Published:Updated:

இன்பாக்ஸ்

சான்யா மல்ஹோத்ரா
பிரீமியம் ஸ்டோரி
சான்யா மல்ஹோத்ரா

வெகுநாளைக்குப் பிறகு சசிகுமார் இந்த வருடம் இயக்கப்போகும் படத்திற்கான கதையை அவர்தான் தரப்போகிறார் என்கிறார்கள்.

இன்பாக்ஸ்

வெகுநாளைக்குப் பிறகு சசிகுமார் இந்த வருடம் இயக்கப்போகும் படத்திற்கான கதையை அவர்தான் தரப்போகிறார் என்கிறார்கள்.

Published:Updated:
சான்யா மல்ஹோத்ரா
பிரீமியம் ஸ்டோரி
சான்யா மல்ஹோத்ரா

வீட்டில் இருந்தால் மகள் திவ்யா ஷாஷாவை டியூஷன், மியூசிக் கிளாஸ் கூட்டிப்போய் விடுகிறார் விஜய். காரை எடுத்துப் போகாமல் சிம்பிளாக பைக்கிலேயே போய் வந்துவிடுகிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் சிக்னலில் உங்களோடு நிற்பவர் விஜய்யாகவும் இருக்கலாம். தெறி பேபி!

மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் லைகா நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பாவும் அம்மாவும் சொன்னதால், இப்போது சென்னைக்கு வந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தை நிர்வகிக்கப்போகிறார். தத்துவத்தில் டாக்டரேட் வாங்கியவர் நந்தன். மணியின் செல்வன்!

`கடைசி விவசாயி'க்குப் பிறகு அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் மணிகண்டன். கதை விவாதம் உசிலம்பட்டியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றுவருகிறது. இன்னொரு பக்கம் படமும் தயாரிக்கிறார். சித்தார்த்தை வைத்து `எனக்குள் ஒருவன்' படத்தை இயக்கிய பிரசாத் ராமர் அதை இயக்குகிறார். அந்த இயக்குநரும் இப்போது அதே ரிசார்ட்டில்தான் கதை விவாதத்தில் உள்ளார். கலக்குங்க!

சசிகுமாரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். வெகுநாளைக்குப் பிறகு சசிகுமார் இந்த வருடம் இயக்கப்போகும் படத்திற்கான கதையை அவர்தான் தரப்போகிறார் என்கிறார்கள். இதற்கு முன்னால் `திருடன் மணியம் பிள்ளை' கதையைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் சசி. அதன் சில பகுதிகள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வந்துவிட்டதால் அதைத் தவிர்த்திருக்கிறார். சரித்திரப்படமா?

ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ட்விங்கிள் கண்ணா, தபு, கத்ரீனா கைஃப், அலியா பட், கியாரா அத்வானி போன்ற பாலிவுட் நடிகைகளைத் தென்னிந்திய சினிமாவுக்குள் அழைத்து வருவது டோலிவுட்தான். பர்னீதி சோப்ராவும் இந்தப் பட்டியலில் இணைகிறார். `அகண்டா' ப்ளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுத்த இயக்குநர் பொயப்படி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தனேனி நடிக்கும் படத்தின் ஹீரோயினாக நடிக்க பர்னீதி சோப்ராவிடம் பேசியிருக்கிறார்கள். ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அரைகுறை ஆடையோடு நகரை வலம் வந்திருக்கிறார். அந்த இளம்பெண்ணுக்குப் பாதுகாப்பான சூழலும் இல்லை. அதோடு, சரியாகச் சாப்பிடாமல், எந்நேரமும் பிதற்றிக்கொண்டே இருந்த அவரைக் கண்ட சுந்தர் என்ற இளைஞர், அவரை மீட்டு நலமாக்க நினைத்திருக்கிறார். தன் நண்பர் முருகானந்தத்திடம் சொல்ல, இருவரும் சேர்ந்து சாந்திவனம் என்ற மனநலக் காப்பகத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் வந்து அந்தப் பெண்ணை மீட்டு, முதல்கட்ட சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்தபிறகு தங்கள் காப்பகத்தில் வைத்து அவரைப் பராமரிப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம். நல்ல மனங்கள் வாழ்க!

இன்பாக்ஸ்

ஊட்டியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ். எளிய மக்களுடன் நெருங்கிப் பழகும் இவரை ஊட்டி நகரின் தெருமுனை டீக்கடைகளில் அடிக்கடி பார்க்கலாம். அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆட்சியில் சட்டமன்றத்துக்கு ஆட்டோவில் சென்று வைரலானார். தற்போது ராகுல் காந்தி சென்னை வருகையின்போது பைக்கில் லிப்ட் கேட்டுப் பயணித்து மீண்டும் வைரலாகியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் `உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த ராகுல் காந்தியை வரவேற்க ஏர்போர்ட்டிற்கு காரில் சென்றிருக்கிறார் கணேஷ். அங்கிருந்து கிளம்பும்போது பயங்கர டிராஃபிக் ஜாம் ஏற்பட்டதால், இவரது காரை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத கணேஷ், காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் பைக்கில் லிப்ட் கேட்டு சத்தியமூர்த்தி பவன் சென்றிருக்கிறார். பைக்கில் பயணித்த இவரது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஊட்டின்னாலே கூல்தானே!

`டங்கல்' படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் சான்யா மல்ஹோத்ரா. சிறிய வேடம் என்றாலும் சிறப்பாக நடிப்பவர் என்கிற பெயரை சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டார். தற்போது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே மாலத்தீவில்தான் குவிந்துவருகிறது. மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து, மாலத்தீவின் புதிய விருந்தாளி சான்யா மல்ஹோத்ராதான். கறுப்பு நிற பிகினியில் சான்யா இன்ஸ்டாவில் பகிர்ந்த படங்கள் எல்லாமே செம வைரல். அடுத்து அறிமுக இயக்குநர் யஷோவர்தன் மிஷ்ரா படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் சான்யா. மாலத்தீவு... மஜா தீவு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

எழுத்தாளரும் விழுப்புரம் எம்.பி-யுமான ரவிக்குமாரின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு `ரவிக்குமார் 60' என்ற பெயரில் முழுநாள் நிகழ்ச்சியை விழுப்புரம் பகுதித் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தின. வித்தியாசமாக இதை விழுப்புரம் அருகே கஞ்சனூர் கிராமத்தில் மாந்தோப்பு ஒன்றில் நடத்தினர். எழுத்தாளர்கள் இமையம், பிரதிபா ஜெயச்சந்திரன், கண்டராதித்தன், அ.ராமசாமி, பேராசிரியர் கல்யாணி, கவிஞர் பழமலய், அறிவுமதி போன்றோர் இதில் பேசினர். இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, அரசியல் கட்டுரைகள் என எல்லாம் பற்றிய உரையாடலாக இது இருந்தது. இந்த ஆண்டில் தனது 60 நூல்களை வெளியிடும் திட்டமும் வைத்திருக்கிறார் ரவிக்குமார். உரையாடல் தொடர்கிறது!

இன்பாக்ஸ்

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியைக் கைவிட்டனர். தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும், பல மாணவர்கள் வறுமை காரணமாக மீண்டும் கல்வியைத் தொடராமல் உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் சித்ராசெல்வி, அரசுப் பள்ளிகளில் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்குச் செல்கிறார். அப்போது, இடைநின்ற மாணவர்களின் பட்டியலைப் பெற்று, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி மீண்டும் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார். கோடாங்கிநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளியில் 9 குழந்தைகளையும், ஆத்தூர் அரசுப் பள்ளியில் 4 மாணவர்களையும் பள்ளிக்கு மீண்டும் செல்ல வைத்துள்ளார். இதனால் சித்ராசெல்விக்குப் பாராட்டு குவிந்துவருகிறது. கற்கை நன்றே!

இன்பாக்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள பெரம்பூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வருவது வழக்கம். நத்தைக்கொத்தி நாரை, கறுப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளைக் கொக்குகள் மற்றும் நீர்க் காக்கைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து, இங்குள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. குஞ்சுகள் வளர்ந்து பறக்க ஆரம்பித்தவுடன் அவற்றைக் கூட்டிக்கொண்டு தாயகம் சென்றுவிடுகின்றன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களிலும், நடுவில் உள்ள மணல்திட்டுகளிலும் இரைதேட பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி. தானாச் சேர்ந்த கூட்டம்!

இன்பாக்ஸ்

ஹீரோயின்களுக்கு இருப்பது போல், பாடகி ஜோனிடா காந்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. `மென்டல் மனதில்', `மெய் நிகரா', `அழகியே' எனத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நிறைய பாடி வந்த இவர், சமீபமாக அனிருத் இசையில் பல பாடல்கள் பாடுகிறார். `டாக்டர்' படத்தின் `செல்லம்மா', `பீஸ்ட்' படத்தின் `அரபிக் குத்து' ஆகியவை சென்சேஷனல் ஹிட். இப்போது, விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் `வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார். ஹலமதி ஹபீபோ...

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான பர்ஹான் அக்தர், தன் காதலி ஷிபானி பண்டேகரைத் திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் முடிந்து ஒரு மாதம்கூட முடியவில்லை. சில நாள்களுக்கு முன்பு இவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்குத் திருமண விருந்து கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். அவற்றைப் பார்த்த பலரும் ஷிபானி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். ஷிவானி தங்கள் வீட்டு பாத்ரூமில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு, `நான் கர்ப்பமாக இல்லை' என்று சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பெர்சனல் பக்கங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism