சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

விக்ரம், த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
விக்ரம், த்ரிஷா

‘மலையகத்தின் சமவெளி’ என அழைக்கப்படும் நீலகிரியின் கூடலூர், இதமான காலநிலையைக் கொண்ட பகுதி. தேயிலைத் தோட்டமும் நெல் வயலும் அருகருகே செழிக்கும் அதிசய பூமி.

இன்பாக்ஸ்

பிரபு படப்பிடிப்பில் கலந்துகொண்டால் அன்று மதியம் அவர் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு அதன் அபரிமித ருசிக்காக மிகவும் பேசப்படும். இப்போது ‘பொன்னியின் செல்வன் 2' எடிட்டிங்கில் இருக்கும் இயக்குநர் மணிரத்னத்திற்கு ஒரு தடவை மாலை டிபனும், காபியும் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்தார் பிரபு. அந்த காபியின் ருசியை மணிரத்னம் பாராட்ட, இப்போது அடிக்கடி மணிரத்னம் ஆபீஸுக்கு பிளாஸ்க்கில் காபியை அனுப்பிவிடுகிறார் பிரபு. காபி ஃப்ரம் அன்னை இல்லம்!

சல்மான் கானின் வாழ்க்கை வரலாற்றை சமீர் நாயர் என்பவர் டாக்குமென்ட்ரியாகத் தயாரித்து வருகிறார். சல்மான் கான் படங்களில் அதிகமாகப் பணியாற்றியவர் சமீர் நாயர். சல்மான் கானுக்காக எதையாவது செய்ய நினைத்து, கொரோனா லாக்டௌன் காலத்தில் சல்மானின் நண்பர்களுடன் பேசி இந்த வேலையை ஆரம்பித்தார் சமீர் நாயர். சல்மான் கானின் ஒப்புதலோடு டாக்குமென்ட்ரி பணி முழுவேகத்தில் நடந்துவருகிறது. சல்மான் பிறந்த நாளில் இதன் வெளியீடு நடைபெறுமாம். படத்துல நிறைய ஹீரோயின்ஸ் இருப்பாங்களே!

இன்பாக்ஸ்

‘பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பின் த்ரிஷாவின் சினிமா கிராஃப் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்கிறார் எனச் சொல்லியிருந்தோம். இப்போது, இன்னும் ஆச்சரியம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கும் த்ரிஷாவிடம் பேசிவருகிறார்கள். அஜித் - த்ரிஷா ஜோடி ஏற்கெனவே ‘கிரீடம்', ‘என்னை அறிந்தால்' படங்களில் இணைந்திருக்கிறது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி கைகோக்கும் தருணம் வாய்த்திருக்கிறது. ரொம்ப தூரம் போகல ஜானு!

இன்பாக்ஸ்

கேரளாவை மூழ்கடித்த 2018 வெள்ளம் குறித்துத் திரைப்படம் ஒன்று மலையாளத்தில் தயாராகிவருகிறது. ‘2018’ (2018 Every One is A Hero) என்ற பெயரில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், அஞ்சு வர்கீஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஜூட் ஆன்டணி ஜோசப் இயக்குகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கதை ரெடியாகி, இப்போதுதான் ஷூட்டிங் போகிறார்கள். ‘`இந்த சினிமாக் கனவு கொரோனாவால் தாமதமாகிவிட்டது. இந்தக் கனவைச் சுமந்து தினமும் தூக்கம் இல்லாமல் தவித்தேன்’’ என ஜூட் ஆன்டணி ஜோசப் கூறியுள்ளார். திரை வெள்ளம்!

கமலின் ‘இந்தியன் 2' கதையில் அதிரடியாக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மெயின் வில்லன் ரோல் ஒன்றும் சேர்த்திருக்கிறார்கள். அது சத்யராஜுக்கு செமயாக செட் ஆகும் எனக் கருதியிருக்கிறார் கமல். ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்' படத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த நட்பில் ஷங்கரே, சத்யராஜ் வீட்டிற்குச் சென்று கதை சொல்லியிருப்பதாகத் தகவல். வைரஸ் வெர்ஷன் 2?

இன்பாக்ஸ்

பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் ‘தங்கலான்' படப்பிடிப்பு கடப்பாவில் ஆரம்பித்து இப்போது மதுரை பகுதிகளில் மும்முரமாக நடந்துவருகிறது. இது 19-ம் நூற்றாண்டின் கதை என்பதால், வில் அம்புகளைக் கையாள்வதற்குப் பயிற்சி எடுத்துவருகிறார் விக்ரம். படப்பிடிப்பில் சில நடிகர்கள் அதிக டேக்குகள் வாங்குகிறார்கள் என்றாலும், ரஞ்சித் சிரித்த முகமாக அவர்களிடம் வேலை வாங்கும் நேர்த்தியை மொத்த யூனிட்டுமே புகழ்கிறதாம். தங்கவயலில் தங்கலான்!

சூர்யாவின் பிள்ளைகளை மும்பைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அதனால் ஜோதிகா மும்பையில் இருக்கிறார். சேர்ந்த மாதிரி விடுமுறை கிடைத்தால் சென்னைக்குக் குழந்தைகளோடு வந்துவிடுகிறார் ஜோ. சூர்யாவுக்கும் இப்போது பெரும்பாலும் படப்பிடிப்பு கோவாவில் இருப்பதால் அவருக்கும் மும்பை போய்விட வசதியாக இருக்கிறது. மேற்படிப்புக்காக சூர்யா-ஜோவின் மகள் தியா விரைவில் அமெரிக்கா போகவிருக்கிறார். மும்பையில் ரோலக்ஸ்!

இன்பாக்ஸ்

அமிதாப்பச்சன் எப்போதும் மீடியாவிடம் அன்பாகவே இருப்பார். ஆனால், அவர் மனைவி ஜெயா பச்சன், மீடியாக்காரர்களைக் கண்டாலே எரிந்துவிழுகிறார். அமிதாப்பச்சனுக்கு மும்பையில் இரண்டு வீடுகள் இருக்கின்றன. இதில் ஜுகுவில் இருக்கும் ஜல்சாவில்தான் வசித்துவருகிறார். அவர்களுக்கு பிரதிக்‌ஷா என்ற பங்களாவும் இருக்கிறது. இந்த பங்களாவில் பூஜை செய்வதற்காக சமீபத்தில் இருவரும் வந்தனர். வீட்டிற்கு வெளியில் பத்திரிகையாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஜெயாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘இங்கே ஏன் போட்டோ எடுக்கிறீர்கள்? போங்கள்...’’ என்று திட்டினார். இச்சம்பவத்திற்குச் சில நாள்களுக்கு முன்புதான் தன் பேத்தியுடன் ஒரு ஃபேஷன் ஷோவுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களை ஜெயா பச்சன் திட்டித்தீர்த்திருந்தார். பாலிவுட் அண்ணாமலை!

இன்பாக்ஸ்

விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற ஜெயப்பிரியா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரின் கணவரும் இரு பிள்ளைகளும் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சுற்றித் திரிந்த ஜெயப்பிரியாவை தன்னார்வலர்கள் மீட்டு, திருப்பத்தூர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைத்து மனநல சிகிச்சை பெறச் செய்தனர். இந்த நிலையில் அவர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பின. உடனே அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் போனது. பேரதிர்ச்சி என்னவென்றால், இடைப்பட்ட காலங்களில் ஜெயப்பிரியாவின் கணவர் உயிரிழந்துவிட்டார். எனினும், திருமண வயதை எட்டிய மகளைக் கண்டதும் ஆரத்தழுவி முத்தமிட்டார். தாயைக் கட்டிப்பிடித்து மகளும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். குடும்பக் கூட்டுக்குள் கீச்சிடும் பாசப்பறவையாக மீண்டும் இணைந்திருக்கிறார் ஜெயப்பிரியா. மகிழ்ச்சி பொங்கட்டும்!

இன்பாக்ஸ்

கோவை மாவட்டத்தில் யானை – மனித எதிர்கொள்ளல் தவிர்க்கவே முடியாத பிரச்னையாக உருவெடுத்துவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட வாட்ஸப் குழு நம்பிக்கையை விதைத்துள்ளது. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், வனத்துறையினர், பத்திரிகையாளர்கள், அந்தந்தப் பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் என்று பலர் அடங்கிய அந்த வாட்ஸப் குழுவுக்கு ‘தடம் கோவை குழு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வனத்துறையினர் அன்றைய தினம் யார் இரவுப் பணியில் உள்ளார்களோ, அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் அந்தக் குழுவின் பட்டியலில் வந்துவிடும். யானைகள் எங்காவது வந்தால், பொதுமக்கள் குழுவில் உடனடியாக அப்டேட் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முடிகிறது. இதில் நல்ல பலனும் கிடைக்கிறது. யானைத்தடம் தேடி...

இன்பாக்ஸ்

கும்பகோணம் அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் நூற்றாண்டுப் பழைமையான பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஜப்பானிலிருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். தமிழ், தமிழர்களின் கலை, பண்பாடு, தமிழ்க் கடவுள்கள்மீது கொண்ட பற்று ஆகியவற்றின் காரணமாக ஜப்பானிலிருந்து வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கோரஸாகத் தெரிவித்த அவர்கள், சிவ மந்திரங்களைத் தமிழில் சொல்லி அசத்தியது பலரையும் கவர்ந்தது. ஜப்பான் தமிழே!

இன்பாக்ஸ்

‘மலையகத்தின் சமவெளி’ என அழைக்கப்படும் நீலகிரியின் கூடலூர், இதமான காலநிலையைக் கொண்ட பகுதி. தேயிலைத் தோட்டமும் நெல் வயலும் அருகருகே செழிக்கும் அதிசய பூமி. கூடலூரில் இன்றளவும் பாரம்பர்ய முறையில் நெல் சாகுபடி செய்துவருகிறார்கள். நெல் சாகுபடியில் கைதேர்ந்த பணியர் பழங்குடிகள் இன்றைக்கு நிலம் இழந்த கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் பழைமை மறவாத பணியர் பழங்குடிகள் வந்தே ‘பூப் புத்தரி’ எனும் முதல் அறுவடையைத் தொடங்கி வைக்கின்றனர். புது நெல்லை பயபக்தியுடன் அறுவடை செய்து, பாரம்பர்ய இசை முழங்க ஆடல் பாடலுடன் இயற்கைக்கும் இறைவனுக்கும் படைத்து நன்றி தெரிவிக்கிறார்கள். பங்கேற்கும் பக்தர்களுக்கும் புது நெல் மணிகளைப் பிரசாதமாக வழங்குகிறார்கள். அறுவடைப் பிரசாதம்!