கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

கமல் - ஹெச்.வினோத் கைகோத்திருக்கும் படம் க்ரைம் த்ரில்லர் ஜானர் என்கிறார்கள். இந்தப் புத்தாண்டில் படத்தின் டைட்டிலை அறிவித்துவிடலாம் என ராஜ்கமல் நிறுவனத்தினர் திட்டமிட்டனர்.

இன்பாக்ஸ்

அடர் தாடி வளர்த்துப் புது லுக்கில் இருக்கிறார் ஆர்யா. ‘விருமன்’ இயக்குநர் முத்தையாவின் படத்திற்கான லுக் இது. ‘விருமன்’ வெற்றிக் கொண்டாட்ட வேளையில் ஆர்யா படத்தையும் தொடங்கிய முத்தையா, அதே வேகத்தில் கோவில்பட்டியில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். ஆர்யாவின் ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி நடித்து வருகிறார். புழுதி பறக்கட்டும்!

இன்பாக்ஸ்

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த ஹன்சிகா, முக்கியமான கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலுக்காகவே இந்த விசிட். ஆச்சர்யமாக சிம்புவையும் அவரது வீட்டில் சென்று சந்தித்து திருமணத்திற்கு அழைத்திருக்கிறார். நாகரிகம் வழிந்தோடிய சந்திப்பாக இது நடந்திருக்கிறது. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என சிம்பு மனப்பூர்வமாக வாழ்த்துவது அவருக்குப் புதிதல்ல. கல்யாணத்துக்கு வரலாமா?

இன்பாக்ஸ்
படம்: கிரன்சா

படிப்படியாக படங்களைக் குறைத்துக்கொண்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தம்பதிகள் சுரேஷ்-மேனகா தங்களின் கடைக்குட்டி மகள் கீர்த்திக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள். கீர்த்தி சினிமாவை விட்டு விலகிவிடாமல், தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவார். அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்க முடிவெடுத்து அறிவித்தும்விட்டார்கள். மிஸ் யூ!

இன்பாக்ஸ்

கங்கனா ரணாவத் அடுத்து ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்துப் படம் எடுக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது அசாமில் தொடங்கியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாவை சந்தித்துப் பேசினார் கங்கனா. இந்திரா காந்தி குறித்த படம் என்பதால், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க பா.ஜ.க ஆளும் அசாமில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார் கங்கனா. செம உஷார் நாயகி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

காட்டு யானைகளுக்குப் பெயர் வைத்து அழைப்பது தமிழ்நாடு, கேரளாவில் வழக்கமான ஒன்று. தமிழ்நாட்டை விட கேரளாவில் யானைகளை மாஸ் ஹீரோக்களைப் போல கொண்டாடுவார்கள். அதுவும் தமிழ்நாட்டு எல்லையில் உள்ள பகுதிகளில் யானைகளுக்கு ரஜினி படங்களின் பெயர்களைத்தான் அதிகம் வைக்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிக்கடி வரும் யானையின் பெயர் ‘படையப்பா.’ இது சற்றே அமைதியான யானை. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி பகுதியில் உள்ள யானை இதற்கு நேர் எதிரானது. வாகனங்களைப் பார்த்தாலே துரத்தித் தாக்குகிறது. சமீபத்தில் ஒரு பேருந்து இந்த யானை துரத்திதான் 8 கி.மீ ரிவர்ஸ் கியரில் பயணித்தது. அந்த யானைக்கு ‘கபாலி’ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த இரண்டு யானைகள் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து, அதில் ரஜினி பாடல்களை இணைத்து வைரலாக்குவது அவர்களின் முக்கியப் பொழுதுபோக்கு. நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்..!

இன்பாக்ஸ்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இருக்கிறது தட்டான்குட்டை. இந்த ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கும் புஷ்பா, படித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்துவந்தார். திடீரென்று கடந்த தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிற்க வைக்கப்பட, மக்களும் அவரை ஜெயிக்க வைத்தனர். 100 வருட பட்டியல் சமுதாய மக்களின் சுடுகாட்டுப் பாதை பிரச்னையைத் தீர்த்தது, கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியது, ரூ.10 லட்சம் அரசு நிதி பெற்றுப் பாசன ஏரியைத் தூர் வாருவது என்று இவரது செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கின்றன. இதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ள புஷ்பாவை முன்னாள் அமைச்சர் தங்கமணியும் அழைத்து, வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். சிங்கப்பெண்ணே!

இன்பாக்ஸ்

பிரபல தாதாவாக இருந்து பல்வேறு வழக்குகளைச் சந்தித்து மதுரையின் ஒரு அடையாளமாகி, தாத்தாவான பிறகும் கிலோக்கணக்கில் நகைகளை அணிந்து நடமாடும் ஜூவல்லரியாக சமூக ஊடகங்களில் வலம் வந்து சிறுவர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார் வரிச்சியூர் செல்வம். இவரைச் சந்திக்க ஆசைப்பட்டார், நெட்டிசன்களைக் கதற வைக்கும் நடிகர் கூல் சுரேஷ். நண்பர் மூலம் தகவல் சொல்லி சமீபத்தில் மதுரையில் சந்தித்தார். இருவரும் சேர்ந்து நடிக்கத் திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். வெந்து தணிந்தது காடு... வரிச்சியூராருக்கு ஒரு கும்பிடு போடு!

கமல் - ஹெச்.வினோத் கைகோத்திருக்கும் படம் க்ரைம் த்ரில்லர் ஜானர் என்கிறார்கள். இந்தப் புத்தாண்டில் படத்தின் டைட்டிலை அறிவித்துவிடலாம் என ராஜ்கமல் நிறுவனத்தினர் திட்டமிட்டனர். ஆனால், ‘துணிவு’ ரிலீஸுக்குப் பின்னர் அறிவியுங்கள் என வினோத் சொல்லிவிட்டாராம். பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். மூணு எழுத்து டைட்டிலா?

இன்பாக்ஸ்

வேலூர் மாவட்டக் காவல்துறையின் துப்புறியும் நாய்கள் படைப்பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக ‘தளபதி’ நாயாக வீறுநடையிட்டு வலம்வந்த ‘சிம்பா’ நவம்பர் 15-ம் தேதி மரணமடைந்துவிட்டது. மூன்று மாதக் குட்டியாக மோப்ப நாய்ப்பிரிவில் சேர்க்கப்பட்ட சிம்பா, 300-க்கும் அதிகமான வழக்குகளில் திறம்படச் செயல்புரிந்தது. சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் நடந்த கோடை விழா நாய்கள் கண்காட்சியிலும் பங்கேற்று தனது கருமைநிற வசீகர அழகாலும், கம்பீரத்தாலும் முதல் பரிசை வென்று, வேலூர் மாவட்டக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்தது. இந்நிலையில், முதுமை காரணமாகவும், கல்லீரல் புற்றுநோய் பாதிப்பாலும் சிம்பா மறைந்திருக்கிறது. எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீஸார், அரசு மரியாதையுடன் சிம்பாவின் உடலை வசந்தபுரத்திலுள்ள மோப்பநாய்கள் பிரிவு மைதானத்தில் நல்லடக்கம் செய்தனர். ஹேட்ஸ் ஆஃப் சிம்பா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ‘கலெக்டருடன்‌ ஒருநாள்’ எனும் பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக, விருதுநகர்‌ மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான செம்பருத்தி, விவேகா, நதியா, கர்ணன், சிவபாலன் ஆகிய 5 பேரை மாவட்ட ஆட்சியரே தேர்வு செய்து தனது இல்லத்திற்கு வரவழைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் மேகநாத ரெட்டியுடனே காரில் கிளம்பிய அவர்கள், ஆய்வுப் பணிகள், குறைதீர் கூட்டம் என ஆட்சியரின் அன்றைய பணிகள் முழுவதிலும் உடனிருந்து கவனித்தனர். ஆட்சியர் மேகநாதரெட்டியும், தன் பணிகள் தொடர்பாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதில் தந்தார். ஆட்சியருக்குக் கிடைத்த மரியாதைகளைப் பார்த்து அவர்களும் ஆசையுடன் படிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பு. ஆட்சியர் போட்ட விதை விருட்சமாகட்டும்!

கவுண்டமணி கடைசியாக நடித்த படம் ‘வாய்மை.’ இப்போது அவருக்கு மீண்டும் நடிக்கும் எண்ணம் வந்துவிட்டதால், கதைகள் கேட்டுவருகிறார். இடையில் சிவகார்த்திகேயனும் அவரது படத்தில் நடிக்கக் கேட்டுப் பார்த்தார். அது கைகூடவில்லை. கவுண்டமணியிடம் அறிமுக இயக்குநர்கள் பலர் கதை சொல்ல ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் சில சந்திப்புகள் பேசிப் பழகிய பின்னரே கதைகள் கேட்க நேரம் ஒதுக்குகிறார். அடுத்த ஆண்டில் அவரது பட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். வெல்கம் பேக் கவுன்ட்டரே!

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் ஒரே சமயத்தில் நிறைவு செய்துவிட்டார் வெற்றிமாறன். அடுத்து அவர் கமலிடம் சொன்ன ஒன்லைனை டெவலப் பண்ணும் வேலைகளில் இறங்குகிறார். அதே சமயத்தில் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகளிலும் ஒரு கண் வைத்துக்கொள்வார். ‘விடுதலை’ ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்று பேச்சு இருக்கிறது. காத்திருப்போம்!