஜித்தும் ‘‘டைரக்டருக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே'’ எனச் சொல்லிவிட்டாராம். இது ஜிப்ரான் சீசன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சமீபத்தில் மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைத் தொகுத்து 516 பக்கங்கள் கொண்ட புத்தகமாக்கியதுடன், அதை இலவசமாகவே வழங்குகிறது ‘தமிழினி' பதிப்பகம். ‘மெர்சியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’, ‘மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’, ‘சம்மனசுக்காடு’, ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ ஆகிய தொகுப்புகளில் உள்ள கவிதைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழினி' ஸ்டாலில் கிடைக்கிறது.

இயக்குநர் விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாகிறார். கனிஷ்கா, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய மூவரும் திக் ஃப்ரெண்ட்ஸ். நேரம் அமையும்போது சந்தித்துப் பேசி மகிழ்கின்றனர். புது வசந்தர்கள்!

கோவையின் ஆச்சர்யங்களில் ஒன்று ‘சிறு நறுவிலி’ தாவரம். இது கோவையில் மட்டுமே வளரும் அபூர்வ ரகம். வெள்ளைநிறப் பூக்கள், ஆரஞ்சு நிறத்தில் பழங்களைக் கொடுக்கும் இந்தத் தாவரம் ஒரு காலத்தில் கோவையின் அடையாளமாக இருந்தது. இதை ‘கோவை மன்ஜக்’ என்றும் அழைப்பார்கள். கான்க்ரீட் காடாக மாறிவரும் கோவையில் சிறு நறுவிலி காணாமல்போய்விட்டது. 2018-ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி 10 தாவரங்கள்தான் இருந்திருக்கின்றன. இந்நிலையில், கோவை வன மரபியல் வனப்பெருக்கு நிறுவனம், வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிங்காநல்லூர் குளக்கரையில் சிறு நறுவிலி நாற்றுகளை நட்டுள்ளனர். சிறு நறுவிலி குறுங்காடாகட்டும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அமிதாப்பச்சன், சல்மான் கான், கரண் ஜோகர் போன்ற பலரும் டி.வி ரியாலிட்டி ஷோ நடத்தியுள்ளனர். சர்ச்சைகளுக்குப் பெயர்போன கங்கனா ரனாவத்தும் இப்போது களமிறங்கிவிட்டார். ‘லாக்கப்' என்ற அந்த ரியாலிட்டி ஷோ வரும் 27-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது. 16 போட்டியாளர்கள். அவர்கள்மீது உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறைக்குள் விசாரணை நடத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்படும். ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கிறார். ஒரே சிறையில் 16 பேரை அடைக்க இருக்கும் இந்நிகழ்ச்சி குறித்து கங்கனா, ‘‘லாக்கப்பில் என் சிறந்த நண்பர்களான கரண் ஜோகர், அமீர் கான் ஆகியோரை அடைக்க விரும்புகிறேன்'' என்கிறார். தலைவியாவே வாழ்றாங்க!

ஜே.ஆர்.ஆர்.டோல்கின்னின் ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்' புத்தகம் படத்தொடராக மாறி உலகளாவிய மார்க்கெட்டை உருவாக்கியது. அதுவரை ஃபேன்டஸி படங்களைப் பெரிதும் கண்டுகொள்ளாத ஆஸ்கரால்கூட, பீட்டர் ஜாக்சன் இயக்கிய இக்காவியங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஆறு படங்கள் முடிந்த நிலையில், தற்போது இதே ‘மிடில் எர்த்' சாகாவின் பிற முன்கதைகளைச் சொல்ல வருகிறது அமேசான் பிரைம் வீடியோவின் ‘தி ரிங்க்ஸ் ஆஃப் பவர்' வெப் சீரிஸ். ஹாபிட் கதைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ‘ரிங்க்ஸ் ஆஃப் பவர்' எப்படி உருவானது, டார்க் லார்டு சாவ்ரான் எப்படி உருவானார் போன்ற முக்கிய நிகழ்வுகளை இத்தொடர் பதிவு செய்யும். சமீபத்தில் வெளியான இதன் முதல் டீசர், வெப் சீரிஸ் தயாரிப்பு புதிய உச்சம் தொட்டிருப்பதைப் பறைசாற்றுகிறது. செப்டம்பர் 2-ம் தேதி ஓ.டி.டி-யில் வெளியாகிறது ‘தி ரிங்க்ஸ் ஆஃப் பவர்.' LOTR ரிட்டன்ஸ்

‘வெந்து தணிந்தது காடு', ‘கொரோனா குமார்', ‘பத்து தல' என சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் இருக்கின்றன. இவற்றை முடித்துவிட்டு, ‘ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் அஷ்வத் இயக்கத்தில் ‘ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் வெளியாகவிருக்கிறது. பின், இந்தி ரீமேக். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் சிம்புவை இயக்குகிறார், அஷ்வத் மாரிமுத்து. ஃப்ரஷ் காம்போ..!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் செய்தார். ‘‘இவ்வளவு நாள் ஊருக்குள்ள வராத மாஃபா, இப்ப ஏன் வர்றார்? திரும்பவும் நான் ஜெயிலுக்குள்ள போயிருவேன். மாவட்டத்தைக் கைப்பற்றலாமான்னு பார்க்கிறாரா? அவரு பின்னால யாராவது போனா கட்சியில பதவி இருக்காது’’ என எச்சரித்துள்ளார் ராஜேந்திரபாலாஜி. அதை மீறியும் மாஃபாவுடன் கட்சியினர் 12 பேர் சென்றது தனிக்கதை. பாண்டியன் நகருக்குள் சென்றபோது, ஒரு முதியவர் கட்டட வேலைக்காக சட்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த மாஃபா, ‘‘வயசான காலத்துல உழைக்கறீங்க. மண்வெட்டிய தாங்க, நான் அள்ளித் தரேன்’’ எனச் சொல்லி மண்வெட்டியால் மண்ணை அள்ளி வழக்கம்போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ‘‘அண்ணாச்சி அள்ளிக் கொடுத்த மண்ணு. தூரக் கொட்டீராதீங்க’’ எனக் கட்சியினர் சொன்னதற்கு, ‘‘இந்த மண்ணை பத்திரப்படுத்தி நான் என்னய்யா செய்யப்போறேன்’’ என அப்பாவியாக முதியவர் கேட்டார். தர்மசங்கடத்துடன் சிரித்தபடி நகர்ந்தனர் கட்சிக்காரர்கள். அளவா நடிங்க!

எந்த ஊர், எந்த திசையில், எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில், சாலையோரங்களில் மைல்கல் மற்றும் திசைகாட்டும் பலகை வைப்பது வழக்கம். ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிகாடில் பெட்ரோல் பங்க் மற்றும் டீக்கடை நடத்திவரும் மாமல்லன் என்பவர், எந்த நாடு எந்த திசையில் எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், ஏரோ மார்க் வடிவில் பலகை தயார் செய்து, அதில் நாடுகளின் பெயர்களை எழுதி வைத்துள்ளார். உள்ளூரில் வசிப்பவர்கள் நாடுகளின் திசையை அறிந்துகொள்ளவும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்கள் நாட்டின் திசையைத் தெரிந்துகொள்ளவும் இது உதவும் என்கிறார். பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்பவர்களும் இதை ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

மம்மூட்டியின் அடுத்த படம், ‘பீஷ்ம பர்வம்.' இதன் டீசர் வெளியான 24 மணி நேரத்தில், 2.95 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்' படத்துக்கு அடுத்து அதிக பார்வையாளர்கள் கொண்ட டீசர் என்ற பெருமையை பீஷ்ம பர்வம் பெற்றுள்ளது. வழக்கமாக அவருக்கு மெகா ஸ்டார் மம்மூட்டி என டைட்டிலில் போடுவார்கள். ஆனால் இதில், ‘பத்மஸ்ரீ மம்மூட்டி' என டைட்டில் கார்டு போட்டது சர்ச்சையாகியுள்ளது. பத்மஸ்ரீ பட்டத்தை வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது என விதி இருக்கிறது. தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு, பிரமானந்தம் ஆகியோர் இதேபோல சர்ச்சையில் சிக்கி நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகினர். மம்மூட்டியும் அப்படிச் சிக்குவாரோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாதிருந்த நீலகிரி மாவட்ட மக்கள், அவசரத் தேவைகளுக்குக் கோவை, கேரளா, மைசூரு போன்ற பகுதிகளுக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்து வந்தனர். இந்த மலை மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற 30 ஆண்டுக்காலக் கனவு பெரும் போராட்டத்திற்குப் பின் தற்போது சாத்தியமாகியிருக்கிறது. இதை சாத்தியமாக்கியது நாங்கள்தான் என பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போட்டி போட்டு உரிமை கொண்டாடிவருகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாத நீலகிரி மக்கள், மருத்துவக் கல்லூரியின் முதல் பேட்ச் மாணவர்களுக்குப் பாரம்பரிய இசை, நடனம் என மலை அதிர உற்சாக வரவேற்பு அளித்து முதல் நாள் வகுப்புக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவத்துக்கு ஏங்கித் தவித்த இந்த மக்கள், மருத்துவ மாணவர்களுக்குத் தங்களின் குல தெய்வத்திற்கு ஈடாக மரியாதை கொடுத்தது மருத்துவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது எங்க மருத்துவமனை!

துருவ் விக்ரமும் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனும் மிக நெருங்கிய நண்பர்கள். வாரத்தில் இரண்டு நாள்களாவது அமீனின் இசைக்கூடத்தில் துருவ்வைப் பார்க்கலாம். படிக்கும்போது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism