Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

தன் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஓய்வுபெறுகிறார்.

இன்பாக்ஸ்

தன் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஓய்வுபெறுகிறார்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* தனது சுயசரிதை நூலான Unfinished பெரும் வரவேற்பு பெற்றதில், செம குஷியில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதை ஆடியோ புத்தகமாகவும் தன் குரலிலேயே வெளியிட்டிருக்கிறார். ‘தமிழன்’ பட அனுபவம் பற்றியும் இதில் பேசியிருக்கிறார். ‘‘ஷூட்டிங் முடிந்ததும் 1 மணி நேரத்துக்கு மேல் அமைதியாக நின்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார் விஜய். ரசிகர்களை மதிப்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தமிழ் தெரியாது என்றாலும், தமிழ்நாடு, தமிழ்ப் பண்பாடு போன்றவற்றை எல்லாம் நான் புரிந்துகொண்டேன்’’ என அந்த ஆடியோ குறிப்பில் பேசியிருந்தார். ஆனால், அதன் மிகப்பெரிய ட்விஸ்ட், அவருக்கு விஜய்யுடன் நடித்த படத்தின் பெயரே தெரியவில்லை என்பதுதான். தமிழ், தமிழ்ப் பண்பாடு என்பதையெல்லாம் சரியாக உச்சரிக்கும் பிரியங்கா, படத்தின் பெயரை ‘தமிஸான்’ என்றே சொல்லியிருக்கிறார். சின்னதா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

* மயிலாடுதுறையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மார்ச் 18 - ம் தேதி நேபாள நாட்டின் போக்ராவில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். Back strock 100 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தங்கம் வென்ற மண்ணின் மைந்தனைப் பாராட்டி வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. அப்படியே ஒலிம்பிக் வரை தடம் பதிக்க வாழ்த்துகள்!

* தன் கருத்துளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஓய்வுபெறுகிறார். மரபுப்படி, தனக்கு அடுத்து அந்தப் பொறுப்புக்கு ஒருவரை அவர் பரிந்துரை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தற்போது நம்பர் 2-ஆக உள்ள என்.வி.ரமணா பெயரையே பாப்டே பரிந்துரைப்பார். ரமணா 16 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருக்க முடியும். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ரமணாவுக்கும் இருக்கும் மோதல் எல்லோரும் அறிந்ததே! ரமணா பொறுப்புக்கு வந்ததும், ஜெகனுக்கு எதிரான வழக்குகள் என்ன ஆகும் என்று பார்க்க எல்லோரும் ஆவலாக இருக்கிறார்கள். சட்டம் ஒரு சண்டைக்களம்!

* வாளையாற்றுப் பகுதியில் 2017-ல் இரண்டு சிறுமிகள் சிறார் வதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்காத போலீஸ் அதிகாரிகளைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் காப்பாற்றுகிறார் எனக் குற்றம் சாட்டி அந்தச் சிறுமிகளின் தாய் தலையை மொட்டை அடித்து வீதியில் நின்று நியாயம் கேட்டார். அந்தக் கோபக்காரத் தாய் இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கேரளாவில் காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட்டுக்கும் எதிராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள். சபாஷ் சரியான போட்டி!

* மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமகுடமான நீலகிரிக்குப் பெயர்க் காரணமே, மலை முழுக்கப் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சிகள்தான்‌. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி முதல் 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய குறிஞ்சி வரை மொத்தம் 19 வகையான குறிஞ்சிகள் இந்தக் குறிஞ்சி நிலத்தில் பூக்கின்றன. பல்வேறு காரணங்களால் இங்கு குறிஞ்சிப் புதர்கள் அழிக்கப்படுவதால், இரண்டு வகைக் குறிஞ்சிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. குறிப்பாக 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஸ்ட்ரொபிலான்தஸ் ஹொமோட்ரோபா (Strobilanthes homotropa) வகைக் குறிஞ்சிச் செடிகள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன எனும் அதிர்ச்சியான உண்மை சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘குறிஞ்சிச் செடிகளை உடனடியாகப் பாதுகாக்காவிட்டால், சில ஆண்டுகளிலேயே இந்த இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது’ என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..?

* ஃபார்முலா ஒன் களத்தில் மீண்டும் ஷுமேக்கர் பெயர் ஒலிக்கப்போகிறது. கார்ப் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷுமேக்கரின் மகன் மிக் ஹாஸ் எஃப்.1 அணிக்காக அறிமுகம் ஆகப்போகிறார். மார்ச் 28-ம் தேதி பஹ்ரைனில் நடக்கும் 2021 சீசனின் முதல் ரேஸ், இந்த 22 வயது வீரரின் முதல் ஃபார்முலா ஒன் ரேஸாக அமையப்போகிறது. மார்ச் மாதம் ஆரம்பிக்கும் தொடர், டிசம்பர் வரை 23 சுற்றுகள் நடக்கவிருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஃபார்முலா 2 சீசனின் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் மிக். வருக வருக!

இன்பாக்ஸ்

* தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வழி பரவலாக அறியப்பட்டிருந்தாலும், ரகுல் ப்ரீத் சிங் திரைத்துறைக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. எல்லி இதழுக்காக எடுக்கப்பட்ட ரகுல் படங்கள்தான் தற்போதைய வைரல். ‘‘முதலில் வெறுமனே பாக்கெட் மணிக்காகத்தான் நடிக்கத் தொடங்கினேன். எழுபது நாள்கள் கால்ஷீட் என்றால், வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். ஏழு நாள்களில் முடியும் படத்துக்கு ஓகே சொல்வேன்’’ என ஜாலியாகப் பேட்டியளித்திருக்கிறார் ரகுல். அப்போ ஷார்ட் பிலிம்தான் எடுக்கமுடியும்!

* கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை தனக்கு சீட் கொடுக்காததால் கோபம்கொண்டார், மாநில மகளிரணித் தலைவி லத்திகா சுபாஷ். திருவனந்தபுரம் காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவன் முன்பு அமர்ந்து தலையை மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவித்தார் அவர். அத்துடன் நிற்காமல், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமானூர்த் தொகுதியில் சுயேச்சையாகவும் போட்டியிட உள்ளார் லத்திகா. அங்கேயும் சீட் பஞ்சாயத்தா?

* பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு திரைப்படக் காப்பகங்களுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு, விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் முழுக்க படச்சுருள் உட்பட பழைமையான தொழில்நுட்பத்தால் எடுக்கப்பட்ட கிளாசிக் படங்களை அழியாமல் பாதுகாக்கச் செயல்படும் அமைப்பு இது. இதில் இந்தியாவின் திரைப்படப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காக அமிதாப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்றிருக்கும் முதல் இந்தியர் அமிதாப். ஹாலிவுட் இயக்குநர்களான மார்ட்டின் ஸ்கார்சஸியும் கிறிஸ்டோபர் நோலனும்தான் விருதை வழங்கியுள்ளனர். ‘‘பழைமையான திரைப்படங்களைப் பாதுகாக்க இந்தியா செய்யும் பணிகளைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். அமிதாப் இதற்காக எடுத்த முயற்சிகளையும் அறிவேன். இந்த வருடம் இந்த விருதைப் பெற அமிதாப்பைத் தவிரத் தகுதியானவர் யாருமில்லை’’ என்று புகழ்ந்திருக்கிறார் மார்ட்டின் ஸ்கார்சஸி. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘‘அமிதாப்பின் இந்தப் பணி, இதற்கு ஆதரவாக ஒலிக்கும் அவரின் குரல்... இவைதான் இந்த முன்னெடுப்புக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. பல விஷயங்களைச் சாத்தியமாக்கியிருக்கிறது’’ என்று பாராட்டியுள்ளார். வாழ்த்துகள் அமிதாப் ஜி!

* 2014-ல் Oculus என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி நிறுவனத்தைத் தன்வசப்படுத்தியது ஃபேஸ்புக். அப்போது முதல் கேமிங் துறையில் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த ஃபேஸ்புக், இப்போது மக்களின் தினசரி பயன்பாட்டிற்கும் அந்தத் தொழில்நுட்பங்களை எடுத்துவரவிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், தற்போது மொபைலில் போன் பேசுவது போலவே, டெலிபோர்டேஷன் (அட... விட்டலாச்சார்யா படத்துல வர்ற கூடு விட்டுக் கூடு பாயுற வித்தைதான்) செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பத்தை உருவாக்குவோம் எனத் தெரிவித்திருக்கிறார் மார்க். சொடக்குப் போடும் நேரத்தில் நாம் பேச நினைப்பவர் நம் எதிரில் வந்தால் எப்படி இருக்கும்... கூடிய விரைவில் அப்படியான ஒரு அனுபவத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உருவாக்கவிருக்கின்றனர். ஆக, விர்ச்சுவலாதான் இனி வாழ்க்கை!

* முதலமைச்சர் ஆனதும் முதல் நாள் முதல் கையெழுத்து ஒரு சம்பிரதாயம்போல, சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதும் சிலரின் இயல்பாகிவிட்டது. உத்தரகாண்டின் புதிய முதல்வரான திராத் சிங் ராவத், ‘கிழிந்த ஜீன்ஸ்’ குறித்துப் பேசியது இந்தியா முழுவதிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. ‘‘தன்னார்வ அமைப்பு நடத்தும் ஒரு பெண், தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார். அவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருந்தார். இப்படியான நபர்கள் என்னவிதமான நல்லொழுக்கத்தை அடுத்த தலைமுறையிடம் கடத்துவார்கள்’’ என திராத் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்ப, தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் அவர். அதே சமயம், ஜீன்ஸ் அணிவதில் தனக்கு மாற்றுக்கருத்து இல்லையென்றும், கிழிந்த டிசைன் ஜீன்ஸ் அணிவது சரியல்ல என்றும் மீண்டும் தன் கருத்தை உறுதிப்படுத்திருக்கிறார். உடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.

* ஸ்போர்ட்ஸ் படங்கள் என்றாலே சால இஷ்டம் டாப்ஸிக்கு. ‘சூர்மா’ படத்தில் ஹாக்கி வீராங்கனை, ‘சாண்ட் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனை என நடித்து அசத்தியவர், அடுத்தடுத்து இரண்டு ஸ்போர்ட்ஸ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் குஜராத்தி தடகள வீராங்கனையாகவும், ‘சபாஷ் மித்து’ எனும் மிதாலி ராஜ் பயோபிக்கிலும் நடிக்கவிருக்கிறார். சபாஷ் டாப்ஸி!

இன்பாக்ஸ்

* குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டியலினத்து இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தலித் ப்ரீமியர் லீக்கை அறிமுகப்படுத்தி யுள்ளனர். வட மாநிலங்களில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்தப் பிரிவினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை இப்படிப் பல பெயர்களில் நடத்தி வருகின்றனர். ‘நாங்களும் களத்துலதான் இருக்கோம்... ஆனா சமூகநீதிக் களம்’ என முற்றிலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டியை ‘தலித்’ அடையாளத்தோடு நடத்துகிறார்கள். ஆனால், சாதிப் பாகுபாடில்லாமல் அனைவரையும் போட்டியில் கலந்துகொள்ள அழைத்திருக் கிறார்கள். மாற்றத்துக்கான ஆட்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism