Published:Updated:

இன்பாக்ஸ்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

இளையராஜா பிற இசையமைப்பாளர்களோடு அதிகமாகப் பழகுவதோ, தொடர்பில் இருப்பதோ இல்லை. ஒரு புன்னகை, சில வார்த்தைகளோடு முடித்துக்கொள்வார்

இன்பாக்ஸ்

இளையராஜா பிற இசையமைப்பாளர்களோடு அதிகமாகப் பழகுவதோ, தொடர்பில் இருப்பதோ இல்லை. ஒரு புன்னகை, சில வார்த்தைகளோடு முடித்துக்கொள்வார்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan
இன்பாக்ஸ்

தென்னக ரயில்வேயில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்த வள்ளி, அடுத்தடுத்து தேர்வுகளை எழுதி டிக்கெட் பரிசோதகராக நீலகிரி மலை ரயிலில் ஏறினார். சிறுவயது முதலே பாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்த வள்ளி, மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராகப் பணி செய்துகொண்டே சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பாடல்களைப் பாடி மகிழ்வித்து வந்தார். மலை ரயில் பழுதாகி நிற்கும் நடுக்காட்டிலும், ரயில் இடை நிற்கும் மலை ரயில் நிலையங்களிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, படுகு போன்ற பல மொழிகளில் பாடல்களைப் பாடி மலை ரயில் பயணிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வள்ளி. 37 ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர் தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். ``ஓய்வுபெற்றாலும், என் மனம் எப்போதும் மலை ரயிலையும் அதில் பாடிய பாடல்களையும் நினைத்துத் தடதடத்துக்கொண்டே இருக்கும்'' என்கிறார். மலைக்குயில்!

இன்பாக்ஸ்

திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்திற்கு அரசுப்பேருந்து தினமும் காலை 11 மணிக்குப் புறப்பட்டு 12.30 மணிக்கு வந்து சேரும். இதில் ஓட்டுநராக முருகேசபாண்டியனும், நடத்துநராக சுடலைமுத்தும் பணி செய்து வந்தனர். மே 4-ம் தேதி பனைக்குளம் என்ற ஊருக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் முருகேசபாண்டியனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட அவர், பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். ``ஆஸ்பத்திரிக்குப் போவோமா அண்ணே” என நடத்துநர் கேட்க, “பஸ் ஸ்டாண்டுல எல்லாத்தையும் இறக்கி விட்டுட்டுப் போவோம்” எனச் சொல்லி மீண்டும் பேருந்தை இயக்க முயன்றார். முடியவில்லை. அதே பேருந்தில் பயணித்த அரசுப் பேருந்து ஓட்டுநரான மாரியப்பன் அதன்பின் பேருந்தை இயக்கினார். சாத்தான்குளம் போனதும் முருகேசபாண்டியனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். “அவரை நாங்க எல்லாரும் ‘மீசை முருகன்’னுதான் சொல்லுவோம். பெரிய மீசை வச்சிருப்பார். ஆனா அதிர்ந்துகூட பேசமாட்டார். பஸ்ல வந்த 44 பேரோட உயிரைக் காப்பாத்துன அந்த மனுஷன் உயிரிழந்ததை நினைச்சா மனசு வலிக்குது” என்கிறார்கள் சக பணியாளர்கள். மரித்திடாத மனிதம்!

இன்பாக்ஸ்

கொரோனா காலத்தில் யாசகம் செய்து அரசின் நிவாரண நிதிக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை ரூ. 10,000 மதுரை கலெக்டரிடம் வழங்கி ஆச்சரியப்படுத்தியவர் பெரியவர் பூல்பாண்டியன். கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்பும் தொடர்ந்து நிதி கொடுத்து வந்தவர், தற்போது இலங்கை மக்களுக்கு உதவ 50,000 ரூபாய் வழங்கி அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார். ``எப்படி முடிகிறது?'' எனக் கேட்பவர்களிடம், ``நான் நல்ல விஷயத்துக்குத்தான் பிச்சையெடுக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்துள்ளதால் 100, 500 என்று அள்ளிக் கொடுக்கிறார்கள். அதை அப்படியே அரசுக்குக் கொடுத்துவிடுகிறேன்'' என்கிறார். கொடை வள்ளல்!

இன்பாக்ஸ்

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிந்துஜா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். சக மாணவர்கள் ஐந்து பேருடன் இணைந்து இலங்கை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். ``இலங்கை மக்களுக்கு உதவி செய்யணும் என்ற செய்தியை டி.வி-ல பார்த்துட்டு, எங்க பிரண்ட்ஸ்கிட்ட சொன்னேன். அவங்களும் ஓகே சொன்னதால, 6 பேரும் ஒண்ணாச் சேர்ந்து பொதுமக்கள் கிட்ட உதவி கேட்டோம். இதுவரைக்கும் எப்படியும் 5,000 ரூபாய்க்கு மேல வந்திருக்கும். பணத்தை முதலமைச்சர் கிட்ட கொடுக்கணும்'' என்கிறார் சிந்துஜா மழலைக் குரலில். சிந்துஜா கொரோனா பேரிடர்க் காலத்தில் தான் லேப்டாப் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுத்திருந்தார். பொறுப்பான அடுத்தத் தலைமுறை!

இன்பாக்ஸ்

மன்னார்குடி கர்த்தநாதபுரத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் ஏசு கிறிஸ்து வாழ்க்கை வரலாறு நாடக விழா, மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரித்து வருகிறது. இதை மன்னார்குடியின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகவே இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். 180 ஆண்டுகள் பழைமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெறும் இந்த நாடகம், வெகுஜன கலைநயத்தோடு மிளிர்வதுதான் தனிச் சிறப்பு. இந்த ஆண்டு ஏப்ரல் 30 இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெற்ற இந்த நாடகத்தை, மும்மதங்களையும் சேர்ந்த ஏராளமான மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கண்டு ரசித்தார்கள். வீடியோ தளங்கள், ஓ.டி.டி தளங்கள் வந்தாலும், உயிர்ப்புடன் கூடிய மேடை நாடகங்களுக்கு மக்களிடம் மவுசு குறையாது என்பதற்கு மன்னார்குடி நாடக விழாவே சான்று. முத்தமிழும் முக்கியம்!

இன்பாக்ஸ்

கோடைக்காலங்களில் காடுகள் வறண்டு பசுமையிழந்து காணப்படும். ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் பகல் நேரத்தில் வறட்சியான காட்சியைத்தான் பார்க்க முடியும். இரவு நேரங்களில் அங்குள்ள கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளால் காடு ஜொலிக்கிறது. சமீபத்தில் மின்மினிப் பூச்சிகள் நடத்திய ஒளி நடனம் கண்களைக் கட்டிப்போடும் ரம்மியமான காட்சி. அவதார் படத்தில் 3டி தொழில்நுட்பம் மூலம், பயோ லூமினசென்ட் உலகத்தைப் பார்க்கலாம். ஆனைமலைக் காடுகளில் அது இயற்கையாகவே நடந்துள்ளது. மின்மினிப் பூச்சிகள் மரங்களில் ஒருங்கிணைந்து ஒளியை உமிழ்ந்து, காடுகளை மென் பச்சை நிறத்தில் மூழ்கடித்தன. ஆண் மின்மினிப் பூச்சிகள் ஒளியை உமிழ்ந்து, தங்களது துணையைத் தேடிக்கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒளிகள் கொண்டாட்டத்தின் அடையாளம்!

தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த படம், `ஜதி ரத்னலு.' நவீன் பாலிஷெட்டி நடித்த இப்படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ரக நகைச்சுவைப் படம். இந்தப் பட இயக்குநர் தற்போது சிவகார்த்திகேயனை இயக்கிவருகிறார். இயக்குநரைத் தொடர்ந்து, இப்படத்தின் நாயகி ஃபரியா அப்துல்லாவும் கோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் பீரியட் படத்தில் இவர்தான் நாயகி. வாங்க வாங்க!

இன்பாக்ஸ்

மலையாளத்தில் நிவின் பாலியுடன் `சகாவு', துல்கர் சல்மானுடன் `ஜோமோன்டே சுவிசேஷங்கள்' ஆகிய படங்களில் நடித்திருந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார். ஜோஜு ஜார்ஜுடன் `புலிமாடா', பார்வதி, ஊர்வசி, லிஜோமோல் ஆகியோருடன் `Her' ஆகிய இரு மலையாளப் படங்கள் ஐஸ்வர்யாவின் கைவசம் இருக்கின்றன. அடிப்பொலி!

`சர்வம் தாள மயம்' படத்திற்குப் பின் மீண்டும் டைரக்‌ஷனில் இறங்குகிறார் ராஜீவ் மேனன். தமிழில் அல்ல, இந்தியில். ஓ.டி.டி-க்காக ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் தீவிரமாக இருக்கிறார். இடையில் பாடகி சுபஸ்ரீயின் குரலில் காதல் பிரிவு பற்றிய கர்னாடிக் மெலோடி ஒன்றையும் கம்போஸ் செய்துள்ளார். இசை இயக்குநர்!

மணிரத்னம் கடந்த லாக்டௌன் நாள்களில் லேட்டஸ்ட் எடிட்டிங் மற்றும் கலர் கரெக்‌ஷன் விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இப்போது `பொன்னியின் செல்வன்' எடிட்டிங்கில் அவரும் உட்கார்ந்து மும்முரமாக இயங்கிவருகிறார். கற்றலுக்கு ஏது வயது?

இளையராஜா பிற இசையமைப்பாளர்களோடு அதிகமாகப் பழகுவதோ, தொடர்பில் இருப்பதோ இல்லை. ஒரு புன்னகை, சில வார்த்தைகளோடு முடித்துக்கொள்வார். ஆனால் மகன் யுவனோ நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், இமான் என சக இசையமைப்பாளர்களை அழைத்து பாட்டும், இசையும், உணவுமாகக் கொண்டாடுகிறார். நட்பே துணை!

மகன் சஞ்சயை இப்போதெல்லாம் விஜய் தன்னுடன் அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். சினிமா உலகின் முக்கியமானவர்களுக்கு அறிமுகப்படுத்தி சஞ்சயை சகஜமாகப் பழகும் நிலைக்குக் கொண்டு வரவே இந்த ஏற்பாடாம். புதுத் தளபதி வரவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism