சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா படுகோன்

கோவைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததுதான். டீ குடிப்பதற்காக ஊட்டி செல்லும் கோவைவாசிகளுக்கும், கடலுக்கும் ஒரு கனெக்ட் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது

இன்பாக்ஸ்

தீபிகா படுகோன் சருமப் பராமரிப்புப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுவந்து பிசினஸ் வுமனாகவும் மாறுகிறார். அன்றாடம் தான் பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய இந்தியப் பொருள்களைக் கொண்டு இவை தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ள தீபிகா, தனது பிராண்டிற்கு 82°E என்று பெயரிட்டுள்ளார். ஆன்லைனில் விற்பனை விரைவில் ஆரம்பிக்கிறது. பாரம்பரிய பராமரிப்பு!

இன்பாக்ஸ்

விக்னேஷ் சிவன் படம் முடிந்தவுடன் அஜித் ஆறு மாதம் ரெஸ்ட் எடுக்கிறார். திருவான்மியூரில் அவர் கட்டிவரும் வீட்டுப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குத்தான் இந்த இடைவெளியாம். இதற்கு நடுவில் மைத்துனி ஷாமிலியின் திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்துவருவதால் அதற்கும் இந்த விடுமுறை தேவைப்படுகிறதாம். இதற்கிடையில் ஆண்டுக்கு ஒருமுறை ரசிகர்களைச் சந்திக்கவும் திட்டமிடுகிறாராம். நேரு ஸ்டேடியம் மாதிரி ஓர் இடத்தில் சந்திப்பு நடத்த நினைக்கிறாராம். வரும் ஜனவரியில் முதல் சந்திப்பு இருக்கலாம் எனச் செய்திகள் கசிகின்றன. ‘துணிவு' அப்டேட் இதுதாங்க!

இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்', கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலைப் பற்றிப் பேச இருக்கிறது. ரஜினி இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என அறிவிக்கப் பட்டாலும்கூட படம் முழுவதிலும் அவரை வரவழைக்கப் போகி றார்களாம். அதற் கேற்றாற்போல கதையில் சில மாற்றங்களைச் செய்து வருகிறார் ஐஸ்வர்யா. காம்ரேட் ரஜினிகாந்த் வருகிறாரா?

இன்பாக்ஸ்

எழுத்தாளர் பூமணி தமிழக அரசு அளித்த சென்னை வீட்டுக்குக் கோவில்பட்டியிலிருந்து வந்து சேர்ந்துவிட்டார். முதுமையைச் சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு பெரும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். கரிசல் பூமியின் விவசாயி வாழ்க்கை குறித்த அந்த நாவல் அடுத்த ஆண்டு வெளியீடாக இருக்கும். அதோடு தன் பிற நாவல்கள் சினிமாவாக மக்களிடம் போய்ச் சேர அவர் ஆவலோடு இருக்கிறார். டைரக்டர்ஸ், நோட் பண்ணுங்க!

லோகேஷ் கனகராஜின் ‘விஜய்-67'ல் வில்லனாக நடிக்க அர்ஜுனைக் கேட்டார்கள். ஆனால், அவரது டைரக்‌ஷன் கமிட்மென்ட்களால் அது முடியாமல் போனது. அடுத்து விஷாலிடம் பேசினார்கள். அதைப் போல, மிஷ்கினிடமும் இதில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கக் கேட்டுவருகிறார்கள். ஏற்கெனவே அவர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்' படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். அநேகமாக 2023-ல் நடிகராக மிஷ்கின் பிஸியாக இருப்பார். கூலிங்கிளாஸை ரெடி பண்ணுங்க!

இன்பாக்ஸ்

கோவைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததுதான். டீ குடிப்பதற்காக ஊட்டி செல்லும் கோவைவாசிகளுக்கும், கடலுக்கும் ஒரு கனெக்ட் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. தமிழ்நாட்டின் கடற்கரைகள் எல்லாம் கோவைக்கு மிகவும் தொலைவில் உள்ளன. ஆனால், கோவையிலிருந்து 100 – 150 கி.மீ தொலைவிலேயே கேரளாவின் திருச்சூர், கோழிக்கோடு, கொச்சி பகுதிகளில் நிறைய கடற்கரைகள் உள்ளன. வீக் எண்டில் பொறுமையாக எழுந்து கிளம்பினால்கூட, 3 மணி நேரத்தில் கடற்கரையை அடைந்துவிடலாம். அங்கு என்ஜாய் செய்துவிட்டு இரவுக்குள் வீடும் திரும்பிவிடலாம். இதனால், கோவைவாசிகளின் வீக் எண்ட் ட்ரிப் பட்டியலில் இப்போது கேரளக் கடற்கரைகள் அதிகம் இடம்பெறுகின்றன. அடிப்பொலி!

கமலின் ‘இந்தியன் 2' படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது. ஷங்கரின் ஆஸ்தான கலை இயக்குநர் முத்துராஜின் கைவண்ணத்தில் பல செட்கள் அங்கே அமைத்துள்ளனர். அதில் பிரமாண்ட கப்பல் செட்டும் ஒன்று. கமலே அந்தக் கப்பலைப் பார்த்து வியந்துவிட்டார் என்கிறார்கள். `கப்பல் ஏறிப் போயாச்சு...' பாட்டும் இருக்கோ!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் எம்.எம்.பாபு. இவர் தனது ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், தெருவிளக்கு பராமரிப்பு ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சத்திற்கான காப்பீட்டு வசதியை தனது சொந்தச் செலவிலேயே செய்து, அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார். ‘‘ஊருக்காகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாமதானே எல்லாத்தையும் செய்யணும்'' என்கிறார் பாபு உருக்கமாக. ஊருக்கு ஊர் இதைச் செய்யணும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதலில் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அரசுப் பேருந்துகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. மக்களிடம் வசவுகளை மட்டுமே வாங்கி வரும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மற்றொரு பக்கத்தைக் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘என்ஜின் ஆஃப் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம். காம்ரேட் டாக்கீஸ் மற்றும் சி.ஐ.டி.யு. போக்குவரத்து சம்மேளனம் இணைந்து இதைத் தயாரித்துள்ளனர். ஒற்றை அரசுப் பேருந்தை மட்டுமே இன்றளவும் நம்பியிருக்கும் நீலகிரியின் கடைக்கோடி கிராமங்களான சோலூர்மட்டம், கடசோலை, இரியசீகை போன்ற பல பகுதி மக்களுக்கு அரசுப் பேருந்து வழங்கும் அளப்பரிய சேவையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்‌. பொலிவு பெறட்டும் அரசுப் பேருந்துகள்!

சல்மான் கான் மீண்டும் சூரஜ் பர்ஜாத்யாவுடன் கூட்டணி சேர்கிறார். சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தோல்வியைச் சந்தித்துவருவதால் ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’, ‘ஹம் சாத் சாத் ஹைன்’ போன்ற தனது பழைய வெற்றிப்படங்களை இயக்கித் தயாரித்த சூரஜுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவது குறித்து சல்மான் கான் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். சூரஜ் இதற்கு சம்மதம் கொடுத்துள்ளார். சூரஜின் ‘ஊஞ்சாய்' படம் சமீபத்தில் வெளியானது. சக்சஸ் காம்பினேஷன்!

இன்பாக்ஸ்

முதுமையில் மறதியால் தவிப்போருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக நெல்லையில் ஒரு நெகிழ்ச்சிச் சம்பவம். கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த சிஜி மேத்யூ என்ற 70 வயது முதியவர், நெல்லையில் வசிக்கும் தன் மகன் வீட்டுக்கு வந்துள்ளார். காலையில் வாக்கிங் சென்ற அவருக்கு மீண்டும் மகன் வீட்டுக்குச் செல்ல வழிதெரியவில்லை. சாலையில் பரிதவித்து நின்ற அவரை, நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உடனே ஆதரவற்றோர் மையத்தில் சேர்த்தார். பின்னர் நெல்லையில் உள்ள கேரள அசோசியேஷன் உதவியுடன் அந்த முதியவரின் மகன் வீடு கண்டுபிடிக்கப்பட்டு, மறுநாள் அங்கு போய்ச் சேர்ந்தார். மறதி நோய் உள்ளவர்கள் தங்கள் பாக்கெட்டில் வீட்டு முகவரியை வைத்துக்கொண்டால் நல்லது. வீடு திரும்பல் நிம்மதி தரும்!

இன்பாக்ஸ்

தமிழகக் காவல்துறையில் பணிக்காலத்தில் மரணமடையும் சக ஊழியர் குடும்பத்துக்கு காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தனித்தனி அமைப்பு மூலம் உதவி வருகிறார்கள். இதில் 8,000 பேரைக் கொண்ட ‘2003-ஆம் ஆண்டு பேட்ச் உதவும் கரங்கள்' என்ற அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மரணமடையும் சக காவலர்களின் குடும்பத்துக்குச் சத்தமில்லாமல் பெரிய அளவில் உதவி செய்து வருகிறார்கள். சமீபத்தில், மதுரையில் மரணமடைந்த கோட்டைச்சாமி என்ற காவலரின் குடும்பத்திற்கு ரூ. 29,16,000 நிதியை வசூலித்து வழங்கியுள்ளார்கள். இதுவரை இதுபோல் 41 காவலரின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்கள். சல்யூட், 2003-ஆம் பேட்ச் காவலர்களே!