Published:Updated:

இன்பாக்ஸ்

ஜான்வி
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி

மாளவிகா மோகனன் எங்கே இருக்கிறார் என்று கணிக்க முடியாத அளவுக்கு மும்பைக்கும் கொச்சினுக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருக்கிறார்.

இன்பாக்ஸ்

மாளவிகா மோகனன் எங்கே இருக்கிறார் என்று கணிக்க முடியாத அளவுக்கு மும்பைக்கும் கொச்சினுக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
ஜான்வி
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி

இந்தியாவில், தான் வெளியிட விருக்கும் படங்களின் பட்டியலை பிரமாண்டமாய் வெளியிட்டிருக்கிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். டாக்டர் ஸ்டிரேஞ்சின் அடுத்த பாகம் மார்ச், தோரின் அடுத்த பாகம் மே, பிளாக் பேந்தரின் அடுத்த பாகம் ஜூலை என வரிசைகட்டி நிற்கும் லைன் அப்பில் பலரின் கவனத்தை ஈர்த்தது `தி மார்வெல்ஸ்.' புதிய அணியை மொத்தமாய் இறக்கி சோதனை செய்யவிருக்கிறது டிஸ்னி. கேப்டன் மார்வெல்லாக நடித்துவரும் ப்ரீ லார்சன் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மார்வெல்லின் அடுத்த தலைமுறை.

கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் இப்போது கவனமாக இருக்கிறார் அதர்வா. தற்போது, சற்குணம் இயக்கத்தில் ஒரு கிராமத்துப் படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் ஒரு வெப் சீரிஸும் இவரது லிஸ்டில் இருக்கிறதாம். எல்லா ஆடியன்ஸையும் கவர வேண்டும் என்பதுதான் பிளான். பூரா பக்கமும் செக்

மாளவிகா மோகனன் எங்கே இருக்கிறார் என்று கணிக்க முடியாத அளவுக்கு மும்பைக்கும் கொச்சினுக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருக்கிறார். பாலிவுட்டில் ஃபர்ஹான் அக்தரின் `யுத்ரா', தனுஷோடு `மாறன்' தவிர படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை. ஆனால், போட்டோஷூட்களாக இன்ஸ்டா உலகத்தை நிறைக்கிறார். அவர் பதிவேற்றும் படங்கள் அனைத்துக்கும் பக்கா வரலாற்று கேப்ஷன் வைத்து சற்றே ஆபத்தான வளைவுகளோடு இருப்பதால் இணையமே ஹாட்டாகக் கிடக்கிறது. டேக் இட் ஈஸி ஊர்வசி!

இன்பாக்ஸ்

`ஐ லவ் யூ மை லப்பு' என்று தன் அம்மா கையெழுத்தையே டாட்டூவாகக் குத்தியிருக்கிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ``அம்மா அடிக்கடி சொல்லும் வாசகம் இது. `I love you my labbu. You are the best baby in the world’ அப்படின்னுதான் என்னைக் கொஞ்சுவாங்க. அந்த முதல் வாசகத்தையே டாட்டூவாக்கியிருக்கேன். மிஸ் யூமா!'' என உருகியிருக்கிறார் ஜான்வி. கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக்கான `குட்லக் ஜெர்ரி'யை முடித்த கையோடு மலையாள ஹிட் `ஹெலன்' படத்தின் ரீமேக்கான `மிலி'யில் பிஸியாகிவிட்டார் ஜான்வி. சமத்துப் பொண்ணு!

துபாய் அரசாங்கம் மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்திவருகிறது. சமீபத்தில் மீரா ஜாஸ்மினுக்கு இது தரப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீரா ஜாஸ்மின், துபாய் சென்று கோல்டன் விசா வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார். `அச்சுவின்றெ அம்மா' `ரசதந்திரம்' ஆகிய படங்களில் மீரா இப்போது நடித்துவருகிறார். மலையாள சினிமா கைகொடுத்த மகிழ்ச்சியில், ``மலையாள சினிமாவைப் பார்த்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்'' எனச் சிலாகித்தார் மீரா. சண்டக்கோழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். 72 வயதான இவர், `ஐந்தாவது தூண்' என்ற அமைப்பின் நிறுவனர். கழிவுநீர் ஓடையின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து போராட்டம், பல்வேறு வேடமணிந்து மனு அளித்தல், கழுத்தளவு தண்ணீரில் உண்ணாவிரதம், கோயில் உண்டியலில் மனு போடுதல் எனப் பல நூதனப் போராட்டங்கள் நடத்தியவர். இந்தப் போராட்டங்களால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். கடந்த 2009-ல் `கோவில்பட்டி மெயின் பஜார் ஓடைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போட்டார். நீதிமன்றம் உத்தரவிட்டும் இது நடக்கவில்லை. 2013 காந்தி ஜயந்தி அன்று, `ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றும் வரையில் சட்டை அணிய மாட்டேன்’ எனச் சொல்லி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சட்டையைக் கழற்றினார். தற்போது ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட, அதிகாரிகள் கூடி அவருக்குச் சட்டை அணிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரைச் சாலை ஓரத்தில் ஆண் குரங்கு ஒன்று உட்கார்ந்திருப்பதைக் கண்ட சிறுவர்கள் அருகே சென்று வாழைப்பழம் கொடுத்தனர். அதை சாப்பிட முடியாமல் குரங்கு தவித்தது. அப்போதுதான், அந்தக் குரங்கின் வால் பகுதியில் காயம் இருந்ததைச் சிறுவர்கள் கவனித்தனர். ``ஐயோ... பாவம் இந்தக் குரங்கு'' என்று கலங்கிய சிறுவர்கள், சீர்காழி வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறை ஊழியர்கள் வந்து, குரங்கை லாகவமாகப் பிடித்து அருகிலுள்ள சாமியம் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சை தந்தனர். சிகிச்சைக்குப்பின் நலமடைந்த குரங்கைக் கொள்ளிடம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். அன்பே குழந்தைகள்

இன்பாக்ஸ்

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த ஐயர்மலை, செங்குத்தாக 1,017 படிக்கட்டுகளைக் கொண்ட மலை. மலையின் உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். தமிழகம் முழுக்க இருந்து இங்குவந்து வழிபடும் பக்தர்கள், செங்குத்தாக உள்ள படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்களின் வசதிக்காக மலை உச்சிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ரோப்கார் அமைக்கும் பணி பத்து ஆண்டுகளாக நிதானமாக நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இந்தப் பணிகள் வேகமாகி, ரோப்கார் பெட்டிகளை சோதனை ஓட்டம் செய்கிறார்கள். ``மறுபடியும் இதைக் கிடப்பில் போட்டுவிடாமல், 2022 சித்திரைப் பெருவிழா தேரோட்டத்திற்கு முன்பு இதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்போது திருவண்ணாமலை, பழநி திருக்கோயில்கள் போன்று ஐயர்மலையும் தமிழகத்தின் முக்கியமான ஆன்மிகச் சுற்றுலாத் தலமாக மாறும்'' என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பல கைவினைப் பொருள்கள் உலகப் புகழ்பெற்றுள்ளன. சுவாமிமலை ஐம்பொன் சிலை, திருபுவனம் பட்டுப் புடவை, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, ஓவியம், நெட்டி வேலைப்பாடு உள்ளிட்ட எட்டுக் கைவினைப் பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றிருக்கின்றன. இதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த எட்டுக் கலைப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கலைப்பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். தமிழகத்தில் 35 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவற்றில் எட்டுப் பொருள்கள் தஞ்சாவூரில் உருவாகின்றன என்பது பெருமைக்குரியது.

`குடுக்கு 2025' மலையாளப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிகை துர்கா கிருஷ்ணாவை கதாநாயகன் கிருஷ்ண சங்கர் லிப் லாக் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காட்சிக்கு தனது கணவர் அர்ஜுன் ரவீந்திரன் சப்போர்ட் செய்ததாகக் கூறியிருந்தார் துர்கா கிருஷ்ணா. இந்த நிலையில் துர்கா கிருஷ்ணாவின் கணவர் அர்ஜுன் ரவீந்திரன் புதிதாக எடுக்கும் படத்துக்குப் பூஜை போட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தார். அதில் கமென்ட் செய்த ஒருவர் `சொந்த மனைவியை வேறொருத்தன் லிப்லாக் செய்திருக்கிறான், உனக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேட்க, `மற்றொருவர் விஷயத்தில் தலையிட உனக்கு வெட்கமாக இல்லையா?' என துர்கா சூடாக பதிலடி கொடுக்க, இணையம் களேபரமாகியிருக்கிறது. நெத்தியடி

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நாடுகாணி வனப்பகுதியில் கடந்த வாரம் இரவு வழக்கத்துக்கு மாறாக யானைகளின் பிளிறல் சத்தம் விடிய விடியக் கேட்டது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, காட்டுக்குள் சட்டவிரோதமாக தோண்டப்பட்டிருந்த தங்கச் சுரங்கக் குழிக்குள் தவறி விழுந்த யானைக் கன்று ஒன்று மேலே வர முடியாமல் மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்துள்ளது. உடனே கன்றை மீட்ட வனத்துறையினர், அதற்கு உணவும் சிகிச்சையும் அளித்தனர். கன்றை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் அடுத்தகட்டப் பணியை உடனடியாகத் தொடங்கினர். இரவு பகலாகக் காடுமேடுகளில் அலைந்து ஒரு வழியாக அந்தக் கூட்டத்தைக் கண்டறிந்தனர். ஆனால், கன்று தன் கூட்டத்தை நோக்கிப் போகாமல், பாசத்துடன் வனத்துறையினர் பக்கம் ஓடிவந்தது. கூட்டத்தில் இருந்த ஏழு யானைகளும் வனத்துறையினரை விரட்டின. வனத்துறையினரைப் பிரிய முரண்டு பிடித்த அந்தக் குட்டியை விடிய விடியப் போராடி ஒரு வழியாக தாய் யானையிடம் சேர்த்தனர். உயிரைப் பணயம் வைத்துக் காடுகளில் திரிந்து கன்றைக் கூட்டத்துடன் சேர்த்த வனத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தங்கக்குட்டி