Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் மலைப்பிரதேசமான நீலகிரியில், கொரோனாக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன

இன்பாக்ஸ்

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் மலைப்பிரதேசமான நீலகிரியில், கொரோனாக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

`பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன், இசையை மையமாக வைத்து ‘பாட்டு’ என்ற படத்தை பகத் பாசில் - நயன்தாரா கூட்டணியில் எடுத்துவந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு பிரேக் கொடுத்துவிட்டு பிரித்திவிராஜ், நயன்தாராவை வைத்து ‘கோல்டு’ படத்தைத் தொடங்கியுள்ளார். இதில் மீண்டும் ‘நேரம்’ போன்ற கதைக்களத்துடன் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. சிங்கம் களமிறங்கிடிச்சு..!

‘சைரா நரசிம்ம ரெட்டி’ மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி டான்ஸ், ஸ்டண்ட் என இளம் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்துவருகிறார். ‘ஆச்சார்யா’ படத்தை முடித்துவிட்டு தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவிக்கு வில்லனாக நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். காட்ஃபாதர் Vs விக்ரம்

கடந்த 1996-ம் ஆண்டு ‘மிஷன் இம்பாஸிபி’ளில் தொடங்கிய டாம் க்ரூஸின் அதிரடி ஆட்டம், விடாமல் தொடர்கிறது. ‘ஃபால் அவுட்’ படத்திற்குப் பிறகு விறுவிறுவெனத் தொடங்கப்பட்ட ஏழாம் பாகத்தின் ஷூட்டிங் கொரோனாவால் இடையிலேயே தடைப்பட்டது. கொரோனா சற்று ஓய்ந்தாலும், படக்குழு தற்போது படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியாவில் இல்லை. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த மிஷன், இம்பாஸிபிள்தான் போலயே..!

இன்பாக்ஸ்

ஒரு புகைப்படம் என்ன செய்யும்? உலக வரலாற்றை மாற்றி எழுதும் என்பதுதான் கடந்த கால சம்பவங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது. 2021-ம் ஆண்டின் சிறந்த பறவைப் புகைப்படம் இது. அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் குழம்பிப்போய் நிற்கும் ஒரு பறவையைப் படம்பிடித்த ப்ரீட்டோ வென்றிருக்கிறார். தன் இயற்கை வழியில் இருக்கும் வேலியை திகைத்தபடி பார்க்கிறது அது. 3,000 கிலோமீட்டர் நீளத்துக்கு இரும்புக் கம்பிகளாலான நீண்டதொரு சுவரை மெக்ஸிகோ எல்லையில் கட்டி எழுப்பியிருக்கிறது அமெரிக்கா. மனிதர்களுக்கான எல்லைக்கோடு என வரையறுக்கப்படும் கோடுகளால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல என்பதுதான் யதார்த்தம். ``எத்தனையோ விலங்குகளும் பறவைகளும் இந்தச் சுவர் வரை வந்துவிட்டுத் திரும்பிப் போவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்கிறார் இந்தப் படத்தை எடுத்த ப்ரீட்டோ. பறவைகள் பரவாயில்லை!

இன்பாக்ஸ்

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் மலைப்பிரதேசமான நீலகிரியில், கொரோனாக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அதேபோல, பழங்குடிகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய‌ முதல் மாவட்டம் என்ற பாராட்டையும் நீலகிரி பெற்றது. ஆனால், `மது அருந்துவோரில் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் எஸ்கேப் ஆகி வருகிறார்கள்' என சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் சொன்னார்கள். உடனே, `தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யக் கூடாது' என உத்தரவிட்டு, கடை வாசலில் போர்டும் வைக்கச் செய்துள்ளார் கலெக்டர். வேறு வழியில்லாமல் எஸ்கேப் ஆசாமிகளும் தடுப்பூசி போட தற்போது தயாராகி வருகின்றனர். சிறப்பு!

கடந்த வார வைரல் நீதிபதி என்னும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியான சேகர் குமார் யாதவ். பசு வதை தடுப்புச் சட்டத்தை மீறிப் பசுவைக் கொன்ற வழக்கில் கைதான ஜாவேத் என்பவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க, அதை மறுத்து நீதிபதி சொன்ன கருத்துகள்தான் பேசுபொருள் ஆகியிருக்கின்றன. ``மாடுகள் ஆக்சிஜனை உள்ளிழுத்து மீண்டும் ஆக்சிஜனை வெளியிடும். பசு தரும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம், தீராத நோய்களையும் குணப்படுத்தும். பசு நெய் போட்டு யாகம் செய்தால் மழை வரும்'' என அவர் தீர்ப்பில் சொன்ன பல வரிகள் மருத்துவத்துக்கும் அறிவியலுக்கும் முரணாக இருந்ததுதான் வியப்பு. வாரம் ஒருத்தர் இப்படி...!

புலியை முறத்தால் விரட்டிய வீரத்தமிழச்சி கதையை நம் குழந்தைகளுக்குச் சொல்வதுண்டு. இது அமெரிக்காவில் நிஜமாக நிகழ்ந்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே சான்டா மோனிகா மலைப்பகுதியில் ஐந்து வயதுச் சிறுவன் விளையாடிக்கொண்டிருக்க, திடீரென அவனை ஒரு சிங்கம் தாக்கியது. பதறிப்போன அச்சிறுவனின் தாய், அந்தச் சிங்கத்தைக் கைகளாலேயே திருப்பித் தாக்கி விரட்டியிருக்கிறார். காயங்களுடன் சிறுவன் தப்பினான். வனத்துறை அதிகாரிகள் அந்தச் சிங்கத்தைச் சுட்டுக் கொன்றார்கள். `இன்னும் அந்தச் சிங்கத்துக்கு வேட்டையாடும் அளவுக்குத் திறன் உருவாகவில்லை என்பதால் அவர்கள் தப்பித்திருக்கிறார்கள்' என விளக்கம் அளித்திருக்கிறது வனத்துறை. சிங்கமோ, டைனோசரோ, குழந்தைகளுக்கு ஒன்று என்றால், அம்மாக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றிவிடுவார்கள் என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது இச்சம்பவம். வீர அமெரிக்கச்சி..!

இன்பாக்ஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் துளசிதாஸ் – மலர்க்கொடி தம்பதி வசிக்கின்றனர். துளசிதாஸ் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன்பிறகு, மார்க்சிஸ்ட் கட்சியில் ஈடுபாடு காட்டிவந்துள்ளார். வயதாகிவிட்டதால், இனி சொத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம், கட்சிதான் எல்லாம் என்று தனது 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தைக் கட்சிக்கு உயிலாக எழுதிக்கொடுத்துள்ளார். “இனி அந்தக் குடும்பத்தை நாங்களே பாதுகாப்போம்” என்று கட்சியும் உறுதியளித்துள்ளது. அரசியலில் பணம் சம்பாதித்து சொத்து சேர்ப்பது ஒருவிதம்; சம்பாதித்து வைத்த சொத்தைக் கொடுத்து அரசியல் செய்வது இன்னொரு விதம். ரெட் சல்யூட்.!

இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டமாக பெங்களூரு உருவாகியிருக்கிறது. அங்கு 107 விதமான மொழிகளை மக்கள் பேசிவருகிறார்களாம். `நாகாலாந்தின் தீமாபூர், அசாமின் சோனித்பூர் போன்ற மாவட்டங்களிலும் 100க்கும் அதிகமான மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள்' என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஷமிகா ரவி. பெங்களூரில் கன்னடத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் மொழி, தமிழ். `ஒரே நாடு ஒரே மொழி' என ஒருபக்கம் புதிய ஒருமைப்பாட்டுக்கான விளக்க நோட்டீஸ்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருக்க, இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் ஒற்றுமைக்கான அடிநாதம் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. ஒரு நாடு, பல மொழி!

சமீபத்தில் தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வந்த பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி மரியாதை செய்திருக்கிறார், வாசு சீனிவாசன். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? வாசு சீனிவாசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எல்.முருகனுக்கு மட்டுமல்ல, அவரோடு வந்திருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் சால்வை அணிவித்து, மரியாதை செய்திருக்கிறார். ``எங்க மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த எல்.முருகன் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அதற்காக அவருக்கு மரியாதை செய்தேன். இதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை. இதுபோல், எல்லாக் கட்சிகளிலும் அரசியல் நாகரிகம் வளரணும்'' என்கிறார் வாசு சீனிவாசன். நல்ல மாற்றம்!

மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருந்தது ஐக்கிய அமீரகம். அதற்குமுன். பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே வழங்கிவந்த கோல்டன் விசா, மலையாள நடிகர்களுக்கு வழங்கப்பட்டது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில், மலையாள நடிகை நைலா உஷாவுக்கும் கோல்டன் விசா வழங்கியுள்ளது அந்த நாடு. ஐக்கிய அமீரகம், மலையாள நடிகை ஒருவருக்கு கோல்டன் விசா வழங்குவது இதுவே முதல்முறை. ``இந்த கௌரவம் மகிழ்ச்சி தருகிறது'' என்கிறார் நைலா உஷா. தங்கமான வரவேற்பு!