தொடர்கள்
சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

ரொம்ப நாளைக்குப் பிறகு ஆர்யா, விஷால், ஜெயம் ரவி கூட்டணி ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டில் வைத்துக் கூடியிருக்கிறது.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வேலூரின் இதயப்பகுதியாக விளங்கும் ‘கிரீன் சர்க்கிள்’ மேம்பாலத்தைச் சுற்றிலும் போஸ்டர்களை ஒட்டி அரசியல் கட்சியினர், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரையும், மாநகராட்சிப் பணியாளர்களையும் கடுப்பேற்றிவந்தனர். அந்த போஸ்டர்களைக் கிழிப்பதே அவர்களுக்கு அன்றாட வேலையாக மாறிப்போனது. இந்த நிலையில், அரசியல் கட்சியினரின் அட்டகாசத்துக்கு ‘செக்’ வைக்கும் விதமாக, உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தை வண்ணமயமாக மாற்றிவருகிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டையை பிரமாண்ட ஓவியமாக இதில் வரைந்து அசத்தியிருக்கிறார்கள் ‘தெருவோர’ ரவிவர்மாக்கள். ஓவியப் பாலம்!

ரொம்ப நாளைக்குப் பிறகு ஆர்யா, விஷால், ஜெயம் ரவி கூட்டணி ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டில் வைத்துக் கூடியிருக்கிறது. இந்தச் சங்கமத்தில் மூவரும் சேர்ந்து ஒரு திரைப்பட நிறுவனம் நடத்துகிற யோசனையும் பரீசிலிக்கப்பட்டதாம். நடிப்பதை நிறுத்திவிட்டு துபாயில் செட்டிலாகிவிட்ட ஆர்யாவின் தம்பி சத்யா திரும்பிவந்து இந்த நிறுவனத்தை நடத்தப்போவதாக முடிவெடுத்திருக்கிறார்கள். ‘ஹீரோ'ஸ் கூட்டணி!

தீபிகா படுகோனும், கத்ரீனா கைஃப்பும் ஒருவருக்கொருவர் நட்பாக இருந்ததில்லை. இப்போது இரண்டு பேரும் ஒரே ஜிம்மிற்குச் செல்கின்றனர். அவர்களுக்கு யாஷ்மின் கராச்சிவாலா என்பவர் பயிற்சியாளராக இருந்துவருகிறார். இருவரும் ஜிம்மிற்குச் சேர்ந்து வருவதையும், சேர்ந்தே உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் பார்ப்பதற்காகவே புதிய உறுப்பினர்கள் அதிகமாகச் சேர்ந்து வருகின்றனர். கத்ரீனா கைஃப் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தீபிகா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஹெல்த்தி ஃபிரண்ட்ஷிப்!

இன்பாக்ஸ்

திலீப் - தமன்னா ஜோடி சேரும் ‘பந்த்ரா' படத்தில் நிழல் உலக தாதாவாக நடிக்கிறார் திலீப். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார். மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திலீப்பின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் அந்த போஸ்டரை திலீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவின் கீழ் ஒருவர், ‘டான் ஆக நடிக்கும் திலீப், கதாநாயகியைக் கடத்திப் போய் வன்கொடுமை செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றால், சினிமா சூப்பர் ஹிட்டாகும்' எனப் பின்னூட்டமிட்டிருந்தார். குசும்புக்கார நெட்டிசன்!

இன்பாக்ஸ்

`வாரிசு' படப்பிடிப்பு சென்னையில் பாடல் காட்சி ஒன்றோடு நிறைவு பெற்றது. தேவைப்படும் பேட்ச் ஒர்க் வேலைகளும், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் மீதமிருக்கின்றன. இந்த இடைவெளியில் ரிலாக்ஸ் ட்ரிப்பாக குடும்பத்தினருடன் துபாய் பறந்திருக்கிறார் விஜய். அங்கே பத்து நாள்கள் ஓய்விற்குப் பின், மீண்டும் சென்னை திரும்பும் விஜய் டப்பிங்கை முடித்துத் தருவார். The Boss Returns...

முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கிறார் ரம்யா பாண்டியன். அதுவும் மம்மூட்டி ஜோடியாக நடித்துவருகிறார். படத்தின் பெயர் ‘நண்பகல் நேரத்து மயக்கம்.' ‘அங்கமாலி டைரீஸ்' லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இதனை இயக்குவதால், சந்தோஷத்தில் பூரிக்கிறார் ரம்யா பாண்டியன். மலையாள மயக்கம்!

இன்பாக்ஸ்

திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மதுரையைச் சேர்ந்த யோகி, அதன் பின்பு டி.வி சீரியல்களில் தீவிரமாக நடித்தார். அவ்வப்போது இன்ஸ்டா ரீல்களில் சக கலைஞர்களுடன் சேர்ந்து காமெடி பண்ணிவந்தார். அது லைக்குகளை அள்ளித் தரவே, தற்போது ‘மைனர் யோகி' என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். பின்னே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தம்பின்னா சும்மாவா! அரசியல் காமெடியும் வருமா?

இன்பாக்ஸ்

கேரளாவின் மூணாறு பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளன. இதைக் காண மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி, தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சாலையோரத்தில் ஒரே ஒரு குறிஞ்சிச் செடி மட்டும் பூத்திருக்கிறது. காலக் கணக்கின்படி நீலகிரியில் தற்போது நீலக்குறிஞ்சி பூக்கும் தருணம் இல்லை. மூணாறில் பூத்துள்ள இதேவேளையில், இந்த ஒற்றைச் செடி பூத்திருப்பது வனத்துறை மற்றும் குறிஞ்சி ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிஞ்சியும் சிங்கிளா வருது!

இயக்குநர் மோகன்ராஜாவின் மகள் வருணிகா, டிரம்ஸ் வாசிக்கக் கற்றுவருகிறார். மகளுக்காக டிரம்ஸ் ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ள மோகன்ராஜா, அதை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜிடமும் சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார். ஹாரீஸோ, ‘பெண் குழந்தைகள் டிரம்ஸ் இசைக்க விரும்புவதே அரிதான விஷயம்...' என வருணிகாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சும்மா அதிரட்டும்!

இன்பாக்ஸ்

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கிறார்கள். காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக பள்ளியின் தலைமையாசிரியை சசிகலா, ‘‘10 மற்றும் 12-ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். தேர்வின் முடிவில், 12-ம் வகுப்பு மாணவி லோகிதா, 600-க்கு 581 மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக வந்தார். சர்ப்ரைஸ் பரிசாக லோகிதாவை தலைமையாசிரியர் இருக்கையில் அமர்த்தி நெகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளனர் பள்ளியின் தலைமையாசிரியரும், சக ஆசிரியர்களும். ஒருநாள் முதல்வர்போல ஒருநாள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாணவி லோகிதா, வகுப்பறைகளைக் கண்காணித்து, சத்துணவு மையத்திற்குச் சென்று மதிய உணவைச் சாப்பிட்டுப் பார்த்தார். தேர்ச்சி விகிதம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். ஒருநாள் நாற்காலி!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை எஸ்டேட் உள்ளது. தென் மாவட்டங்களின் ஊட்டி என வர்ணிக்கப்படும் இந்தப் பகுதியில் எப்போதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவும். அதனால் இங்கு தேயிலை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகளுடன் மான் வகையைச் சேர்ந்த மிளா இங்கு அதிகம் இருக்கிறது. சாதாரணமாக மக்கள் பார்வையில் படாமல் ஓடிமறையும் மிளா. ஆனால், மாஞ்சோலை அருகில் நாலுமுக்கு என்ற இடத்தில் ஒற்றை மிளா வீட்டு விலங்குபோல சுற்றி வருகிறது. பொதுமக்கள் அதற்கு உணவுப் பொருள்களைக் கொடுக்கின்றனர். அதைச் சாப்பிட்டு வீடுகளையே சுற்றிவருகிறது. கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த இந்த மிளாவை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீட்டு விருந்தினர்போல உபசரித்து மகிழ்கிறார்கள். கூட்டத்தைச் சேரட்டும் மிளா!