சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

தனுஷ் மகன் யாத்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ் மகன் யாத்ரா

பலரது குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத பக்கங்களில் ஹாரி பாட்டர் உலகின் கதாபாத்திரங்களுக்கு இடம் உண்டு.

பெரும்பாலும் மும்பையிலேயே ஷூட்டிங்கில் இருக்கிறார் விஜய்சேதுபதி. டைரக்டர் வெற்றிமாறன் இவரிடமும், சூரியிடமும் ‘விடுதலை' படத்துக்காக கால்ஷீட் கேட்டிருக்க, படப்பிடிப்பு 200 நாள்களைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருவருமே கால்ஷீட்களை அள்ளிக் கொடுத்துவிட்டார்கள். ‘‘என்னை அடுத்ததாகவும் இன்னொரு படத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’' என்று வெற்றிமாறனிடம் சொல்லியிருக்கிறார் சேது. மும்பை கேங்ஸ்டர் கதையா பிடிங்க..!

எப்போதுமில்லாத அளவிற்கு எனர்ஜியில் மின்னுகிறார் ரஜினி. ‘ஜெயிலர்' ஷெட்யூலில் அவரது வேகத்தைப் பார்த்து நெல்சன் வியந்திருக்கிறார். ‘‘இதே ஸ்பீடில் போனால், ஜனவரிக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் போல’' என அவர் ஆச்சரியப்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் லைகா தயாரிப்பில் ‘டான்' சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தின் கதையும் முடிவடையும் தறுவாயில் உள்ளதாம். சிங்கம் ஒன்று..!

தீபாவளிக்கு ‘வாரிசு' படத்தின் சிங்கிள் வெளியாகிறது. அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67' படத்தின் அறிவிப்பை டிசம்பரில் வெளியிட உள்ளனர். அதில் த்ரிஷா, சமந்தா on board என அதிகாரபூர்வ அறிவிப்பும் ஒன்றாம். காரப் பொரியும் ரோஸ் மில்க்கும்..!

சிம்பு முதல்முறையாக ‘டபுள் எக்ஸ்.எல்' என்ற இந்திப் படத்தில் பாடியிருக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில், சிம்புவின் நண்பர் மஹத் ராகவேந்திரா நடிக்கிறார். அவருக்காக இப்பாடலை சிம்பு பாடிக் கொடுத்திருக்கிறார். நட்பு XXL..!

ஷாருக்கானின் ‘ஜவான்' ஷூட்டிங் சென்னையில் ஒரு மாதம் நடந்து முடிந்து இப்போது மும்பை திரும்பியிருக்கிறார் ஷாருக். அடுத்ததாக ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. நயன்தாராவிற்கு இரட்டைக் குழந்தை பிறந்திருப்பதால், அவர் நேரம் ஒதுக்குவதைப் பொறுத்து இந்த ஷெட்யூல் ஷூட்டிங் நடக்குமாம். இடையில் ஷாருக் மகன் ஆர்யன் கான் வெப் சீரிஸ் இயக்கத் தயாராகிவருகிறார். ஓய்வு நேரத்தில், மகன் எப்படி இயக்குநராகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்பதை ஷாருக் மேற்பார்வையிட்டு வருகிறார். அப்பாக்கு கதை ரெடியா ஆர்யன்..?

தனுஷ் மகன் யாத்ரா
தனுஷ் மகன் யாத்ரா

தனுஷின் மகன் யாத்ரா நன்றாகப் பாடுவதால் அவரை இசைப்பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவரை ஹீரோவாக்க முயற்சி எடுப்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில், அவர் கர்நாடக இசைக்கு வந்தது குறித்து தாத்தா ரஜினிகாந்தே ஆச்சரிப்பட்டாராம். ‘‘அவனுக்கு இஷ்டமானதைச் செய்ய எந்தத் தடையும் இல்லை'' என தனுஷ் வெள்ளைக்கொடி காட்டிவிட்டாராம். யாத்ராவின் சங்கீத அரங்கேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். பாட்டி வழியில் பேரன்..!

இன்பாக்ஸ்

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 மே 6-ம் தேதி அவர் மகுடம் சூடுகிறார். அவரின் உணவுப்பழக்கங்களுக்கு ஏற்றபடி பக்கிங்காம் அரண்மனை இப்போதே தயாராகிவருகிறது. அவர் அம்மாவும் மகாராணியாக இருந்தவருமான எலிசபெத் சாக்லேட் விரும்பி. சார்லஸுக்கு சாக்லெட், இனிப்புகள் என்றாலே அலர்ஜி, காபியும் பிடிக்காது. தேன் கலந்த டீயை விரும்பி சாப்பிடுவார். எல்லா வேளைகளிலும் உணவில் முட்டை இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாள்கள் இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பார். ஒருநாள் பால் பொருள்களைத் தவிர்ப்பார். அரண்மனை சமையல் கலைஞர்கள் இதற்கு இப்போது பழகிவருகிறார்கள். ராஜபோகம்!

இன்பாக்ஸ்

பலரது குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத பக்கங்களில் ஹாரி பாட்டர் உலகின் கதாபாத்திரங்களுக்கு இடம் உண்டு. அதிலும் குறிப்பாக ரூபியஸ் ஹேக்ரிட், ஹாரி பாட்டர் ரசிகர்களின் பேவரைட். இந்த ரூபியஸ் ஹேக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்த ராபி கோல்ட்ரேன் உடல்நலக்குறைவால் காலமானார்.“Yer a wizard, Harry’’ என்று ஹாரி மாயாஜால உலகத்தைச் சார்ந்தவர் என்று அறிமுகப்படுத்துவது முதல், 8 பாகங்களிலும் ஹாரிக்கும் அவன் நண்பர்களுக்கும் உறுதுணையாக இருந்தது வரை, ஒரு கார்டியன் ஏஞ்சலாக ரசிகர்கள் மனதில் பதிவானவர். சமீபமாக வெளியான ஹாரி பாட்டர் ரீயூனியனில்கூட ‘‘துரதிர்ஷ்டவசமாக, இங்கே நான் இருக்க மாட்டேன்.ஆனால், இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் ‘ஹேக்ரிட்' இருப்பார்’’ என்றார் கோல்ட்ரேன். உண்மை தான், இன்னும் பல தசாப்தங்கள் கடந்தாலும் ஹேக்ரிடாக மக்கள் மத்தியில் ராபி கோல்ட்ரேன் வாழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை. Goodbye Hagrid.

இன்பாக்ஸ்

தமிழகத்திலயே நீண்ட பறக்கும் பாலம் மதுரையில் அமைக்கப்பட்டுவருகிறது. மதுரையிலிருந்து நத்தம் வரையிலான 35 கி.மீ தூரத்தை நான்கு வழிச்சாலையாக மாற்றி வரும் நிலையில், அதில் சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ தூரத்துக்கு பறக்கும் பாலத்தை அமைத்துள்ளனர். இதன் மூலம் மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தூரம் 23 கி.மீ குறையும். மதுரை நகரின் மீது ராட்சத மலைப்பாம்பு படுத்திருப்பதுபோல் இப்பாலத்தின் தோற்றம் பிரமாண்டமாகத் தெரிகிறது. விரைவில் திறக்கப்படவுள்ள இப்பாலத்தின் 225 தூண்களில் மீனாட்சியம்மன், கள்ளழகர் என மதுரையின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரையவுள்ளார்கள். மதுரையின் மற்றொரு அடையாளமாக பாலம் உருவாகிவருகிறது. பழைமையும் புதுமையும்..!

இன்பாக்ஸ்

ஈரோடு, தெற்கு மாவட்ட தி.மு.க-வினர் எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு ஒரு கலைஞர் சிலையைக் கொண்டுவந்து வைத்துவிடுகிறார்கள். பார்க்க வெண்கலச் சிலையைப் போல இருக்கும் இது ஃபைபர் சிலை. ஈரோட்டில் கடந்த ஆண்டு கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை வைப்பதற்காக ஃபைபரில் மாதிரிச் சிலை ஒன்று தயாரிக்கப்பட்டது. அது அச்சு அசலாக வெண்கலச் சிலை போலவே இருந்ததால், எங்கு தி.மு.க கூட்டம் நடைபெற்றாலும் அங்கு இந்த சிலையைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது அமைச்சர் முத்துசாமியின் உத்தரவாம். எடை அதிகம் இல்லை என்பதால், அதனை எளிதில் தூக்கிவந்து வைத்துவிடுகிறார்கள். அந்தச் சிலையின் அருகே உற்சாகமாக நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். பாசக்கார உ.பி-க்கள்..!

இன்பாக்ஸ்

ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடனும் யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து நீலகிரி மலையில் உற்சாகமாகத் தடதடத்துக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில். நீலகிரி மலை ரயில்பாதைப் பணிகள் 1854-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் நடைபெற்றிருக்கின்றன. சாத்தியமே இல்லை என ஆங்கிலேய அதிகாரிகள் சிலரால் கருதப்பட்ட இந்த சாகசப் பணியை அப்போதைய மெட்ராஸ் மாகாண கூலித் தொழிலாளர்கள் உதிரம் சிந்தி சாத்தியப்படுத்தினர். தொழில்நுட்ப வசதிகளின்றி மனித உழைப்பை மட்டுமே பெரிதும் நம்பியிருந்த காலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது குன்னூர் ரயில் நிலையத்தில் இருக்கும் மேனுவல் கிரேன். 360 டிகிரியில் சுழலும் இந்த பளுதூக்கியில் 4 பேர் சேர்ந்து 6 டன் எடையுள்ள இரும்பைக்கூடத் தூக்கி வைக்கலாம். ஹைட்ராலிக் கிரேன்கள் வருகைக்குப் பின்னும் மனிதர்களை வைத்து இயக்கப்படும் இந்த மேனுவல் கிரேன் இன்றளவும் பயன்பாட்டில் இருப்பதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு செல்கின்றனர்.