சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

அமலாபால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலாபால்

‘புஷ்பா'வில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றீயா மாமா' மாஸ் ஹிட் பாடல். அதைப் போல இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது.

இன்பாக்ஸ்

ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெற்றிருக்கிறார். லண்டனில் லேவர் கப் போட்டியுடன் ஓய்வுபெற்ற ஃபெடரருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார், முன்னாள் டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸ். இவரை வீழ்த்தியே ஃபெடரர் ஒரு சகாப்தமாக உருவெடுத்தார். ‘‘19 வயது இளைஞனாக நீங்கள் என்னை முதன்முதலில் விம்பிள்டன் மைதானத்தில் வீழ்த்தியது இப்போதும் நினைவில் நிற்கிறது. அன்றுமுதல் 24 ஆண்டுகள் டென்னிஸ் ரசிகர்களை மகிழ்வித்தீர்கள்'' என்று நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் சாம்ப்ராஸ். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜரை ரஃபேல் நடாலும், நோவாக் ஜோகோவிச்சும் தாண்டிப் போய்விட்டனர். என்றாலும், ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்த ஆறே ஆறு விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற ஃபெடரரின் சாதனை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. லெஜண்ட்!

இன்பாக்ஸ்

தயாரித்து நடித்த ‘கடாவர்' படம், கையைக் கடிக்காமல் லாபம் தர, மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலாபால். அதே பாணியில் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து நடித்து அதையும் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்ய உள்ளார். சொந்தப் பிரச்னைகளை எல்லாம் ஓரம்தள்ளி வைத்துவிட்டு, மாலத்தீவில் ரிலாக்ஸ் ட்ரிப் அடித்துக் கொண்டிருக்கும் அமலாபால், ரிட்டர்ன் ஆனதும் கதை கேட்க ரெடியாகிறார். ஆனால் இம்முறை த்ரில்லர் ஜானர் இல்லையாம்! வருக வருக!

இன்பாக்ஸ்

‘புஷ்பா'வில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றீயா மாமா' மாஸ் ஹிட் பாடல். அதைப் போல இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. பாலிவுட் மலைக்கா அரோரா அதில் ஆட்டம் போடவிருக்கிறார். 45 ப்ளஸ் வயதை நெருங்கும் மலைக்கா, இன்னமும் ஃபிட்னஸ் டால்பினாக உடம்பை வைத்திருப்பது பாலிவுட்டே வியக்கும் விஷயமாகும்! பாட்டுக்கு பார்ட் டூவா?

இன்பாக்ஸ்

‘‘தந்தை மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கும் பேராசை எனக்கு இருக்கிறது. என் தாடியை கறுப்பாக வைத்திருக்க நான் போராடுகிறேன். ஆனால் அப்பாவைப் பாருங்கள், ஆண்டு கூடும்போது வயது குறைந்து இளமை ஆகிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் நான் மேக்கப் போடா மலேயே அவருக்கு அப்பாவாக நடிக்கும் நிலை ஏற்படும்’’ என ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து ‘இளமையாக இருக்க டிப்ஸ் தாங்க' என மம்முட்டியின் இன்பாக்ஸை நிறைக்கிறார்கள் ரசிகர்கள். எவர்க்ரீன் யூத்!

இன்பாக்ஸ்

நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான், ஃபிட்னஸ் பயிற்சியாளரான நுபுர் சிகாரே என்பரை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நுபுர் சிகாரே தன்னிடம் காதலைச் சொன்ன வீடியோவை வெளியிட்டு, நிச்சயதார்த்த தகவலைப் பகிர்ந்துள்ளார் இரா கான். எப்போது திருமணம் என்பதை சீக்கிரம் சொல்வார்கள் போல. வாழ்த்துகள்!

இன்பாக்ஸ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திடீரென வந்து தரிசனம் செய்தார் வடிவேலு. தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறினர். ரசிகர்களே நிருபர்களாக மாறி அவரிடம் கேள்விகள் கேட்டனர். “இப்ப ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’, ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி-2’ ஆகிய படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கேன். அது மக்கள் மத்தியில வரவேற்பைப் பெறும்'' என்றவரிடம் “அந்த பாட்டை பாடுங்க சார்” எனக் கேட்க, “அது சஸ்பென்ஸ்” என்று கும்பிட்டபடியே கிளம்பிவிட்டார். வர்ட்ட்டா!

இன்பாக்ஸ்

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி. ரஜினி மீதான அளப்பரிய அன்பால், இன்றளவும் ரஜினியின் பெயரில் நற்காரியங்கள் செய்வதோடு, ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தன் தாய், தந்தைக்கு பாணாவரம் அருகிலிருக்கும் நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தில் மார்பளவு வெண்கலச் சிலைகளை நிறுவி, கோயிலையும் கட்டி வருகிறார். இதையறிந்த ரஜினிகாந்த் ரவியை அழைத்து நெகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் ரஜினி வந்து இதைத் திறந்து வைக்க இருக்கிறார். பேரன்பு!

இன்பாக்ஸ்

நெல்லை மக்களின் நினைவுகளில் நீங்காத ஓர் இடம், சென்ட்ரல் தியேட்டர். இரு மாடிக் கட்டடங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட தியேட்டர், பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பல வருடங்களாக மூடிக் கிடக்கிறது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பெரிதாக இருக்கும் இதில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதே சுவாரஸ்யமான அனுபவம். தியேட்டரில் எந்த இடத்தில் அமர்ந்தாலும் முன்னால் இருப்பவரின் தலை திரையை மறைக்காத வகையில் அந்தக் காலத்திலேயே வடிவமைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பல ஆளுமைகள் வந்துசென்ற இந்த தியேட்டரை, நெல்லையப்பர் கோயில் சாலையில் செல்பவர்கள் ஏக்கத்துடன் பார்த்தபடியே செல்கிறார்கள். சீக்கிரம் திறங்கப்பா!

இன்பாக்ஸ்

எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்காக விழா நடத்தி சிறப்பு மலரும், குறும்படமும் வெளியிடப்படுகின்றன. ஜானகி அம்மையாரின் ஆளுயர சிலை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நிறுவப்படுகிறது. விழாவில் பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள், எம்.ஜி.ஆர் அனுதாபிகள் பங்கேற்றுப் பேசுகிறார்கள். ஆனால், அதில் கலந்துகொள்ள அ.தி.மு.க தலைவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இன்றைக்கு சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் ஜானகி அம்மாளின் தனிப்பட்ட சொத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதுலயும் அரசியலா?

குஷ்பு ரொம்பவே ஸ்லிம் ஆனதன் ரகசியம் இப்போது தெரிந்துவிட்டது. சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் மீண்டும் நடிக்கவரும் படம், ‘ஹரா'. முதன்முறையாக மோகனுடன் இணைந்து நடிக்கிறார் குஷ்பு. மோகன் இப்போதும் ஸ்லிம் ஃபிட்டாக இருப்பதால், குஷ்புவையும் அதே ஸ்லிம் ஃபிட்டில் வர முடியுமா எனக் கேட்டிருக்கிறார் படத்தின் இயக்குநரான விஜய் ஶ்ரீ. குஷ்பு அத்தனை பேரும் ஆச்சரியப்படும் விதத்தில் ஸ்லிம் ஆனதில் மகிழ்கிறது ‘ஹரா' டீம். ஆச்சர்யம்... அதானே குஷ்பு!

‘ஜெயிலர்' படத்தில் தமன்னா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இப்போது தமன்னா படத்தில் இல்லை என்கிறார்கள். நெல்சனிடம் ரஜினி, ‘‘எனக்கு ஜோடியும் வேணாம்.. டூயட்டும் வேணாம்'’ என்று சொன்னதால் இந்த முடிவாம். ஆனால், பிரியங்கா மோகன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ரஜினியின் மகளாக நடிக்கிறாராம் பிரியங்கா. டீம் நெல்சன்!