Published:Updated:

இன்பாக்ஸ்

சுஹானா கான்
பிரீமியம் ஸ்டோரி
சுஹானா கான்

லிங்குசாமி இயக்கத்தில் ‘தி வாரியர்’ மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு ஹீரோ ராம் பொத்னேனி, மீண்டும் தெலுங்கு-தமிழ் என இறங்குகிறார்.

இன்பாக்ஸ்

லிங்குசாமி இயக்கத்தில் ‘தி வாரியர்’ மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு ஹீரோ ராம் பொத்னேனி, மீண்டும் தெலுங்கு-தமிழ் என இறங்குகிறார்.

Published:Updated:
சுஹானா கான்
பிரீமியம் ஸ்டோரி
சுஹானா கான்
சுஹானா கான்
சுஹானா கான்

ஷாருக்கான் மகள் சுஹானா கான் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கூச்ச சுபாவமுள்ள அவர், மீடியா மற்றும் ரசிகர்களிடம் நட்புடன் பழக மறுத்துவருகிறார். ஷாருக் எப்போதும் சிரித்தபடி போஸ் கொடுப்பார். சுஹானா மீடியாவிடம் பேசுவதும் இல்லை, புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதும் இல்லை. ஜான்வி கபூர், சாரா அலிகான், அனன்யா பாண்டே போன்ற நட்சத்திர வாரிசுகள் மீடியாக்கள் மற்றும் ரசிகர்களிடம் அன்பாகப் பழகுவதைச் சுட்டிக்காட்டும் சுஹானாவின் தோழிகள், அவர்களைப் போல் நடந்துகொள்ளுமாறு அட்வைஸ் செய்கிறார்கள். இருக்கிறபடியே இருங்க!

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல்பகுதியாக இருந்துள்ளது. கடல் உள்வாங்கியதால் நிலப்பரப்பாக மாறியிருக்கிறது. கடலில் வாழ்ந்த பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், தொல்லுயிர்களின் எச்சங்கள் இப்போதும் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக, சாத்தனூர் கிராமத்தில் கல்மரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் அதிகம் கிடைக்கின்றன. இவற்றைச் சேகரித்து ‘அம்மோனைட்ஸ் மையம்’ என்ற பெயரில் அருங்காட்சியகத்தைத் தொடங்கியிருக்கிறார் அரியலூர் கலெக்டர் வெங்கட பிரியா. பள்ளி மாணவ, மாணவிகள் முதல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரை பலரும் இவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். வரலாற்று உறைவிடம்!

இன்பாக்ஸ்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இடையே சில படங்களைத் தயாரித்தார். அவற்றில் ‘வெயில்’, ‘காதல்’, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘ஈரம்’ எனச் சில படங்கள் அவருக்கு வசூலையும் அள்ளிக் கொடுத்தன. அதன்பிறகு தயாரித்த படங்கள் அவருக்கு மனக்கசப்பை விதைத்ததில், தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டுவருகிறார். அறிவழகன் சொன்ன ‘ஈரம் 2’ கதை அவருக்குப் பிடித்துவிட்டது என்றும், அதைத் தயாரிக்கப் போகிறார் என்றும் பேச்சு. அதன் ரிசல்ட்டைப் பொறுத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவும் யோசனையாம். பார்ட் 2 பிரியர்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது அனைத்து வகை படைப்புகளையும் அன்னம்-அகரம் பதிப்பகம் ஒன்பது தொகுதிகளாக்கி வெளியிடுகிறது. அதற்கான உத்தேச அடக்கவிலையாக 4,000 ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்கள். 1,000 ரூபாய் மட்டும் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் தொகுதிகளில் நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைத்தொடர்கள், தொகுப்புக்கட்டுரைகள், தனிக்கட்டுரைகள், நாட்டுப்புறக் கதைகள், கடிதங்கள், வழக்குச் சொல்லகராதி என எல்லாம் அடங்குகின்றன. ஒன்பது தொகுதிகளும் சேர்ந்து சுமார் 6,500 பக்கங்கள் வருமாம். மண்வாசம்!

இன்பாக்ஸ்

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலைத் தேயிலை பறித்துக்கொண்டே தேன் குரலில் பாடும் கோத்தகிரிப் பெண்ணின் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்தன. ரிஜினா என்ற அந்தப் பெண்மணி கச்சேரிகளில் பாடி அசத்தும் பாடகராக வலம் வந்திருக்கிறார். பாட்டுக் கச்சேரியில் சக கலைஞரான லூக்காஸ் என்பவரைக் கரம்பிடித்திருக்கிறார். திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருவரும் தேயிலைத்தோட்ட கூலித்தொழிலாளிகளாக வாழ்வை நகர்த்தி வருகின்றனர். ஆனால், வீட்டிலும் பணியிடத்திலும் இருவரும் இன்றளவும் சேர்ந்து பாடி கவலை மறப்பதோடு, மற்றவர்களின் கவலைக் காயத்திற்கும் பாடல்களால் களிம்பு தடவிவருகின்றனர். இசை செய்யட்டும் மாயம்!

இன்பாக்ஸ்

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்த ‘ஹிருதயம்’ படத்தில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது, செல்வியாக நடித்த சைக்காலஜிஸ்ட் அஞ்சலி. அதே படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்யனை இப்போது அவர் கரம்பிடிக்கிறார். “காதலை நாங்கள் தேர்ந்தெடுத்தோமோ, காதல் எங்களைத் தேர்ந்தெடுத்ததோ தெரியவில்லை” என நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார் அஞ்சலி. ‘ஹிருதயம் சினிமாவில் இதயத்தை மாற்றிக்கொண்டீர்களா’ எனக் கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்கள். வாழ்க வளமுடன்!

இன்பாக்ஸ்

கமல்ஹாசனும் சரிகாவும் மும்பை விழாக்களில் இரண்டு முறை சந்தித்திருக்கிறார்கள். முதல் தடவை பரஸ்பரம் கைகூப்பி சிறிதளவு புன்னகை பூசிக் கொண்டதோடு முடிந்துவிட்டது. இரண்டாவது தடவை அருகருகே அமர்ந்து பேசிக்கொள்ள அவர்களால் முடிந்திருக்கிறது. இப்போது மகள்கள் இருவரைப் பற்றியும் அவர்கள் உரையாடிக்கொள்வதாக அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். திருமண பந்தம் முறிந்திருந்தாலும், அவர்களது நட்பு மீண்டும் துளிர்க்கும் என்கிறார்கள். முதிர்ச்சி!

இன்பாக்ஸ்

லிங்குசாமி இயக்கத்தில் ‘தி வாரியர்’ மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு ஹீரோ ராம் பொத்னேனி, மீண்டும் தெலுங்கு-தமிழ் என இறங்குகிறார். அடுத்து அவரை கௌதம் மேனன் இயக்குகிறார். நவம்பரில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன்பிறகு அடுத்த ஆண்டில் கமலின் ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தை இயக்குகிறார் கௌதம். வாய்ஸ் ஓவர் ரெடியா?

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகை கீதா பாஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. குழந்தைகளை கவனிப்பதற்காக நடிப்புக்கு பிரேக் விட்ட கீதா பாஸ்ரா, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். பவன் வாதேயார் இயக்கும் நோட்டரி என்ற படத்தில் அவர் நடிக்கிறார். மீண்டும் நடிக்க வருவதால், அதற்குமுன்பு தனது குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க துபாய் சென்று வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது, ‘இனி நான் நடிக்க வரமாட்டேன்’ என்று கீதா சொல்லியிருந்தார். சினிமாவுல இது சகஜமப்பா!

இன்பாக்ஸ்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் கஸ்தூரிராஜா எழுதிய பாமர இலக்கியம் நூலின் அறிமுக விழா, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்ற கஸ்தூரிராஜா, ‘`இதே கல்லூரியில்தான் படித்தேன். இங்குதான் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’யின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. நான் நாவலாக எழுதியிருந்த கதையை செல்வராகவன் படித்துவிட்டு, படமாக எடுக்கலாம் என்றார். அதன்படி திரைக்கதை எழுதிவிட்டு, நாயகனைத் தேடினோம். ஆனால் அந்தக் கதைக்கேற்ற நடிகர் கிடைக்கவில்லை. இறுதியாக தனுஷை அழைத்தோம். அவர் விருப்பமில்லாமல் அழுதுகொண்ட நடிக்க வந்தார். ஆனால் தற்போது தேசிய விருது பெற்றுவிட்டார்’’ என நினைவுகளில் மூழ்கினார். கலைக் குடும்பம்!