Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

விழிச்சவால் கொண்ட ஒரு தாய், தன் குழந்தையை ரயில் தண்டவாளத்தில் தவறவிட்ட சம்பவம்தான் கடந்த வாரத்தின் வைரல் வீடியோ.

இன்பாக்ஸ்

விழிச்சவால் கொண்ட ஒரு தாய், தன் குழந்தையை ரயில் தண்டவாளத்தில் தவறவிட்ட சம்பவம்தான் கடந்த வாரத்தின் வைரல் வீடியோ.

Published:Updated:
விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

நெல்லை மாநகர காவல்துறையில், வெடிகுண்டுப் பிரிவில் பிராவோ என்ற நாய் எட்டு வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தது. திறமையாகச் செயல்பட்ட பிராவோ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது வெடிகுண்டு சோதனையில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். வயது முதிர்வின் காரணமாக சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த இந்த நாய்க்கு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. திறமையாகச் செயல்பட்ட பிராவோ, வெளி மாநிலங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும்போது, முதல் வகுப்பு கூபேயில் செல்லுமாம். விசுவாச விலங்கு!

இன்பாக்ஸ்

விழிச்சவால் கொண்ட ஒரு தாய், தன் குழந்தையை ரயில் தண்டவாளத்தில் தவறவிட்ட சம்பவம்தான் கடந்த வாரத்தின் வைரல் வீடியோ. கண் இமைக்கும் நேரத்தில் ரயிலின் முன் பாய்ந்து அந்தக் குழந்தையை மீட்டார் ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே. நாடு முழுவதும் அவருக்குப் பாராட்டு மழை குவிந்தது. வயது முதிர்ந்த அம்மா, மனைவி, 10 நாள்களே ஆன குழந்தை , இதுதான் ஷெல்கேவின் சொத்துமதிப்பு. அதைப் பற்றியெல்லாம் துளியும் யோசிக்காமல் தான் குழந்தையைக் காப்பாற்றினார் ஷெல்கே. இந்த வீர தீர செயலுக்கு, ரயில்வே அவருக்கு 50,000 ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. அதிலும் பாதியை அந்தக் குடும்பத்துக்கு அளித்து ஆச்சரியப்படுத்துகிறார் ஷெல்கே. மாமனிதர்!

புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் ஆட்சி நடக்கும்போதும், காரைக்கால் பகுதி புறக்கணிப்படுகிறது. புதுவையில் 1 ரூபாய்க்கு முகக்கவசம் மற்றும் 10 ரூபாய்க்கு சானிட்டைசர் போன்றவை அரசு நிறுவனமான பாண்லே மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காரைக்கால் மக்களுக்கு இது கிடைக்கவில்லை. இங்கு முகக்கவசம் இல்லாமல் செல்பவர்களை சந்துக்கு சந்து காவல் துறையும் நகராட்சி ஊழியர்களும் காலை முதல் இரவு வரை மடக்கி அபராதம் விதிப்பது மட்டும் நடைபெறுகிறது. புறக்கணிப்பின் வலி!

இன்பாக்ஸ்
DANJ

கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே விலைவாசி தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்திலும் கோவை வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 86 வயது கமலாத்தாள் பாட்டி குழம்பு, சட்னியுடன் 1 ரூபாய்க்கு இட்லி கொடுத்து வருகிறார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்திலும் பல பேரின் பசியை போக்கியது கமலா பாட்டிதான். “இனிமேலும் விலை ஏத்த மாட்டேன். எல்லா நாளும் கடை இருக்கும். எல்லாரும் வயிறார சாப்பிட்டா போதும் கண்ணு” என்று கொரோனாவுக்கு எதிராக எதிர் நீச்சல் போட தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறார் இந்த இரும்பு மனிதி. தன்னம்பிக்கை, அதானே எல்லாம்.

இன்பாக்ஸ்

கொரோனா தனது இரண்டாவது அலையில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நோயாளிகளுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்ஸிஜன் வசதிகள் இல்லாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக் எனும் இளைஞர் தனது சொந்தச் செலவில் ஏழைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். கொரோனாவின் தொடக்கம் முதலே இதனை செய்துவந்த ஷானவாஸ், தற்போது தேவை அதிகமாகியுள்ளதால் தனது 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரை விற்று சேவை செய்து வருகிறார். `கொரோனாவின் தொடக்க காலத்தில் ஐம்பது முதல் அறுபது அழைப்புகள் வரை ஆக்ஸிஜன் தேவை வேண்டி எனக்கு வரும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 600 அழைப்புகள் வருகி ன்றன. அதனால் மனம் வலிக்கிறது!’ என தன் இயலாமையைக் கூறுகிறார் ஷானவாஸ். அந்த மனசு தான் சார் கடவுள்!

கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி தியேட்டர், ஓடிடி என ஆல் ஏரியாவிலும் ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். அவர் நடித்து முடித்து ரிலீஸுக்கு ரெடியாக உள்ள ‘துக்ளக் தர்பார்’ படம், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தை வரும் ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சிறப்பு..மிகச் சிறப்பு!

இன்பாக்ஸ்

பல நாட்களாக ம்யூட் மோடிலிருக்கும் ஹன்சிகா தனது 50வது திரைப்படமான ‘மஹா’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் முதல் முறையாக ஒரே கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரே ஷாட்டில் த்ரில்லர் பாணியில் எடுக்கப்படும் ‘105 மினிட்ஸ்’ படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கவுள்ளாா். இதேபோல், தமிழில் பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளாா். நோ கட்..ஒன்லி ஆக்ஷன்!

இந்தியா தன் அடுத்த கிரிக்கெட் மைதானத்துக்குத் தயாராகிவருகிறது. தரம்ஷாலா மைதானத்தையே (4320 அடி உயரம்) அண்ணாந்து பார்த்த இந்தியர்கள், தற்போது 10,000 அடி உயரத்தில் கட்டப்படும் மைதானத்தை எப்படிப் பார்ப்பது என யோசிக்கிறார்கள். இமாசலப் பிரதேசத்தின் லாஹூல் பள்ளத்தாக்கில் இதைக் கட்டவிருக்கிறார்கள். பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தின் மொத்த செலவையும் அங்குள்ள மக்களே ஏற்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். பேக்ரவுண்ட் பக்காவா இருக்குமே!

நடிகர் விமல், மதுரை அழகர்கோயிலில் தன் மகளுக்கு முடி எடுப்பதற்காக நீண்டகாலம் வைத்திருந்த நேர்த்திக்கடனை ஏப்ரல் 22-ம் தேதி நிறைவேற்றினார். ஊரிலுள்ள சொந்த பந்தங்கள் அனைவருடன் அழகர்கோயிலுக்கு வந்தவர் எந்தவொரு சினிமா பவரையும் காட்டாமல் மக்களோடு மக்களாக மகளின் முடி காணிக்கை நிகழ்ச்சியை முடித்தார். கோயிலில் பூஜை முடித்து சொந்த பந்தங்களோடு மண்டபத்தில் அமர்ந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கை நூறு மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் பின்தொடருகிறார்கள். மார்க் சில நேரம் குறும்புத்தனமாக எதையாவது பதிவிடுவார். கமெண்ட்ஸுகளும் காமெடிகளாகத் தெறிக்கும். அதில், பல கமெண்ட்ஸுகளை நம்ம ஊர் சூனா பானாக்கள் தமிழில் தட்டுவதுதான் காமெடியின் உச்சமாக இருக்கும். ஒரு பதிவில், ‘நீங்கள் உணவு சாப்பிடுவதையே மறந்துவிட்டு உற்சாகமாக என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்ற கேள்வியை கேட்டிருந்தார் மார்க். ‘சமூக ஊடகங்களில் மூழ்கியிருந்தால் பசி எடுப்பதில்லை’ என்று லட்சம் ஆங்கில கமெண்ட்டுகள் இருந்தன. இதை பார்த்து எரிச்சலைடந்த நம்ம ஆட்களோ, ‘எங்களுக்கெல்லாம் விவசாய வேலை செய்யும்போதுதான் பசி எடுக்காது. போங்கய்யா யோவ்’ என்று தலையில் கொட்டியிருக்கிறார்கள். மார்க்குக்கே மார்க் போடுவாங்க நம்ம ஆளுங்க!