Published:Updated:

இன்பாக்ஸ்

தனுஷ் - ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ் - ரம்யா கிருஷ்ணன்

கொரோனாப் பெருந்தொற்றின் முதல் அலை நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களைப் பெரிதாக பாதிக்க்கவில்லை. இந்த இரண்டாம் அலைப் பரவல் பழங்குடி மக்களிடம் வேகமெடுத்துள்ளது

இன்பாக்ஸ்

கொரோனாப் பெருந்தொற்றின் முதல் அலை நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களைப் பெரிதாக பாதிக்க்கவில்லை. இந்த இரண்டாம் அலைப் பரவல் பழங்குடி மக்களிடம் வேகமெடுத்துள்ளது

Published:Updated:
தனுஷ் - ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ் - ரம்யா கிருஷ்ணன்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தமிழகத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர், ‘யோகா’ ரமேஷ். யோகா மாஸ்டரான இவர், காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கதராடை மட்டும் அணிந்து வலம் வருகிறார். தேர்தலுக்கு முன்பு, ‘வாக்காளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கணும். 46 கோடி ரூபாய் கடன் கொடுங்க’ என்று ஒரு வங்கியில் கடன் கேட்டு, மேலாளரைத் திகிலடைய வைத்தார். தொடர்ந்து, ‘பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற அரசு ஊதியம் பெறும் அனைவரும், அவரவர் சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இப்போது, ‘முதல்வர் அலுவலகத்தில் ஒருநாள் அவருடைய அலுவல்களைப் பார்வையிடவும், அங்குள்ள கோப்புகளைப் பார்வையிடவும் அனுமதி வேண்டும்’ என்று கடிதம் எழுதி, அதிகாரிகளை ‘ஜெர்க்’ ஆக வைத்திருக்கிறார்.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைமையான ஓட்டுக் கட்டடத்தில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அதில் ஆர்.டி.ஓ இருக்கைக்கு அருகில் சிறிய பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கருவறை விக்ரகத்தைப் போன்று ஒரு விக்கிரகமும் இந்தக் கோயிலில் உள்ளது. இந்த அம்மனுக்கு சில அலுவலர்கள் தினமும் பூஜை செய்வது வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இந்தக் கட்டடம் நீதிமன்றமாக இருந்திருக்கிறது. அப்போது இப்படிக் கோயிலை அமைத்து தினமும் அலுவல்களைத் தொடங்கும் முன்பு வழிபடுவதை மன்னர் வழக்கமாக்கி யிருந்தார். அது இப்போதும் தொடர்கிறதாம். இந்தக் கோயிலில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை.

இன்பாக்ஸ்
Photographer: ANAND

கடிகாரம்போல அடுத்தடுத்த புராஜெக்ட்களில் சுற்றிச் சுழன்றுவருகிறார் தனுஷ். ‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு சூட்டோடு சூடாக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘D 43’ படத்தில் இணைந்தார். மலையாளத்தில் வெளியான ‘வைரஸ்’ படத்தின் எழுத்தாளர்கள், ஜி.வி.பிரகாஷ் இசை என டெக்னிக்கலாகவும் படம் பக்கா மாஸாக இருக்க, அப்டேட்டிற்காக தவமாய் தவமிருந்தனர் ரசிகர்கள். படத்தில் தனுஷ் புலனாய்வுப் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கிறார் என்று சீக்ரெட் பூட்டை சைடு கேப்பில் திறந்துள்ளார் இயக்குநர். சம்பவம் இருக்கு டோய்!

இன்பாக்ஸ்

‘ராஜமாதாவும் பாகுபலியும் மீண்டும் இணைய உள்ளனர்’ என்கிறது டோலிவுட் வட்டாரம். ஆனால், இம்முறை பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கவுள்ளார் ரம்யா கிருஷ்ணன். ‘கே.ஜி.எஃப்’ புகழ் பிரஷாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனை பிரபாஸுக்கு அக்காவாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. அக்காவின் ராஜ்யம் விரைவில் ஆரம்பம்.

நடிகை ஷகீலாவின் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது ‘குக்கு வித் கோமாளி - சீசன் 2’. இவர் சமீபத்தில் தனது வளர்ப்பு மகளான மிளாவுடன் இணைந்து நடத்திய போட்டோஷூட், கடந்த வார இன்ஸ்டா வைரல். ஷகீலா மேனகாவாகவும், மிளா சகுந்தலாவாகவும் வேடமிட்டு வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களை அள்ளித் தெறிக்க விட்டுள்ளனர். ஷகீலா மேடம் மாஸ்!

இன்பாக்ஸ்

கொரோனாவால் தடைபட்ட திருவிழாக்களில், கும்பகோணத்தின் மிகவும் புகழ்பெற்ற 12 கருட சேவையும் ஒன்று. ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று, கும்பகோணத்தின் 12 பெருமாள் கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வீதியுலா கொண்டு வருவார்கள். இதன் நிறைவில் 12 கருட வாகனங்களும் ஒரே இடத்தில் எழுந்தருள்வது வழக்கம். ஆயிரக்கணக்கான மக்கள் அதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நகைகளை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழா ரத்து செய்யப்பட்டதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வகுத்த சமன்பாடுகளுள் மிகவும் பிரபலமானது ஆற்றல் நிறை சமன்பாடான (E=MC2). கடந்த அக்டோபர் 26, 1946 அன்று அவர் கைப்பட எழுதிய இந்தச் சமன்பாடு மற்றும் அதன் விளக்கத்துடன் கூடிய பிரதி ஒன்று சில தினங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டு, இந்திய மதிப்பில் சுமார் 2,91,94,106 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏலம் விடுத்தவர் ஐன்ஸ்டீனின் மகன்வழிப் பேரனான டாக்டர் சில்பர்ஸ்டீன். தாத்தா... யூ ஆர் ஸ்மார்ட்!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். கர்நாடகாவில் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நாளிலிருந்து, சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைத்து செய்து வந்தார். இடையில் அவர் அம்மா செலுவம்பா தேவிக்கு கொரோனா தாக்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். வேதாவின் அக்கா வத்சலாவுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டது. அவரையும் காப்பாற்ற முடியவில்லை. இரட்டைச் சோகங்களால் இடிந்து போயிருக்கிறார் வேதா.

கொரோனாப் பெருந்தொற்றின் முதல் அலை நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களைப் பெரிதாக பாதிக்க்கவில்லை. இந்த இரண்டாம் அலைப் பரவல் பழங்குடி மக்களிடம் வேகமெடுத்துள்ளது. இதைத் தடுக்கும்விதத்தில் இவர்களுக்குத் தடுப்பூசி வழங்க சுகாதாரத்துறையினர் முயற்சி செய்கின்றனர். ஆனால், தடுப்பூசியுடன் வாகனங்களில் சென்ற சுகாதாரத்துறையினரைக் கண்டு பெரும்பாலான பழங்குடிகள் தலைதெறிக்க ஓடி, காடுகளில் ஒளிந்துகொண்டனர்‌. இதைத் தொடர்ந்து, பழங்குடிகளுக்குத் தெரிந்த மலையாள மொழியில் மாவட்ட கலெக்டர் பேசி ஆடியோவை வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவருகிறார். இன்னொரு பக்கம், பழங்குடியினர் அதிகம் நம்பும் ஊர்ப் பூசாரிகள் மூலமாக ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என அருள்வாக்கு சொல்ல வைத்துள்ளனர் அதிகாரிகள். அதன்பிறகே பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர்.

உலகெங்கும் பயன்படுத்தப்பட்டாலும், மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னமும் அனுமதி தரப்படவில்லை. மும்பையில் இருக்கும் பிரான்ஸ் தூதரகம், வெளிநாட்டிலிருந்து இதை வரவழைத்து தங்கள் தூதரக பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் செலுத்தியது. ‘’இந்தியாவில் பயன்படுத்த அனுமதி இல்லாத ஒரு தடுப்பூசியை பிரெஞ்சு தூதரகம் எப்படி வாங்கலாம்? அதை மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து எப்படித் தங்கள் அதிகாரிகளுக்குப் போடலாம்’’ என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் சர்ச்சையைக் கிளப்ப, தர்மசங்கடத்தில் தவிக்கிறது பிரெஞ்சு தூதரகம்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ மந்திரியாக மாஸ் காட்டியவர் கே.சி.வீரமணி. அந்த அளவு சொகுசான வாழ்க்கையை விரும்பக்கூடியவர். இப்போது தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின்னர் உடைந்துபோயிருக்கும் வீரமணி, கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். விடியும் முன் தனது காரில் எங்கோ கிளம்பும் வீரமணி, இருட்டிய பின்னரே வீடு திரும்புகிறார். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள்கூட அவரைப் பார்க்க முடியவில்லை என்கிறார்கள். ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றால் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்பதால் மினி கூப்பர் காரைத் தானே ஓட்டிச்செல்கிறார். நிர்வாகிகள் யாரேனும் போன் அடித்தாலும், ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்’ என்ற வாய்ஸ் கேட்கிறதாம்.

கொரோனா அச்சம் காரணமாக உச்ச நீதிமன்ற விசாரணைகள் பலவும் இப்போது ஆன்லைனில் நடைபெறுகின்றன. இவற்றைப் பத்திரிகையாளர்கள் பார்ப்பதற்காக ஒரு செயலியை வெளியிட்டிருக்கிறார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே ஏகப்பட்ட மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. ‘`விரைவில் உச்ச நீதிமன்ற விசாரணைகளை மக்கள் பார்க்கும்விதமாக நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டம் இருக்கிறது’’ என்கிறார் நீதியரசர் ரமணா.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

1994 முதல் 2004 வரை 10 சீசன்களாக வெளிவந்து பல லட்சம் ரசிகர்களை உலகமெங்கும் சம்பாதித்த டிவி தொடர் ‘ஃப்ரெண்ட்ஸ்’. நியூயார்க் நகரிலிருக்கும் ஆறு நண்பர்களின் வாழ்வைப் பற்றிப் பேசிய இந்தத் தொடர், காமெடி கலந்து காதல், நட்பு, உறவுச்சிக்கல்கள் எனப் பல விஷயங்களைப் பேசியது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு இப்போது ‘ஃப்ரெண்ட்ஸ் ரீயூனியன்’ என்ற பெயரில் ஒரு புதிய எபிசோடு வெளியாகவிருக்கிறது. வார்னர் பிரதர்ஸ் HBO மேக்ஸ் ஓடிடி-யைத் தொடங்கியபோதே இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களை ஒருங்கிணைப்பது, கொரோனா லாக்டௌன் எனப் பல தடங்கல்கள். ஒருவழியாக HBO மேக்ஸ் தொடங்கி ஒரு வருடமாக இருக்கும் மே 27-ம் தேதி இந்த எபிசோடு ஒளிபரப்பாகவிருக்கிறது. தொடரின் பிரதான பாத்திரங்களோடு டேவிட் பெக்காம், ஜஸ்டின் பீபர், கிட் ஹேரிங்டன் தொடங்கி மலாலா வரை ஒரு பெரும்படையே சிறப்புத் தோற்றங்களில் தலைகாட்டப்போகின்றனர். இந்தியாவில் இதை எப்படிப் பார்ப்பது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை. நட்பே நட்பே... இனி எங்கே சந்திப்போம்!