சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரேயா

கொரோனாத் தொற்றை கனடா வெற்றிகரமாக சமாளிப்பதற்கு அனிதா முக்கிய காரணமாக இருந்தார்.

இன்பாக்ஸ்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 54 வயது அனிதா ஆனந்த், கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியிருக்கிறார். கனடாவின் பாதுகாப்பு அமைச்சராகும் இரண்டாவது பெண் இவர். அனிதாவின் தந்தை ஆனந்த் சென்னையிலிருந்து கனடா சென்று குடியேறிய மருத்துவர். அனிதா பொலிட்டிகல் சயின்ஸ், சட்டம், கார்ப்பரேட் சட்டம், நிதி நிர்வாகம் என்று நான்கு பட்டங்கள் வாங்கியவர். சட்டப் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருந்தபடி, நிதி நிர்வாக ஆலோசனைகளும் வழங்கிவந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார் அனிதா. பொதுச் சேவைகள் அமைச்சராக கொரோனாத் தடுப்பூசி மற்றும் மருந்துகள் வாங்கும் பொறுப்பைச் சிறப்பாகச் செய்து பெயர் வாங்கினார். கொரோனாத் தொற்றை கனடா வெற்றிகரமாக சமாளிப்பதற்கு அனிதா முக்கிய காரணமாக இருந்தார். அதற்குப் பரிசு, பாதுகாப்பு அமைச்சர் பதவி. அனிதாவின் கணவர் ஜான், கனடாக்காரர். எட்டுத்திக்கும் தமிழ்!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளச் சென்ற சசிகலா, வழியில் நடவுப் பாடல் பாடியபடி வயலில் நடவு செய்துகொண்டிருந்த பெண்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார். சிறிது நேரம் அவர்கள் பாடிய நடவுப் பாட்டைக் கேட்டு ரசித்தபிறகு காரிலிருந்து இறங்கிய சசிகலா, ``ரொம்ப நல்லா பாடுறீங்க'' என்று பாராட்டினார். விவசாயப் பெண்கள் வெட்கத்தில் தலைகுனிந்துள்ளனர். பின்னர் சசிகலா அவர்களுக்கு சால்வை கொடுத்து மரியாதை செய்துவிட்டு, மறக்காமல் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார். மண்மணம்!

சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், 22 நாள்களுக்குப் பிறகு மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆர்யனுக்கு பிணை கொடுத்தவர், ஷாருக்கின் குடும்ப நண்பரான நடிகை ஜூஹி சாவ்லா. ஷாருக்கின் மன்னத் மாளிகை முன்பு ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆர்யன் கானுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். ஆர்யன் வந்த கார், ரசிகர்களுக்காக ஒரு நொடிகூட நிற்காமல் நேராக மாளிகைக்குள் போய்விட்டதில் எல்லா ரசிகர்களுக்கும் ஏமாற்றம். உண்மையும் வெளிவரட்டும்!

கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர். விழாவில் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 98 வயது நிரம்பிய செல்லதுரை கலந்துகொள்ள, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் செந்தில் பாலாஜி. தான் அமர்ந்து படித்த வகுப்பறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினார். அதே மனநிலையோடு நிகழ்வில் பேசிய செந்தில் பாலாஜி, ''கட்டடம், கரும்பலகை, மேஜைகள் மாறினாலும், காற்றில் இன்றும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் குரல்கள் ஒலிக்கின்றன. நான் படித்த காலத்தில் இந்தப் பள்ளியில் சேர ஏகப்பட்ட போட்டியாக இருக்கும். அந்த ஞாபகமெல்லாம் மனதில் வந்து அலைமோதியது'' என்று நெக்குருகினார். பள்ளிக்கூட ப்ளாஷ்பேக்!

மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ சினிமா `மின்னல் முரளி.' இது தனது கரியரில் மிகப்பெரிய படம் எனக் கூறியிருக்கிறார், டொவினோ தாமஸ். ஆனால், ``இது ஸ்பைடர்மேன் காப்பி'' என்று கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள். ஸ்பைடர் மேன் படத்தில், சிலந்தி கடிப்பதால் ஹீரோவுக்கு புதிய சக்தி கிடைக்கும். அதுபோல, கேரளாவின் சிறிய கிராமத்தில் டெய்லராக வேலைசெய்யும் முரளியை ஒருமுறை மின்னல் தாக்கியதால் அவருக்குள் அதிசயமான பலம் வந்து சேரும். ஸ்பைடர் மேன் உடலை இறுக்கிய உடையுடன், நெஞ்சில் சிலந்திப் படத்துடன் களமிறங்குவார். மின்னல் முரளி அதுபோன்ற டைட் உடையில் நெஞ்சில் ஆங்கில `எஸ்' எழுத்தைப் பொறித்து சாகசம் செய்கிறார். `ரைட்ஸ் வாங்காம ஸ்பைடர்மேனை ரீமேக் பண்ணிட்டாங்க' என இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்துக் கலாய்க்கிறார்கள் ரசிகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

இன்பாக்ஸ்

``ஒரு குழந்தை பிறக்கும்போது, ஒரு அம்மாவும் சேர்ந்து பிறக்கிறாள். எனக்கு மகள் பிறந்தபோது நான் அப்படித்தான் உணர்ந்தேன்'' என்று பூரிக்கிறார் நடிகை ஸ்ரேயா. மகள் ராதா பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது. ``இனியும் இவளை உலகத்தின் கண்களிலிருந்து மறைத்துவைக்க விரும்பவில்லை'' என்று சொல்லி, இன்ஸ்டாகிராமில் மகளின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. ``ராதா இப்போ எனக்கு ஒரு நல்ல தோழி. பார்சிலோனாவில் பிறந்த அவள், அதற்குள் பாதி உலகத்தைச் சுற்றிவிட்டாள். இப்போது மும்பையில் அவளை விட்டுவிட்டு, நான் மீண்டும் ஷூட்டிங் செல்ல ரெடியாகிறேன். கர்ப்ப காலத்தில் ஏறியிருந்த எடையைக் குறைத்து இப்போது பழைய ஸ்ரேயாவாக கேமரா முன்பு நிற்கிறேன்'' என்கிறார் அவர். வாழ்த்துகள்!

புதுக்கோட்டையில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகள் இணைந்து, `இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்' எனும் நிறுவனத்தை நடத்துகின்றனர். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி, பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகின்றனர். பாரம்பரிய அரிசி ரகங்கள் மற்றும் சிறுதானியங்களில், வரகு முறுக்கு, கம்பு, ராகி, தினை லட்டுகள், தூயமல்லி ஓலப்பக்கோடா, கவுனி அதிரசம், மாப்பிள்ளைச் சம்பா சீடை என்று பலகாரங்களைத் தயாரிக்கின்றனர். இவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட இந்தியா முழுக்கப் போகின்றன. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே தயாரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தீபாவளிப் பண்டிகையொட்டி ஆர்டர்கள் குவிந்துள்ளதால், சிறுதானியப் பலகாரங்கள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இனிக்கட்டும் வாழ்வு!

இன்பாக்ஸ்

அபுதாபி டி-10 லீகில் விளையாடும் அபுதாபி அணிக்குத் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், இங்கிலாந்து ஜாம்பவான் சாரா டெய்லர். ஆண்கள் கிளப் கிரிக்கெட்டில் பயிற்சியாளர் பொறுப்பேற்கும் முதல் பெண் இவர்தான். பேட்டிங், விக்கெட் கீப்பிங் என ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் படைப்பதும், உடைப்பதும் ஹாபியாக வைத்திருந்த சாரா, இப்போது கோச்சிங் ஏரியாவிலும் ரெக்கார்ட் பிரேக்கராகக் கால் பதிக்கிறார்! மாற்றம்... முன்னேற்றம்!

இந்தியாவில் சுமார் 11.83 கோடி டோஸ் இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரான், வெனிசூலா, பிலிப்பைன்ஸ் என 10 நாடுகள் அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து இந்தியாவிலிருந்து இதை வாங்கிப் பயன்படுத்துகின்றன. என்றாலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. 10 மாதங்கள் ஆகியும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு. ``சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு மட்டும் போதுமான தகவல்கள் இல்லாதபோதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தடுப்பூசிக்கு வேண்டுமென்றே பாரபட்சம் காட்டப்படுகிறது'' என்று பொங்குகிறார்கள் மருத்துவர்கள் பலர். ``இன்னும் சில தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறோம். அவை கிடைத்ததும் விரைந்து முடிவெடுப்போம்'' என்று சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். அரசியல் தவிர்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிரமாண்ட விழாக்களைத் தொடர்ந்து நடத்தி அட்ராசிட்டி செய்து வந்த ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதாவுக்காகக் குன்னத்தூரில் கோயில் கட்டி ஆன்மிக அரசியலின் உச்சத்துக்கே சென்றார். தேர்தலுக்குப் பின் இருக்கும் இடமே தெரியாமல்போன நிலையில், மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்ப தற்போது யூடியூபராக அவதாரமெடுத்துள்ளார். 'டிஜிட்டல் பஞ்சாயத்து' என்ற பெயரில் தி.மு.க அரசுக்கு எதிராக தினமும் ஒரு பிரச்னையை அவரே எழுப்பி, அவரே அதை அலசிக் காயப்போடுவதை வீடியோவாக யூடியூபில் வெளியிடுகிறார். `எப்படி இருந்த மனிதர் இப்படி ஆயிட்டாரே' என்று ஆதரவாளர்கள் சப்ஸ்கிரைப் செய்வதற்குப் பதிலாக `உச்' கொட்டுகிறார்கள். பாவத்த!