Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி ஷெட்டி

ஒருகாலத்தில் மலையாள சினிமாவில் கனவு நாயகிகளாக வலம்வந்த நடிகைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வரிசையாக நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்பாக்ஸ்

ஒருகாலத்தில் மலையாள சினிமாவில் கனவு நாயகிகளாக வலம்வந்த நடிகைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வரிசையாக நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

Published:Updated:
கீர்த்தி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி ஷெட்டி

அமெரிக்கா போயிருக்கிறார் கமல்ஹாசன். இன்னும் இரண்டு வாரமாவது அங்கிருப்பார் என்கிறார்கள். மருதநாயகம் படத்தை மறுபடியும் ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் குறித்துத் தீவிரமாக சிந்தித்துவருகிற கமல், அதற்கான பெரும் நிதியைத் திரட்டுவது சம்பந்தமாகவும் அங்கிருந்தபடியே நண்பர்களிடம் பேசிவருகிறார். எல்லா வேலைகளுக்கு மத்தியிலும் ட்விட்டரில் அரசியல் நிகழ்வுகளுக்குப் பதிலடி தருவதிலும் முனைப்பு காட்டுகிறார். சென்னை வருவதற்குள் `விக்ரம்’ அவர் பார்க்க ரெடியாகிவிடும் என்கிறார்கள்.

ஃபேஷனில் ஃபியூஷன் கலந்து கலக்கும் பாப் பாடகி ரிஹானா, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதனால் என்ன... ஃபேஷன் உலகிற்கு தடைகளும் எல்லைகளும் ஏது என `கர்ப்பகால க்ளாமர் ஆடைகள்' வடிவமைப்பில் பின்னுகிறார். `தாய்மை சுமந்த வயிற்றை ஏன் உலகிற்கு மறைக்கணும்? அதோடு இப்படித்தான் ஆடையணிய வேண்டும் என ஏன் மற்றவர்கள் என்னைப் பார்த்துச் சொல்லணும்?' எனக் கேள்விகள் கேட்டு, புதுவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

சிம்புவின் வாழ்க்கையை `மாநாடு' படத்திற்கு முன், `மாநாடு' படத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம் போல. முன்பெல்லாம் சிம்புதான் கதை கேட்பார். இப்போது அவர் நண்பர்கள் குழு கேட்கிறது. முன்பு சிம்புவின் வரவு செலவுகளை அம்மா உஷா கவனித்து வந்தார். அவர் காட்டிய கறாரால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன. இப்போது சிம்புவே வரவுசெலவுகளைக் கையாளத் தொடங்கிவிட்டார். `அப்படியே ஹோட்டலையும் காலி செய்துவிட்டு சிம்பு வீட்டில் தங்கினால் இருக்கிற சின்னச் சின்ன சங்கடங்களும் தீர்ந்துவிடும்' என்கிறார்கள் நலன் விரும்பிகள்.

நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு யூனிட் அமைதியாக இருக்கும். காரணம், சலசலவென்று பேசிக்கொண்டிருந்தால் நயன் டென்ஷனாகி `சைலன்ஸ்' என்று கத்திவிடுவாராம். இப்போது ஆன்மிகம் பக்கம் நாட்டம் சென்றதால் கோபம் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். எப்போதும் புன்னகையோடு வலம்வரும் நயனை ஆச்சர்யத்தோடு பார்க்கிறதாம் யூனிட். அதுமட்டுமல்ல, சக நடிகர்களின் நடிப்பு பிடித்துவிட்டால் பரிசளித்து அசத்துவது நயனின் சமீபத்திய பழக்கமாகியிருக்கிறது.

ஒருகாலத்தில் மலையாள சினிமாவில் கனவு நாயகிகளாக வலம்வந்த நடிகைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வரிசையாக நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள். திருமணத்துக்குப் பின் ஒதுங்கியிருந்த நஸ்ரியா நசீம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிக்க வந்தார். அடுத்து மீரா ஜாஸ்மினும் வந்தார். இப்போது `என்றெ காக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' படம் மூலம் பாவனாவும் திரைவெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.

புத்தகத் திருவிழாக்கள் இயக்கமாக மாறிவிட்ட சூழலில், நெல்லையில் நடக்கும் பொருநை புத்தகத் திருவிழாவில் `உலக சாதனைக்கான புத்தக வாசிப்பு' என்ற பெயரில் இதுவரையில்லாத ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். அதற்கான அரங்கில் 24 மணி நேரமும் வாசகர்கள் அமர்ந்து தாங்கள் விரும்பும் புத்தகங்களைப் பெற்று வாசிக்கலாம். அரங்குகளில் இருந்து புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற்காக தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கென முன்பதிவும் செய்யப்படுகிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த அரங்கில் அமர்ந்து வாசிக்கிறார்கள். மார்ச் 27-ம் தேதி இந்த வாசிப்புத் திருவிழா நிறைவுறுகிறது.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘உப்பென்னா’ நாயகி கீர்த்தி ஷெட்டியைக் கோலிவுட்டில் அறிமுகம் செய்யப்போகும் இயக்குநர் யார் என்ற கேள்வி கொஞ்ச காலமாகவே இருந்தது. இப்போது அதற்கான பதிலாகியிருக்கிறார், இயக்குநர் பாலா. சூர்யாவை வைத்து அவர் இயக்கவுள்ள படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆனால், சூர்யாவுக்கு இவர் ஜோடி இல்லையாம். மீனவர்கள் பற்றிய கதை. முதல் ஷெட்யூல் ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது.

‘வலிமை’க்குப் பிறகு, அஜித் நடிக்கும் 61-வது படத்தை வினோத் இயக்குகிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் செய்தி இணையத்தில் கசிந்துவிட்டது. அதையடுத்து லைகா நிறுவனம் அந்தப் படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துக்கு செம ஜாலியான கதாபாத்திரமாம். அவரின் 63-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிவா இயக்கவிருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கிய கதாபாத்திரம் என்கிறார்கள்.

இன்பாக்ஸ்

அமீர்கான் ஸ்பெயின் படம் ஒன்றைத் தழுவி எடுக்கப்படும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பாரா ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்படும் அந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடமும் பேச்சு நடக்கிறது. இதற்கு முன்பு அமீர்கானும், அனுஷ்கா சர்மாவும் 2014-ம் ஆண்டு பி.கே படத்தில் சேர்ந்து நடித்தார்கள். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து களமிறங்குகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்டூர், அங்குசகிரி, கீழ்பையூர், ஐகுந்தம் உள்ளிட்ட இடங்களில் மிகப் பழைமையான செங்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. பானைகளைப் போன்றே செங்கற்களும் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதால் தமிழகத் தொல்லியல் ஆய்வில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆம்பள்ளி அருகேயுள்ள குட்டூர் சிவன்திட்டு என்ற இடத்தில் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செங்கற்கள் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்பாக்ஸ்

வலிமைக்குக் கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் ஹெச்.வினோத் ஆரம்பத்தில் கொஞ்சம் அப்செட் என்றாலும், அஜித்தின் ஆறுதலான வார்த்தைகள் அவருக்குத் தெம்பூட்டியிருக்கின்றன. ‘படம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. பொறுப்பான குடிமகனா வலிமையில நடிச்சதற்காக பெருமைப்படுறேன். கூடுதலா குடும்பங்களில் நல்ல ரீச் ஆகியிருக்கு. அது போதும். AK 61 முழுக்க முழுக்க உங்க பேட்டை. நீங்க என்னை எப்படி வேணும்னாலும் மோல்டு பண்ணிக்கோங்க வினோத்! ஐ ஆம் ரெடி’ எனச் சொல்லியிருக்கிறார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு சமூக விரோதியாகவே மாறிப்போகும் ஒரு சைக்கோ டானின் கதை AK61 எனக் கிசுகிசுக்கிறது வினோத் வட்டாரம்!

கடந்த சனிக்கிழமை பிறந்த தினம் கொண்டாடிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் பிறந்தநாளில் புது உறுதிமொழி எடுத்திருக்கிறார். ‘இனி அவசர அவசரமாக ஸ்கிரிப்ட் எழுதாமல், குறைந்தது ஒரு வருடமாவது திரைக்கதை எழுதச் செலவிடப்போகிறாராம். திரைக்கதையைப் பக்காவாக முடித்தபிறகே ஷூட்டிங்காம். சமீபத்திய படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் இந்த அதிரடி முடிவு!

நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரு சாதனை மருத்துவ உலகை விழிவிரிய வைத்திருக்கிறது. கண்புரை, விழித்திரை அறுவை சிகிச்சைக்கும் கண் பரிசோதனைக்கும் பல அதிநவீனக் கருவிகள் இந்த மருத்துவமனையில் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு மருத்துவர்கள் ஹரிஹர சங்கர், சத்தியநாராயணன் உள்ளிட்ட குழுவினர் 3 மணி நேரத்தில் 30 பேருக்கு பாதுகாப்பான கண்புரை அறுவை சிகிச்சை அளித்து அசத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சமீப மாற்றங்களில் முக்கியமானது, ஆட்சியர்கள் மாணவர்கள் மீது காட்டும் அக்கறை. பல மாவட்டங்களில் `காபி வித் கலெக்டர்' என்ற பெயரில் மாணவர்களை மாவட்ட ஆட்சியர்கள் சந்தித்து உற்சாகப்படுத்திவருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு இரண்டு மாணவர்கள் வீதம் 30 மாணவர்களைத் தேர்வு செய்து தனது முகாம் அலுவலகத்தில் சந்தித்தார் ஆட்சியர் மோகன். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக உரையாடி அவர்களின் குடும்பச்சூழலை அறிந்துகொண்ட ஆட்சியர், தன் கதையை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார். கூடவே அனைவருக்கும் பேனா பரிசளிக்க, மாணவர்கள் உற்சாகமடைந்தார்கள்.

பா.ஜ.க ராஜ்ய சபை எம்.பி-யான நடிகர் சுரேஷ் கோபி ராஜ்யசபாவில் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. ``கேரளாவில் ஆதிவாசிகள் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தவில்லை. உடனே கேரளாவுக்கு ட்ரைபல் கமிஷனை அனுப்பி விசாரிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் சுரேஷ் கோபியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவுக்கு வருகிறது. இவ்வளவு காலம் அமைதியாக இருந்த கோபி, இப்போது ஆவேசப்படுவது மீண்டும் பதவியைப் பிடிக்கத்தான் என்று கிசுகிசுக்கிறார்கள் சேட்டன்கள். .

தன் ‘பீயிங் ஹியூமன்’ தொண்டு நிறுவனம் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவிவந்த சல்மான்கான், பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகளின் கல்விமீது இப்போது கவனத்தைத் திருப்பியிருக்கிறார். ‘பீயிங் ஹியூமன்’ தன்னார்வலர்கள் மகாராஷ்டிராவின் பர்பனி, பால்கர், ஔரங்காபாத் மாவட்டங்களில் பள்ளிவாரியாகச் சென்று, தேவைப்படும் பொருள்களை வாங்கிக்கொடுப்பதோடு மாணவர்களுக்கும் உதவிவருகிறார்கள். இந்தப் பணியில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேயும் சல்மானுடன் கைகோத்திருக்கிறார் என்பது கவனிக்கப்படுகிறது.