சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

நவ்யா நாயர்
பிரீமியம் ஸ்டோரி
News
நவ்யா நாயர்

கிருஷ்ண பக்தையான பாலாமணி குறித்த `நந்தனம்' படத்தில் நடித்து, மலையாளிகளின் அபிமான நட்சத்திரமாக மாறியவர் நவ்யா நாயர்.

அஜித் இந்தியா-பாகிஸ்தான் பார்டர் வரை பைக்கில் போய் வருகிறார் என்றால், அஜித் பட இயக்குநர் ஹெச்.வினோத் தமிழ்நாட்டுக்குள் அஜித் ஸ்டைலிலேயே சுற்றுகிறார். ஆனால், ரயில் மற்றும் பேருந்து எனப் பொதுப் போக்குவரத்துதான் வினோத் சாய்ஸ். சமீபத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பல வழிபாட்டுத் தலங்களுக்கு சர்வசாதாரணமாய் பயணம் செய்து திரும்பியிருக்கிறார். ஏன் இப்படி என வினோத்திடம் கேட்டால், ``ஷூட்டிங் பிஸியில இப்படிப்பட்ட பயணங்களை மிஸ் பண்ணியிருந்தேன். இப்போ எனர்ஜி ஏத்தின மாதிரி செம தெம்பா இருக்கு'' என்கிறார். தேசாந்திரி!

இன்பாக்ஸ்

திடீர் பாராட்டு மழையில் நனைகிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. தமிழில் நான்கு படங்கள் இயக்கியும் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அண்மையில் டாப்ஸி நடிப்பில் வெளியான `ராஷ்மி ராக்கெட்' படத்தின் கதை இவருடையதுதான். இந்தக் கதைக்காக வட இந்திய ஊடகங்கள் நந்தா பெரியசாமியைக் கொண்டாடுகின்றன. படத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு டாப்ஸி அழைக்க, மும்பை போய் வந்திருக்கிறார். மும்பையில் சில கதை வாய்ப்புகளும் வருகிறதாம். மிஷ்கின் பாராட்டுப் பத்திரம் வாசித்து ட்வீட் செய்ய, சமுத்திரக்கனியில் ஆரம்பித்து பல தமிழ் இயக்குநர்கள் நந்தா பெரியசாமியைப் பாராட்டிவருகிறார்கள். ஒரே கதை... பெரிய ஹிட்டு!

இன்பாக்ஸ்

கிருஷ்ண பக்தையான பாலாமணி குறித்த `நந்தனம்' படத்தில் நடித்து, மலையாளிகளின் அபிமான நட்சத்திரமாக மாறியவர் நவ்யா நாயர். திருமணத்துக்குப் பிறகு இரண்டே படங்களில் மட்டும் தலைகாட்டியவர், இப்போது `திருஷ்யம் 2' கன்னட ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். சமீபத்தில் தன் பிறந்த நாளான அக்டோபர் 14-ம் தேதி குருவாயூர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட நவ்யா நாயர், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து `கண்ணனின் பாலாமணி' எனத் தன்னைக் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணாபிமானி!

இன்பாக்ஸ்

காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்ற சாதனையை கடந்த 2010-ம் ஆண்டிலேயே நிகழ்த்திய சோனியா காந்தி, இப்போது இன்னொரு அரிதான சாதனையும் புரிந்திருக்கிறார். நேரு குடும்பத்தில் அவருக்கு முன்பிருந்த மற்ற எல்லோரும் தலைவராக இருந்த காலத்தைவிட அதிக காலம் தலைவராக இருப்பவர் என்பதுதான் அந்த சாதனை. தலைவர், இடைக்காலத் தலைவர், பொறுப்புத் தலைவர் எனக் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளைத் தாண்டி சோனியா தலைவராக இருக்கிறார். இன்னும் ஓராண்டுக் காலத்துக்கும் அவரே தலைவராக இருப்பார். நேரு எட்டு ஆண்டுகளும், இந்திரா ஏழு ஆண்டுகளும், ராஜீவ் காந்தி ஆறு ஆண்டுகளும் தலைவராக இருந்திருக்கிறார்கள். பல மாநிலங்களில் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக விலகிவர, காங்கிரஸ் மிக மோசமான பின்னடைவில் இருக்கும் காலத்தின் தலைவர் என்ற `பெருமை'யும் சோனியாவுக்குக் கிடைக்கலாம். சோதனைகளின் சாதனை!

இன்பாக்ஸ்

ரஜினி இனி அரசியல் இல்லை என்று அறிவித்த பிறகு திரைக்கு வருகிற முதல் படம் ‘அண்ணாத்த.' ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சோளிங்கர் ரவி இதற்காகப் பொது இடங்களில் வைத்துள்ள `அண்ணாத்த' செல்ஃபி பூத்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பலரும் இந்த பூத் முன்பு நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். அரசியலில்லா அண்ணாத்த!

இன்பாக்ஸ்

கேரள மேடைக் கலைஞரான ரமேஷ் பிசாரடி, பின்னர் சினிமாவுக்கும் வந்து பிரபலம் ஆனார். இவர் `பஞ்சவர்ண தத்த' (பஞ்சவர்ணக் கிளி) என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் மனைவியின் பிறந்த நாளுக்கு சேவல் வடிவில் கேக் தயாரித்தவர் அதில் `ஹேப்பி பர்த்டே கிளி' என எழுதி அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். அதில் பின்னூட்டம் இட்ட ரசிகர்கள் `சேவல் எப்படி முட்டை போடும்' எனவும், `இது கோழியா, கிளியா' என்றும் ஜாலியாகக் கலாய்த்து வருகின்றனர். கோழி கேலி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கோவை அரசியல் என்றாலே விருந்துதான் ஃபேமஸ். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி ரெய்டு களேபரத்துக்கு மத்தியில்கூட தொண்டர்களுக்கு விதவிதமான உணவுகளை வழங்கித் தெம்பு கொடுத்தார். தற்போது தி.மு.க-விலும் விருந்துக் கலாசாரம் வைரலாகி வருகிறது. மக்கள் நீதி மய்யத்திலிருந்து தி.மு.க-வில் வந்து இணைந்த டாக்டர் மகேந்திரன், குறுகிய காலத்துக்குள் சில விருந்துகளைக் கொடுத்துவிட்டார். மட்டனும் சிக்கனும் மீனுமாக இலைகளில் போட்டு உடன்பிறப்புகளின் மனதைக் குளிர வைத்துள்ளார். உபயம் - விக்ரம்!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே 5 கி.மீ நீளத்துக்கு அலையாத்திக் காடுகளுடன் தீவு போன்று முத்துக்குடா கடல் பகுதி ரம்யமாகக் காட்சியளிக்கிறது. இதைச் சுற்றுலாத்தலம் ஆக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கேட்டுவருகின்றனர். சுற்றுலா மீது ஆர்வம் கொண்ட தற்போதைய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சமீபத்தில் இங்கு கடலுக்குள் விசைப்படகில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின் அலையாத்திக் காடுகளுக்கிடையே கால்வாய்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அவர். இதைத் தொடர்ந்து இங்குவந்து ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், `முத்துக்குடா விரைவில் சுற்றுலாத்தலமாக மாறும்' என்று நம்பிக்கை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். சிறப்பு!

சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக் கால அனுபவமுடைய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலினைவிடவும் சீனியர் தலைவர். துரைமுருகன் பிறந்து வளர்ந்த வேலூர் மாவட்டம் காங்குப்பம் கிராமத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார் 26 வயதே ஆன சிவரஞ்சனி என்ற பட்டதாரிப் பெண். அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சிவரஞ்சனி வென்றது ஆச்சரியம். துரைமுருகனின் அண்ணன் குடும்பம் உட்பட உறவினர்கள் பலரும் காங்குப்பம் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இனி ஊராட்சித் தலைவர் சிவரஞ்சனிதான். அடுத்த தலைமுறை!

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய அலுவலகம், டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் இருக்கிறது. என்றாலும், அசோகா சாலையில் இருக்கும் பழைய அலுவலகமும் இன்னும் செயல்படுகிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் என ஏழு மாநிலங்களில் விரைவில் வரவுள்ள தேர்தலுக்காக கட்சியின் சீனியர் தலைவர்கள் இந்தப் பழைய அலுவலகத்தில்தான் சந்தித்து ஆலோசனை செய்கிறார்கள். இந்த அலுவலகத்தில் இருந்தபோது தொடர்ச்சியாக வெற்றிகள் கிடைத்தன என்ற சென்டிமென்ட் ஒரு காரணம். பல அமைச்சர்களின் அலுவலகங்கள் இதற்கு அருகே இருப்பதால், அவர்கள் சீக்கிரம் வர முடியும் என்பது இன்னொரு காரணம். இதனால், புது ஆபீஸைவிட பழைய ஆபீஸ் படுபிஸியாக இருக்கிறது. புது இந்தியாவில் புது பில்டிங்!

1999-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சேலம் கொம்பாடிப்பட்டி மேடு அருகே சுரேந்திரன் என்னும் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். ‘என் கள்ளக்காதலிக்கு நீ எப்படிடா தொந்தரவு கொடுக்கலாம்’ என சுரேந்திரனின் நண்பரான மூர்த்தி என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்தது தெரியவருகிறது. கொலைக்கு உதவிய மூர்த்தியின் நண்பர்கள் மூவர் கைதாகி, காலப்போக்கில் வழக்கில் இருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், கடைசிவரை மூர்த்தி சிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாகப் பிடிபடாமல் இருந்த மூர்த்தியை, சமீபத்தில் சேலம் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி எனப் பல ஊர்களில் அப்பாவிபோல கொத்தனார் வேலை செய்து வந்த மூர்த்தி, தன் பெயரை மாணிக்கம், ஜான் விக்டர் என மாற்றிக்கொண்டு உலவிவந்துள்ளார். திருச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் இருவரோடும் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்தப் பெண்கள் மூலம்தான் மூர்த்தியை போலீஸார் பிடித்துள்ளனர். கொரியன் சினிமாக் கதை மாதிரியே இருக்கில்ல!

யூடியூபில் ஜெயித்தவர்களில் சிலர் மட்டுமே அந்தப் பிரபலத்தைப் பயன்படுத்தி வியாபாரத்திலும் வெற்றிக் கொடி கட்டுகிறார்கள். கிராமத்துச் சமையல் மூலம் பிரபலமான தேனி மாவட்டத்துப் பெரியவர் ஆறுமுகம், மதுரையில் `டாடி ஆறுமுகம்' என்ற பெயரில் இரண்டு ஹோட்டல்கள் தொடங்கி நடத்திவருகிறார். அதேபோல், கடலில் மீன் பிடிக்கச் செல்வதை, `உங்கள் மீனவன்' என்ற பெயரில் யூடியூபில் காட்சிப்படுத்திப் பிரபலமான ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரைச் சேர்ந்த கிங்ஸ்டன், மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் `உங்கள் மீனவன்' என்ற பெயரில் மீன் கடைகளைத் தொடங்கிவருகிறார். இவர்கள் யூடியூபில் தாங்கள் பிரபலமாக எது காரணமோ, அதையே தொழிலாக மாற்றியுள்ளனர். கைத்தொழில்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கத் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது இந்தியா முழுக்க இருக்கும் பக்தர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறிய ஊரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் பக்தர்களுக்கும் என்ன சம்பந்தம்? தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான ரயில்கள் இந்த வழியாகச் செல்வதால், பெரும்பாலான நேரங்கள் ரயில்வே கேட் மூடப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சை வழியாக வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, சிக்கல் முருகன் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேம்பாலம் வந்தால், இந்தக் காத்திருப்பு தேவையில்லை என்பதே நிம்மதிக்குக் காரணம். மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்

அந்தக்கால ராஜபாட்டைகளில் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுப்பதற்காக சாலையோரங்களில் கல்மண்டபங்களை அமைத்திருந்தார்கள். வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் மரங்களையும் நட்டு வைத்தனர். ஆனால், அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் பல மண்டபங்கள் அழிக்கப்படுகின்றன. நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக 2,000-த்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டதுடன், சாலையோரத்தில் இருந்த கல் மண்டபங்களும் இடித்து அகற்றப்பட்டன. சென்னை-குமரி தேசிய நெடுஞ்சாலையோரம் நெல்லை புறநகர்ப் பகுதியில் இருக்கும் கல்மண்டபம், தற்போது வெள்ளநீர் கால்வாய்ப் பணிக்காக இடித்து அகற்றப்படும் ஆபத்தில் இருக்கிறது. `இந்த முயற்சியைத் தடுத்து வரலாற்று எச்சங்களைப் பாதுகாக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாறு முக்கியம் அமைச்சரே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

`ஆட்கொல்லி' என அடையாளம் கண்டு கடந்த 7 ஆண்டுகளில் 3 புலிகளைச் சுட்டுக் கொன்ற நீலகிரி வனத்துறை, சமீபத்தில் டி23 புலியை உயிருடன் பிடிக்கக் களமிறங்கியது. டிரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள், 3 மோப்ப நாய்கள், பரண்கள், கால்நடை மருத்துவர் குழு, கேரள, கர்நாடக வனத்துறை ஊழியர்கள் மற்றும் தமிழக வனத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் எனப் பெரும் பட்டாளமே இந்த ஆபரேஷனில் ஈடுபட்டாலும், கும்கி யானைகளின் பங்கு அளப்பரியது. டி23 புலியைச் சுற்றிவளைத்த வனத்துறையினர், அதனருகில் நெருங்குவதற்கு உதயன் என்ற கும்கி யானையைத் தேர்வு செய்தனர். காட்டு யானைகளை விரட்டிய அனுபவம் கொண்ட உதயனுக்கு, இதுதான் முதல் புலி ஆபரேஷன். பாகன் சுரேஷ் உதயனை வழிநடத்த, மயக்க ஊசி லோடு செய்யப்பட்ட துப்பாக்கியுடன் உதயன் மீது அமர்ந்தபடியே புலியைக் குறிபார்த்தார் கால்நடை மருத்துவர் ராஜேஷ். அருகில் வந்த உதயனை டி23 புலி ஆக்ரோஷமான உறுமலுடன் இரண்டு முறை தாக்க முயற்சி செய்தது. புலியின் உறுமலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக முன்னேறியது உதயன். கால்நடை மருத்துவர் குறி தவறாமல் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியைச் செலுத்தி, புலியை மயங்கச் செய்தார். ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த உதயன் கும்கியின் துணிவை அனைவரும் கொண்டாடிவருகின்றனர். மாமத யானை!