Published:Updated:

இன்பாக்ஸ்

ரஜிஷா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜிஷா விஜயன்

'கர்ணன்’ படம் கொடுத்த வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து கோலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரஜிஷா விஜயன்.

இன்பாக்ஸ்

'கர்ணன்’ படம் கொடுத்த வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து கோலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரஜிஷா விஜயன்.

Published:Updated:
ரஜிஷா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜிஷா விஜயன்

புதுச்சேரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி மாதம் ஒருமுறையாவது வேலூர் அருகே செங்காநத்தம் மலையில் வீற்றிருக்கும் கால பைரவரையும், பிரத்யங்கரா தேவியையும் வணங்க வருவார். அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் இருள் சூழ்ந்த நேரத்தில் இங்கு வந்துவிடும் ரங்கசாமி காலபைரவர் முன் அமர்ந்து வேண்டிக்கொள்கிறார். ரங்கசாமிக்காக மலையிலுள்ள பகவதி சித்தர் என்ற சாமியாரும் ரகசியமாக யாகம் நடத்துகிறாராம். வாக்குப்பதிவுக்கு முன்பும், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாளிலும் இங்கு சிறப்பு பூஜை செய்த ரங்கசாமி ஆட்சியையும் பிடித்துவிட்டார். வேண்டுதல் நிறைவேறியதால், இங்கு பிரத்யங்கரா தேவி கோயில் கட்டுமானப் பணியைச் செய்ய முன்வந்துள்ளாராம் ரங்கசாமி.

இன்பாக்ஸ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடித் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் டி.ஆர்.பி.ராஜா. தந்தை டி.ஆ.பாலு கட்சியின் பொருளாளர். உதயநிதி ஸ்டாலினுக்கு ராஜா நெருக்கமான நண்பர். அதனால் ராஜா அமைச்சராவது 100 சதவிகிதம் உறுதி எனப் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் ராஜா இடம்பெறவில்லை. ராஜாவின் ஆதரவாளர்கள் கொஞ்சமும் அசரவில்லை. ‘எங்களது ராஜா, எப்போதும் ராஜாதான்... மந்திரியாக வேண்டாம்!’ எனச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தினார்கள். ‘`நீங்கள் அமைச்சரானால், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களைச் சுற்றி வர வேண்டியிருக்கும். தொகுதி மக்களை அடிக்கடி பிரிந்திருக்க நேரும். இப்போது மன்னார்குடியிலேயே இருப்பதுதான் மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சி’ எனவும் பதிவிட்டு சமாதானம் ஆகிக்கொண்டார்கள்.

கர்ணன்’ படம் கொடுத்த வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து கோலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரஜிஷா விஜயன். அடுத்ததாக, கார்த்தி - பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். அதோடு, ‘கூட்டத்தில் ஒருவன்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார். மலையாள மஞ்சனத்தி!

இன்பாக்ஸ்

கொரோனாச் சூழலில் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதே அரிதாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 515 கணேசன், மருத்துவமனை செல்ல முடியாமல் தவிக்கும் நோயாளிகளை தனது அம்பாசிடர் காரில் இலவசமாக அழைத்துச் சென்று வருகிறார். கடந்த வருடம் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களே ஓடாத நிலையில், அவசர சிகிச்சை நோயாளிகளைப் புதுக்கோட்டையிலிருந்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கும் தனது அம்பாசிடரில் இலவசமாக அழைத்துச் சென்று நோயாளிகளின் குடும்பத்தை நெகிழ வைத்திருந்தார். பெட்ரோலுக்காக சில நல்ல உள்ளங்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய, கணேசன் இலவசமாக ஓட்டிவருகிறார். ``அவசரத் தேவைக்கு வாகனம் கிடைக்கலைன்னு எந்த உயிரும் போயிரக் கூடாது. அதுக்காகத்தான் என்னோட இந்த உழைப்பு'' என்று நெகிழ வைக்கிறார் 515 கணேசன்.

கொரோனாத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு தொடர்ந்து விழிப்புணர்வு செய்துவருகிறது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தாமோதரனின் விழிப்புணர்வோ வேறு ரகம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு தினமும் சாப்பாடு வழங்கினார் இவர். இப்போது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தன் ஊர் மக்களுக்கு ஒரு கிலோ தக்காளியை இலவசமாகக் கொடுக்கிறார். தக்காளியின் விலை குறைவுதான். என்றாலும் அவரது வேண்டுகோளை ஏற்று பலரும் கொரோனாத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

நம் நாட்டில் கொரோனாச் சூழலில் மெகா பட்ஜெட்டில் நாடாளுமன்றமும் பிரதமருக்கான வீடும் கட்டப்பட்டுவருகிறது. இது இப்படியிருக்க, ஜப்பானில் இன்னும் சிறப்பாக ஒரு சம்பவம் செய்திருக்கிறார்கள். ஜப்பானின் நோட்டொ நகரத்தில் 2,30,000 அமெரிக்க டாலர் செலவில் 43 அடிக்கு ராட்சத கணவா மீன் சிலையொன்றை வடிவமைத்திருக்கிறார்கள். ஜப்பான் அரசு இந்த நகரத்துக்கு 60 லட்ச அமெரிக்க டாலர்களை கொரோனா நிதியாக ஒதுக்க, அதில் ஒரு பகுதியை சுற்றுலாவை அதிகரிக்கலாமே என்கிற யோசனையில் இப்படிச் செய்திருக்கிறார்களாம்.

தேர்தல் இல்லாத இயல்பு வாழ்க்கைக்கு தேசம் திரும்பிவிட்டது என்பதை உணர்த்தும் குறியீடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை. 'எண்ணெய் நிறுவனங்கள்தான் இவற்றின் விலையை நிர்ணயம் செய்கின்றன. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை' என மத்திய அரசு சொன்னாலும், தேர்தல் நேரங்களில் மட்டும் இவற்றின் விலை ஏறுவது நின்றுவிடும். ஐந்து மாநிலத் தேர்தல்கள் காரணமாக, கடந்த பிப்ரவரி 27-ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு மே 4-ம் தேதி முதல் மீண்டும் விலை உயர ஆரம்பித்துவிட்டது. ``இடையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்தபோதும், நாங்கள் விலையை ஏற்றாமல் இருந்தோம். இதனால் லிட்டருக்கு மூன்று ரூபாய் நஷ்டம். விரைவில் இதை ஈடுகட்டிவிடுவோம்'' என்கிறார்கள் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்.

வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என பயோ பபுளுக்குள் இருந்தவர்களுக்கும் கொரோனா பரவியதால், 2021 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சீசன் தொடருமா இல்லையா என்று எல்லோரும் சந்தேகிக்க, ``இந்தத் தொடர் முடியாவிட்டால் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்'' என்று ஃபீலிங்கில் இருக்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி. பிரளயமே வந்தாலும் முடிக்காமல் விடமாட்டோம் என்பதைத்தான் பைனான்ஷியல் டெர்ம்ஸ் மூலம் சொல்லியிருக்கிறார் தாதா. இதெல்லாம் ரொம்ப தப்புங்க!

2018-ல் வெளியான `ரெடி ப்ளேயர் ஒன்' படத்துக்குப் பிறகு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `வெஸ்ட் சைடு ஸ்டோரி'யின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 10 எனக் குறித்து அதன் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை பல ஜானர்களில் படமெடுத்துவிட்ட ஸ்பீல்பெர்க் தற்போது 74 வயதில் ரொமான்ஸ் பக்கம் வந்திருக்கிறார். அதுவும் ரோமியோ - ஜூலியட் காவியத்தை அடிப்படையாக வைத்து மேடை நாடகங்களாகவும் ஏற்கெனவே ஒரு படமாகவும் எடுக்கப்பட்ட கதைதான் இது. 1961-ல் இதே பெயரில் உருவான படம் 10 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்தச் சாதனையை ஸ்பீல்பெர்க் தன்னுடைய வெர்ஷன் மூலம் முறியடிப்பாரா என்பதுதான் இப்போதைய கேள்வி! இரண்டு டீன் ஏஜ் குழுக்களுக்கிடையே நடக்கும் கேங் வார், அதனுள் காதல், இசை, நடனம் என எல்லாம் கலந்த எமோஷனல் டிராமாவாம். 'சென்னை 28' பார்ட் 3 ரெடியா?

எல்லா வருடமும் குறைந்தது இரண்டு சூப்பர் ஹீரோ படங்களையாவது வெளியிட்டு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை அசால்ட்டாக முறியடிக்கும் மார்வெல் ஸ்டூடியோஸும்கூட கொரோனாவுக்குப் பிறகு சைலன்ட் மோடுக்கு போய்விட்டது. 'பிளாக் விடோ' படத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் வருங்காலத்தின் மீது துளியும் நம்பிக்கை குறையாத மார்வெல் ஸ்டூடியோஸ் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் தற்போது படு பிசி. புதிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் பலவும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இணையவுள்ளன. கடந்த வாரம் இதில் சுமார் 9 படங்களின் வெளியீட்டு தேதிகளை அறிவித்திருக்கிறது மார்வெல். மே, 2023 வரை நீள்கிறது இந்தப் பட்டியல். பிளாக் பேந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர்மேன் போன்ற ரசிகர்களின் பேராதரவு பெற்ற சூப்பர் ஹீரோக்களின் அடுத்த படங்களும் இதில் அடங்கும்.

இன்பாக்ஸ்

நீதிமன்ற வாதங்களின்போது நீதிபதிகள் சொல்லும் வார்த்தைகளை பத்திரிகைகளில் எழுதுவதைத் தடுக்க முடியுமா? `முடியவே முடியாது' என்று சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், `மிகவும் பொறுப்பற்ற நிர்வாகமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இப்போது கொரோனா பரவியதற்கு நீங்கள் மட்டுமே முழுப்பொறுப்பு. உங்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்' எனத் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்தனர். 'இதை மீடியாக்கள் எழுதுவதைத் தடை செய்ய வேண்டும்' எனத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, ''இவை கடுமையான வார்த்தைகள்தான். ஆனால், நீதிமன்ற நடைமுறைகளை பத்திரிகைகள் எழுதுவது கருத்து சுதந்திரம். அதைத் தடுக்க முடியாது'' என்று சொல்லிவிட்டது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சமூக வலைதளங்கள் ட்ரம்பை உக்கிரமாகத் தாக்கின. ட்விட்டர் ட்ரம்புக்கு நிரந்தரத் தடை விதிக்க, ஃபேஸ்புக்கும், யூடியூபும் தற்காலிகமாக அவர் அக்கௌண்ட்டை நீக்கின. `உலகில் வன்முறை குறையும் போது, ட்ரம்புக்கு நாங்கள் மீண்டும் வாய்ப்புத் தருகிறோம்' என நாசூக்காகக் கதவை அடைத்துவிட்டது யூடியூப். ஃபேஸ்புக் இன்னும் எந்த முடிவையும் தீர்க்கமாக எடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ட்ரம்ப், தற்போது புதிதாக வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதில் அவர் வெளியிடும் கருத்துகளை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துகொள்ளலாமாம். இதுபோக, தனியாக ஒரு சமூக வலைதளத்தையும் உருவாக்கவிருக்கிறாராம் ட்ரம்ப். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு