Published:Updated:

இன்பாக்ஸ்

அலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
அலியா பட்

இயக்குநர் மணிரத்னத்திற்கு கார் ஓட்டுவது பிடித்தமானது. காலை நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு அவரே தனது காரை ஓட்டிச் செல்வார்.

இன்பாக்ஸ்

இயக்குநர் மணிரத்னத்திற்கு கார் ஓட்டுவது பிடித்தமானது. காலை நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு அவரே தனது காரை ஓட்டிச் செல்வார்.

Published:Updated:
அலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
அலியா பட்

அலியா பட் நடித்திருக்கும் கங்குபாய் படம் கடந்த வாரம் வெளியாகி உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. இன்ஸ்டாகிராமில் இப்படம் குறித்து கங்கனா பதிவிட்டது பல பாலிவுட் பிரபலங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ``பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை விரும்பி வைத்திருக்கும் ஒரு நடிகையும், அவரின் மாஃபியா தந்தையும் எப்படியாவது பாலிவுட்டில் சாதித்துவிடத் துடிக்கிறார்கள். ரொமாண்டிக் படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கும் தன் மகளை நடிக்கத் தெரிந்த கதைநாயகி ஆக்கிவிடத் துடிக்கிறார் தந்தை. அந்தப் படத்தின் ஆகப்பெரும் தவறு, தவறான நடிகையைத் தேர்வு செய்ததுதான். இவர்கள் ஒருநாளும் திருந்தப்போவதில்லை. அதனால்தான், பாலிவுட்டில் இருக்கும் திரையரங்குகளில் ஹாலிவுட், தென்னிந்தியத் படங்கள் எல்லாம் ஓடுகின்றன'' என்று திட்டித் தீர்த்திருக்கிறார். ``சிலருக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதே சிறந்த எதிர்வினைதான்'' எனத் திருப்பி அடித்திருக்கிறார் அலியா பட். கங்கணம் கட்டி சண்டை போடும் கங்கனா!

இன்பாக்ஸ்

உலகம் முழுவதும் பலரை டி.வி சீரிஸ் பக்கம் திருப்பிய பெருமை ஹெச்.பி.ஓ தயாரித்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடருக்கு உண்டு. உலகை ஆளும் ஒற்றை அரியணைக்கு ஏழு ராஜாங்கங்கள் அடித்துக்கொள்ளும் அரசியல் விளையாட்டில் பேன்டஸியையும் புகுத்தி சுவாரஸ்யமாக்கியிருப்பார்கள். அந்தத் தொடர் முடிந்த நிலையில், தற்போது அதை எழுதிய எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினின் மற்றொரு படைப்பான `ஃபயர் அண்டு பிளட்' புத்தகத்தை `ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' என்ற பெயரில் டி.வி தொடராக மாற்றியிருக்கிறார்கள். பழைய டி.வி தொடருக்கு 200 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதையைச் சொல்ல வருகிறது இந்தத் தொடர். நிறைய டிராகன்கள், அரசியல் விளையாட்டுகள் எனப் பத்து எபிசோடுகள் கொண்ட முதல் சீசன் ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் வாரம் ஒரு எபிசோடாக ஒளிபரப்பாகவிருக்கிறது. ‘அவருக்குப் பதில் இவர்’ உண்டா?

இயக்குநர் மணிரத்னத்திற்கு கார் ஓட்டுவது பிடித்தமானது. காலை நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு அவரே தனது காரை ஓட்டிச் செல்வார். அவரது ரிலாக்ஸ் லிஸ்ட்டில் இன்னொன்று இசை. மகாராஜபுரம் சந்தானத்தின் பாடல்களைக் கேட்டு ரசிப்பார். புல்லாங்குழல் ரமணியின் இசையிலும் மனதைக் கரைப்பார். இசையில் தொடங்குதம்மா!

இன்பாக்ஸ்

மூங்கிலால் கட்டப்படும் வீடுகள் மட்டுமே கோயில் கோபுரங்களைப் போல காட்சியளிக்கும். வேலூர் லாங்கு பஜாரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மூங்கில்கள் விற்கப்படுவதால், அந்தப் பகுதி மூங்கில் மண்டி என்றே அழைக்கப்படுகிறது. மெல்லியது, தடிமனானது, குட்டை, உயரம் என 70 ரக மூங்கில்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. வீடுகளெல்லாம் கான்கிரீட்டுகளாக மாறுவதால், இப்போது வீடுகளுக்காக மூங்கில் வாங்குவதில்லை. ஆனாலும், பரண் அமைக்கவும், பந்தல் போடவும் மூங்கில்கள் தேவைப்படுகின்றன. வேலூரின் பழைமையையும் பெருமையையும் தாங்கி நிற்கிறது மூங்கில் மண்டி. மூங்கில் காடுகளே!

இன்பாக்ஸ்

ஷாருக்கான் மகள் சுஹானா கான் தன் தந்தை வழியில் நடிக்கவருகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் வெப் சீரிஸில் சுஹானா நடிக்கிறார். இதை ஸோயா அக்தர் இயக்குகிறார். இதற்காக சுஹானாவிற்குப் பல்வேறு வகையான மேக்கப் போடப்பட்டு அவரது கதாபாத்திரம் இறுதி செய்யப்பட்டுவருகிறது. ஏற்கெனவே சுஹானா மாடலிங் செய்துவந்தவர். சுஹானாவின் சகோதரர் ஆர்யன் கான் படத்தயாரிப்பில் கவனம் செலுத்த விரைவில் வருகிறாராம். வருக வருக!

தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கொடநாடு பொன்தோஸ் இப்போது நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவராக இருக்கிறார். நீலகிரியில் உள்ள பண்டைய பழங்குடியினங்களில் ஒன்றான தோடர் இனத்திலிருந்து முதல்முறையாக இந்தப் பதவிக்கு வந்தவர் என்பதால், அவரைப் பழங்குடி மக்கள் பெரிதும் கொண்டாடிவருகின்றனர். இப்போது தன் மகன் விவேக் பொன்தோஸை சினிமா ஹீரோவாக்க அவர் களமிறங்கியிருக்கிறார். ராசி ரவிக்குமார் எழுதி இயக்கும் `அரணம்' திரைப்படத்தில் விவேக் ஹீரோவாக அறிமுகமாகிறார். பழங்குடிகளின் பிரச்னைகளைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நீலகிரியில் நடக்கவுள்ளது. தொல்குடி ஹீரோ!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ராஜஸ்தானில் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு எல்லா எம்.எல்.ஏ-க்களுக்கும் பட்ஜெட் பிரதி வழங்கப்பட்டது. கூடவே லேட்டஸ்ட் மாடல் ஐபோனும் பரிசாகத் தரப்பட்டது. எதிர்க்கட்சியான பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்கள் `போன் வேண்டாம்' என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர். ``சட்டமன்ற நடைமுறைகளை எம்.எல்.ஏ-க்கள் கவனிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் ஐபோன் கொடுத்தோம். பட்ஜெட்டைக் குறை சொல்ல முடியாததால் இந்த விவகாரத்தைக் கிளப்புகின்றனர்'' என்கிறது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு. சமீபத்தில் புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி அரசு இதேபோல ஐபோன், கம்ப்யூட்டர் எல்லாம் கொடுத்தபோது தி.மு.க உட்பட எல்லாக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் வாங்கிக்கொண்டனர். காரணமில்லாம கொடுக்கமாட்டாங்களே!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் நந்தவனம் அமைத்துவருகிறார்கள், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர். நம் முன்னோர்கள் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைத்து, அதில் மருத்துவ குணம் கொண்ட மரங்களை வளர்த்தார்கள். அவை பக்தர்களுக்குப் புத்துணர்வு அளித்தன. காலப்போக்கில் கோயில் நந்தவனங்கள் மாயமாகின. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கிரீன்நீடாவுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோயில், விளக்குடி கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில், வேதா மகா காளியம்மன் கோயில், குன்னியூர் விநாயகர் கோயில், திருக்களார் ஆண்டாள் கோயில், வில்வ வனநாதர் கோயில் உட்பட பல கோயில்களில் இவர்களது ஆன்மிகப் பசுமை சேவை தொடர்கிறது. காலத்தின் தேவை!

இன்பாக்ஸ்

புது இயக்குநர்கள் பலரிடமும் எளிமையாக நெருங்கிப் பழகுவதால் பாரதிராஜாவை, `அப்பா' என்றே பல இயக்குநர்கள் கூப்பிடுகின்றனர். அவரும் அதில் மனம் மகிழ்கிறார். இப்போது ஆறேழு படங்களில் நடித்துவரும் இமயம், மீண்டும் படம் இயக்கும் ஆசையை தன் நண்பர்கள் வட்டத்தில் பகிர, ``தொடர்ந்து நடிங்க... சம்பாதிக்கற வழியைப் பாருங்க'' என அவர்கள் ஆலோசனை சொல்லியிருப்பதால், மேலும் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம். அரிதார அவதாரம்!

இளையராஜாவும் கங்கை அமரனும் தங்கள் மனவேறுபாடுகளைப் பேசிக் களைந்துகொண்ட பிறகு இப்போது தினமும் அண்ணனின் ஸ்டூடியோவிற்கு வந்துவிடுகிறார் அமரன். அண்ணனுக்கு உதவியாக கூட இருந்துவிட்டு மாலைதான் தன் வீட்டுக்குப் போகிறார். இளையராஜாவைக் காண வருகிறவர்கள் இந்தப் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்கிறார்கள். பேட்டி கொடுப்பதாக இருந்தால்கூட அண்ணனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் கொடுக்கிறார். தம்பியுடையார்!

இன்பாக்ஸ்

`கடைசி விவசாயி' படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று அவரை வாழ்த்திய இயக்குநர் மிஷ்கின், தேனி மாவட்டம் போடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இசைக் கச்சேரி மேடையில் ஏறிய மிஷ்கின், இசைஞானியின் பாடல்களைப் பாடி மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுக்கு புத்தகங்களையும் பரிசளித்தார். அன்பின் பரிசு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான சரஸ்வதிவிளாகம், கொண்ணகாட்டுப்படுகை, கீரங்குடி, பாலூரான்படுகை, மேலவாடி, கீழவாடி, பனங்காட்டான்குடி, வடரங்கம், நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, முதலைமேடுத்திட்டு, நாணல்படுகை, அளக்குடி போன்றவற்றில் 10 ஆண்டுகளுக்குமுன் ஒரு மயிலைக்கூடப் பார்க்க முடியாது. அந்நிலை மாறி இன்று கரையோர வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் வாழ்ந்துவருகின்றன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்வரை பறந்து சென்று இரை தேடும் மயில்கள், மாலையில் இருப்பிடம் திரும்பிவிடுகின்றன. இங்கு மயில்களை சிலர் மறைமுகமாக வேட்டையாடி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புள்ளினங்கள் பரவட்டும்!

புதுச்சேரிக் கடற்கரையை ஒட்டிய உணவகங்களில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட குறைந்தது 100 ரூபாயாவது வேண்டும். அதனுடன் சூப் குடிக்க வேண்டுமென்றால், கூடுதலாக 100 ரூபாய் ஆகும். ஆனால், கடற்கரையை ஒட்டி புதுச்சேரி காவல்துறையால் நடத்தப்படும் போலீஸ் கேன்டீனில், ஒரு வெஜிடபிள் சூப் வெறும் 6 ரூபாய்க்கும், 4 வெஜிடபிள் போண்டாக்கள் 12 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. அதேபோல, சாம்பாருடன் 3 பூரிகள் 12 ரூபாய்க்கும், வெஜிடபிள் மற்றும் தயிர் சாதம் 15 ரூபாய்க்கும், இரண்டு இட்லி 8 ரூபாய்க்கும், காபி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. காவல்துறையினருக்கான கேன்டீன்தான் என்றாலும், பொதுமக்களும் சாப்பிடலாம். டீ குடிக்கும் பணத்தில் டிபனையே முடித்துவிடலாம் என்பதால், கேன்டீனுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரும் பலரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது போலீஸ் கேன்டீன். மாலை நேரங்களில் கடற்கரைச் சாலைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், அதன்பின் இங்கு சூப் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிக்கன சேவை!