Published:Updated:

இன்பாக்ஸ்

கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி பிரியதர்ஷன்

ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் சிவகுமார் ‘திருக்குறள் 100' என்ற தலைப்பில் நான்கு மணி நேர தொடர் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

இன்பாக்ஸ்

ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் சிவகுமார் ‘திருக்குறள் 100' என்ற தலைப்பில் நான்கு மணி நேர தொடர் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

Published:Updated:
கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி பிரியதர்ஷன்
பூமிகா
பூமிகா

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எல்லாப் பக்கமும் பிஸியாக இருக்கிறார் பூமிகா. ஹீரோயினாக மூன்று மொழிகளிலும் கலக்கியவர் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தயங்கவில்லை. அதனால் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன. சமீபமாக, துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்' படத்தில் நடித்திருந்தார். இப்போது ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தில் பூமிகாவே ரவியின் அக்கா. படமே அக்கா - தம்பி உறவைப் பற்றியதுதானாம். சூப்பர் அக்கா!

இன்பாக்ஸ்

நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடியதால் உலக அளவில் ட்ரோல் செய்யப்பட்ட பின்லாந்துப் பிரதமர் சன்னா மரினுக்கு இன்னொரு பக்கம் பெண்கள் ஆதரவும் குவிகிறது. ‘‘என்னதான் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், என் வயதுப் பெண்களைப் போல நானும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சந்தோஷங்களைக் கொண்டாட ஏங்குபவள்தான். ஒரு சராசரிப் பெண்ணாக வாழ்க்கையின் இயல்பான மகிழ்ச்சிகளை நான் அனுபவிக்கக் கூடாதா? ஒரே ஒரு நாள்கூட என் கடமைகளை நான் தவிர்த்ததில்லை'' என்று உருக்கமாக அவர் பேசியதே காரணம். 36 வயது சன்னா, பின்லாந்தின் மிக இளம் வயது பிரதமர். ஏற்கெனவே ஒருமுறை கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறி நண்பர்களுடன் அவர் பார்ட்டிக்குப் போனதும் சர்ச்சையானது. பெர்சனல் வாழ்க்கையும் முக்கியம்!

இன்பாக்ஸ்

சிம்புவின் ‘மாநாடு’ படத்திற்குப் பின், தமிழில் கமிட் ஆகாமல் மலையாளத்தில் சிறகடித்தார் கல்யாணி பிரியதர்ஷன். அங்கே பிரணவ் மோகன்லாலுடன் நடித்த ‘ஹிர்தயம்’ ஃபீல் குட் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து மலையாளத்திலேயே கவனம் செலுத்தினார் கல்யாணி. இப்போது தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கமிட் ஆகிறார். வைஸ் கேப்டன்!

இன்பாக்ஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடும் விரக்தியில் இருக்கிறார். தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜாக்குலின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் ஜாக்குலின் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஜாக்குலின் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த குருஜி நிர்மல் சிங் என்பவரின் சிஷ்யையாக மாறியிருக்கும் ஜாக்குலின், வீட்டில் தினமும் குருஜி சொல்லிக்கொடுக்கும் மந்திரத்தை உச்சரித்துவருகிறார். சமீபத்தில் மும்பையில் இருக்கும் முக்தேஷ்வர் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். ஜாக்குலினின் இந்த மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடாநட்பு!

இன்பாக்ஸ்

அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியின் ‘அஜித் 61‘ படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் ஓவர். தொடர்ந்து ஒடிசா சென்றிருக்கிறது டீம். அங்கே மும்முரமாக ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்களைப் படமாக்கி வருகிறார்கள். அஜித் - மஞ்சு வாரியர் ஜோடிக்கு இதில் டூயட் இல்லை எனவும் சொல்கிறார்கள். இதற்கிடையே சத்தமே இல்லாமல், ஜார்ஜியா சென்று லொகேஷன் களைப் பார்த்து வந்திருக்கிறார் வினோத். படத்தை தீபாவளிக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்திவருகிறார்கள். வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

தமிழ் சினிமாவின் 80-ன் காலகட்டக் கதாநாயகிகளில் கவனம் ஈர்த்தவர் சரிதா. துபாயில் செட்டில் ஆனவர், படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இப்போது அவரை சிவகார்த்திகேயன் தனது ‘மாவீரன்’ படத்திற்காக அழைத்து வந்திருப்பதில் மகிழ்கிறார் சரிதா. மீண்டும் வருக!

இன்பாக்ஸ்

நீதிபதி மகாதேவன், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக ‘கி.ரா விருது' என்ற பெயரில் வருடாவருடம் எழுத்தாளர்களைக் கௌரவிக்கத் திட்டமிட்டிருக்கிறார். நல்ல ஆரம்பமாக இந்த வருடத்திற்கான விருது வரும் செப்டம்பர் 15-ம் தேதி எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. பாராட்டுப் பத்திரமும், ஐந்து லட்சம் தொகையும் சேர்ந்த விருது இது. மண்மணக்கும் விருது!

இன்பாக்ஸ்

நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ஊட்டி கோர்ட்டுக்குள் நுழைந்தவர் சௌமியா. நீதிபதி இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார். பல்வேறு தடைகளைத் தகர்த்து உயர்ந்த சௌமியா, சக திருநங்கைகளின் கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்குப் பாடுபட்டுவருகிறார். இந்த நிலையில், உண்டி மாயார் பகுதியைச் சேர்ந்த திருநம்பி ஹரியை மகனாகத் தத்தெடுத்துப் பராமரித்து வருகிறார். அவரைப் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படிக்கச் சேர்த்து, தன்னம்பிக்கையுடன் படியேற வைத்திருக்கிறார். அன்பின் கொடி!

இன்பாக்ஸ்

ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் சிவகுமார் ‘திருக்குறள் 100' என்ற தலைப்பில் நான்கு மணி நேர தொடர் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். தேர்ந்தெடுத்த 100 குறள்களுக்கு விளக்கம் அளிக்க குறுங்கதைகளையும் சொல்லியிருக்கிறார். அந்தக் குறுங்கதைகளின் நிகழ்வுகள் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் அவரது வாழ்க்கையிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது. சினம்கொள்ளாமை பற்றி வரும்போது அவரது செல்போன் சம்பவத்தையே உதாரணம் காட்ட, கூட்டம் கலகலப்பானது. தமிழ்மகன்!

இன்பாக்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் போல்வால்ட் வீராங்கனை பரணிகா. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட, மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் 4.05 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் இவர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற சர்வதேச போல்வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட பரணிகா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பார் போற்றும் பரணி!

இன்பாக்ஸ்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அணைக்கரைபட்டி பகுதியில் ஆகஸ்ட் 21-ம் தேதி அழகுமுனி-கனகலட்சுமி திருமணம் நடைபெற்றது. மணமகன் அழகுமுனி ஜல்லிக்கட்டுக் காளைமீது அதிக பிரியம் கொண்டவர், மாடுபிடி வீரரும்கூட. கனகலட்சுமி, ‘‘மணக்கோலத்தில் நான் ஜல்லிக்கட்டுக் காளையுடன் புகைப்படம் எடுக்கவேண்டும்'’ என்று திருமணத்தின்போது தன் ஆசையை அழகுமுனியிடம் தெரிவித்துள்ளார். உடனே அழகுமுனி தன் நண்பர்களிடம் இதைச் சொல்ல, சில நிமிடங்களிலேயே ஜல்லிக்கட்டுக் காளையை அலங்கரித்து திருமண மேடைக்குக் கொண்டுவந்தனர் அவரின் நண்பர்கள். ஆச்சரியம் குறையாத முகத்துடன், ஜல்லிக்கட்டுக் காளையைக் கையில் பிடித்தவாறு கணவர் மற்றும் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் கனகலட்சுமி. ஆஹா கல்யாணம்!

பத்திரிகையாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய என்.வி.ரமணா, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்னும் அதிகாரத்திலிருந்து கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இதற்கு முன்னர் இருந்த தலைமை நீதிபதிகளைவிடவும், பல விஷயங்களில் தன் கருத்துகளை அழுத்தம்திருத்தமாக வெளியிட்டு சாமான்யர்களிடம் சிறு நம்பிக்கையை விதைத்தவர். ஆனால், இது எல்லாமே நீதிமன்றங்களுக்கு வெளியேதான். பல முக்கிய வழக்குகளின் தலையெழுத்தை அவரின் கையெழுத்து மாற்றியிருக்கும் என்னும்போது, அவற்றைக் கண்டுகொள்ளாமல் காலம் தள்ளியவர் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. ஆர்ட்டிக்கிள் 370 (1,118 நாள்), ஹிஜாப் பிரச்னை (162 நாள்), EWS இட ஒதுக்கீடு (1,326 நாள்), தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் (1,819 நாள்), UAPA தடைச் சட்டம் (1,108 நாள்), இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் தொடர்பான வழக்கு (990 நாள்) என அவர் கண் பார்வைக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்துபோன வழக்குகள் ஏராளம். ‘‘நீதித்துறை மீதான மறுஆய்வுகள் சரியாக நடைபெறவில்லை என்றால், மக்களுக்கு நீதித்துறை மேலிருக்கும் நம்பிக்கை மங்கிப் போய்விடும்'’ என்பார் ரமணா. ஆனால், அவரும் பெரிதாய் எதுவும் செய்யவில்லை என்பதுதான் வரலாற்றுத் துயரம். மங்கிப் போன நம்பிக்கை!

இன்பாக்ஸ்

‘லால் சிங் சத்தா' படத்தின் தோல்வி ஆமீர் கானை மிகவும் விரக்தியடையச் செய்துள்ளது. அடுத்து பாலிவுட் இசையமைப்பாளர் குல்ஷன் குமார் வாழ்க்கையை மையமாக வைத்து ‘மொகுல்' என்ற படத்தில் நடிப்பதாக இருந்த ஆமீர் கான், தனது திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார். அதோடு நடிப்புக்கு தற்காலிகமாக இடைவெளி கொடுக்கவும் முடிவு செய்துள்ளார். மனநிம்மதி தேடி தன் முன்னாள் மனைவி கிரண் ராவ் மற்றும் மகன் ஆசாத் ஆகியோருடன் நீண்டதொரு அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ளவும் ஆமீர் கான் முடிவு செய்திருப்பதாகத் தகவல். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!