Published:Updated:

இன்பாக்ஸ்

எம்மா ரடுகானு.
பிரீமியம் ஸ்டோரி
எம்மா ரடுகானு.

அமெரிக்க ஓப்பன் பட்டத்தை 18 வயதில் வென்று சாதனை படைத்திருக்கிறார் பிரிட்டிஷ் வீராங்கனை எம்மா ரடுகானு.

இன்பாக்ஸ்

அமெரிக்க ஓப்பன் பட்டத்தை 18 வயதில் வென்று சாதனை படைத்திருக்கிறார் பிரிட்டிஷ் வீராங்கனை எம்மா ரடுகானு.

Published:Updated:
எம்மா ரடுகானு.
பிரீமியம் ஸ்டோரி
எம்மா ரடுகானு.

`இந்த ஆண்டின் செல்வாக்கான 100 மனிதர்கள்' என `டைம்' இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் வழக்கம் போல பிரதமர் மோடி இடம்பிடித்திருக்கிறார். இதில் ஆச்சர்யமாக இடம்பிடித்திருப்பவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடிவருகிறார்கள். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆடர் பூனாவாலா, அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் மஞ்சுஷா குல்கர்னி ஆகியோர் இதில் இடம்பிடித்த இதர இந்தியர்கள். மோடியா தீதியா?

ஒருவருக்கு நன்றி சொல்லும் நேரத்தில் அவரது பெயர் மறந்துபோவது சங்கடம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அப்படிப்பட்ட சங்கடத்தில் சமீபத்தில் சிக்கினார். சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் ராணுவரீதியாகக் கைகோக்கின்றன. இதற்கான விழாவில் பேசிய பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு முதலில் நன்றி சொன்னார். ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பெயர் அவருக்கு நினைவில் வரவில்லை. `அந்த ஆஸ்திரேலியர், என் நண்பர், மிஸ்டர் பிரைம் மினிஸ்டருக்கு நன்றி' என்று சமாளித்தார். யாரோ பைடனிடம் வந்து கிசுகிசுத்த பிறகு, பெயரைச் சொல்ல, ஸ்காட் மாரிசன் அதற்குள் முகம் சிவந்துவிட்டார். நன்றி மறக்கலாமா?

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள குஜராத்தில் ஆட்சிக்கு எதிராக இருக்கும் அதிருப்தியைச் சமாளிக்க முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள்வரை எல்லோரையும் புதிதாக மாற்றியிருக்கிறது பா.ஜ.க. பழைய அமைச்சரவையில் இருந்த யாருமே இல்லாமல் புதிய அமைச்சரவை இடையில் பதவியேற்பது இதுவே முதல்முறை. புது முதல்வர் பூபேந்திர பட்டேல் தலைமையிலான 25 பேர் அமைச்சரவையில் பலரும் பிசினஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரும் இன்னும் மூன்று அமைச்சர்களும் கட்டுமானத் தொழிலில் இருக்கிறார்கள். ஹோட்டல், கெமிக்கல் தொழிற்சாலை, டிரான்ஸ்போர்ட், ஜவுளி, ஜுவல்லரி என வெவ்வேறு பிசினஸ்களில் இருக்கிறார்கள் பல அமைச்சர்கள். அரசியலில் இதெல்லாம் வியாபாரமப்பா!

இன்பாக்ஸ்

நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தன் அப்பார்ட்மென்ட்டில் அம்மாவுடன் சாப்பிட்டதைப் பற்றி எமோஷனலாக ஒரு பதிவு போட்டார். ஆனால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்னவோ அந்த அறையின் சுவர்தான். மழைநீர் கசிந்து பூச்சு உதிர்ந்த அந்தச் சுவர்தான் ரசிகர்களை மனம் கலங்க வைத்திருக்கிறது. `என்னங்க இப்படி' என ஒரு ரசிகர் கேட்க, `இது வாடகை வீடு தம்பி' என ஹிர்த்திக் பதில் சொல்ல, சோக மோடுக்குச் சென்றுவிட்டனர் ரசிகர்கள். இன்னொரு பக்கம் பெயின்ட் நிறுவனங்கள், `இந்தப் பூச்சுக்கான தீர்வை நாங்கள் முன்வைக்கிறோம்' என கோதாவில் இறங்கின. இத்தனை படங்கள் நடித்த ஹிர்த்திக்கே வாடகை வீட்டில்தான் இருக்கிறாரா என நீங்களும் எமோஷனல் ஆக வேண்டாம். அந்த ஏழைத்தாயின் மகன் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டின் மாத வாடகை எட்டு லட்ச ரூபாய். புது டிசைனா இருக்கே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அமெரிக்க ஓப்பன் பட்டத்தை 18 வயதில் வென்று சாதனை படைத்திருக்கிறார் பிரிட்டிஷ் வீராங்கனை எம்மா ரடுகானு. தரவரிசையில் 150வது இடத்தில் இருக்கும் ஒருவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது அரிதான சாதனை. அப்பா ருமேனியர், அம்மா சீனர். இப்போது எம்மாவை மாடலாக வைத்து விளம்பரங்கள் செய்ய ஃபேஷன் நிறுவனங்கள் பலவும் வரிசை கட்டி நிற்கின்றன. பிரிட்டனில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக இருக்கும் எம்மா, `பில்லியன் டாலர் சம்பாதிக்கும் உலகின் இளவயது வீராங்கனை' என்ற பெருமையை விரைவில் பெறவிருக்கிறார். இன்னொரு பக்கம் தனது பெயரையே டிரேட் மார்க்காகப் பதிவுசெய்து, காஸ்மெடிக்ஸ், பெர்ப்யூம்ஸ், உடைகள், காலணிகள் என பிரத்யேக ஃபேஷன் அயிட்டங்களை விற்பனைக்குக் கொண்டுவரவும் திட்டமிடுகிறார். ‘எம்மா’டி!

ஒரு நகரத்தின் வளர்ச்சியை உணர்த்தும் விஷயங்களில் வானுயர நிற்கும் கட்டடங்கள் முக்கியமானவை. ஆனால், அதன் மறுபக்கம் பறவைகள் மட்டுமே அறிந்தது. நியூயார்க் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உலக வர்த்தக மையத்தின் அருகே இறந்து கிடந்த 300 பறவைகளைக் கண்டிருக்கிறார் தன்னார்வலரான கெயிட்லின் பார்க்கின்ஸ். இடம்பெயரும் பறவைகள், புதிதாக எழும்பியிருக்கும் இந்தக் கட்டடங்களின் வெளிச்சத்தால் கண்கள் கூச, திசை தெரியாமல் போய் மோதி இறக்கின்றன. உலக வர்த்தக மையத்தின் நடைபாதை முழுக்க வீழ்ந்துகிடந்த பறவைகளைக் கையில் ஏந்தியபடி கெயிட்லின் வெளியிட்ட வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. `நாங்கள் 200 அடி உயரம் அளவுக்கு கூசா விளக்குகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்' என விளக்கம் தந்துள்ளது உலக வர்த்தக மைய நிர்வாகம். இறந்த பறவைகள் ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை எனக் காத்திருக்கும் அதன் துணைகளுக்கு இந்த விளக்கம் ஆறுதல் தருமா என்றுதான் தெரியவில்லை. பாவம் பறவைகள்!

சிக்னல்களிலும் சாலையோரக் கடைகளிலும் திருநங்கைகள் கைதட்டிக் காசு கேட்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவைதான். ஆனால், இதற்கான தீர்வை யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கொடுக்க முயற்சி செய்துவருகிறார். காவல்துறை மூலம் அவர் நடத்திய சர்வேயில், பெரும்பாலான திருநங்கைகள் பட்டப்படிப்பை முடித்து, பல்வேறு திறமைகளுடன் வலம்வருவது தெரியவந்துள்ளது. சில நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்திய எஸ்.பி., “திருநங்கைகளுக்கு வேலை கொடுக்க முன் வாருங்கள். தகுதியான, சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கக் காவல்துறை உங்களுக்கு உதவி செய்யும்“ என்று கூறியிருக்கிறார். விரைவில், கோவை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மகிழ்ச்சி..!

ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் சிறையில் இருக்கும் கணவர் ராஜ் குந்த்ரா வெளியில் வரவேண்டும் என்பதற்காக, நடிகை ஷில்பா ஷெட்டி கோயில் கோயிலாகச் சுற்ற ஆரம்பித்தார். முதலில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்தவர், விநாயகரைக் கடலில் கரைத்த கையோடு ஆன்மிகச் சுற்றுப்பயணம் சென்றார். கேதார்நாத் புனிதத்தலம் சென்று வழிபட்டவர், அதன்பின் ஜம்முவில் உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்குக் குதிரையில் சென்றார். ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு எதிராக போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஷில்பா கோயில்களைச் சுற்றுகிறார். தாலி வரம் கேட்டுவந்தேன்...

இன்பாக்ஸ்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திருமலைநாதன் பட்டியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் வந்திருந்தார். காலையில் அலுவலகம் வந்த கலெக்டர் பிரபுசங்கர், நடக்க இயலாத நிலையில் இருந்த அந்த 66 வயது முதியவரைப் பார்த்ததும் அவரிடம் சென்று விசாரித்தார். ``நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக நடக்க இயலாமல்போய்விட்டது, எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை'' என்றார் அந்த முதியவர். உடனடியாக, கரூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒரு மணி நேரத்தில் மூக்கனுக்கு மாதம் ரூ. 1000 முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு போடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சக்கர நாற்காலியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தாடைகளை அவரிடம் வழங்கி, அவர் சொந்த ஊருக்குத் திரும்ப வாகன ஏற்பாடும் செய்தார் கலெக்டர். மூக்கன் முகத்தில் பரவசம்! நன்றே செய்!

இன்பாக்ஸ்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளைத் திரும்பவும் காட்டுக்குள்ளேயே விரட்டும் பணியில் நான்கு கும்கி யானைகளை வனத்துறையினர் ஈடுபடுத்திவருகின்றனர். இதற்காக அவை கடந்த ஒரு மாதமாக நாடுகாணி ஜீன்பூல் வனவியல் மையத்தில் உள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று இந்தக் கும்கிகளுக்கு இங்கேயே சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உள்ளூர் மக்களை அழைத்து, அவர்களுக்கும் பொங்கல் வழங்கியது வனத்துறை. விழா முடிந்த மறுநாள் காலை மூன்று சிறுவர்கள் முகாமுக்கு வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பை. ஒவ்வொன்றிலும் ஐந்து கிலோ அரிசி இருந்தது. ``யானைக்குப் பசிக்கும். இதை சமைச்சுக் கொடுத்துடுங்க'' என்றிருக்கின்றனர். இதைக் கேட்டு பாகன்கள் முதல் வனத்துறை அதிகாரிகள் வரை நெகிழ்ந்துவிட்டனர். இந்த மூன்று சிறுவர்களையும் ஜீன்பூல் பூங்காவைச் சுற்றிப் பார்க்க இலவச அனுமதி வழங்கியதோடு, பூங்காவின் தூதுவர்களாக அறிவித்திருக்கிறது வனத்துறை. யானையின் பசி போக்க நினைத்த சிறுவர்களின் பெரிய மனதைக் கண்டு வியக்கின்றனர் கூடலூர் மக்கள். மழலைப் பிரியம்!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாநகரில் எட்டு இடங்களில் நவீன பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. விசாலமாக உட்காரும் இடங்களுடன் சாய்தள வசதி, செல்போன் சார்ஜர், விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் வண்ண எல்.இ.டி ஸ்கிரீன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை தூத்துக்குடி எம்.பி கனிமொழி திறந்துவைத்தார். நிழற்குடைகளின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் `மதிப்பீடு ரூ.154 லட்சம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ``ஒரு பஸ் ஸ்டாப்புக்கு ஒன்றரைக் கோடியா?” என இந்தக் கல்வெட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. எதிர்க்கட்சிகளும் கல்வெட்டு விவகாரத்தை நக்கலடித்துப் பேச, “ஒரு பேருந்து நிழற்குடையின் மதிப்பு ரூ.19.25 லட்சம். எட்டுக்கும் சேர்த்து மொத்த மதிப்புதான் ரூ.1.54 கோடி” என மாநகராட்சி விளக்கம் தந்துள்ளது. வைரல் விலை!

கேரள சட்டசபையில் பொன்விழா கண்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்த டாக்குமென்டரி சினிமா, `தி அன் நோன் வாரியர்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. அதற்கான டீசர் வெளியிடப்பட்டுவிட்டது. மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாம். 13 நிமிடங்கள் ஓடும் இந்த டாக்குமென்டரியில் காங்கிரஸ் உள்குத்து அரசியல் பற்றி நிறைய உள்ளது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. காங்கிரஸ்னாலே கோஷ்டிதானே!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 1980-ல் எம்.பி.பி.எஸ் முடித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் காற்றின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர். இனி கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருப்பதுடன் முன்னாள் மாணவர்களான டாக்டர்களின் செயலையும் பாராட்டினர். மனிதம் துளிர்க்கட்டும்!