Published:Updated:

அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள்... பதற்றத்தில் பால் தினகரன்!

பால் தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
பால் தினகரன்

“காருண்யா மீது நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டுகளா?!”

அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள்... பதற்றத்தில் பால் தினகரன்!

“காருண்யா மீது நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டுகளா?!”

Published:Updated:
பால் தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
பால் தினகரன்

`இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் மொத்தக் கணக்கு வழக்குகளையும் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. காருண்யா வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் அதிரடி சோதனைகளால், நிலைகுலைந்துபோயிருக்கிறது பால் தினகரன் தரப்பு!

கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவருகிறது `இயேசு அழைக்கிறார்’ அமைப்பு. கடந்த 1986-ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரனால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ‘காருண்யா’ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நடத்திவருகிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பல ஏக்கர் நிலங்களையும், யானை வழித்தடங்களையும் இந்த அமைப்பினர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிவருகிறார்கள்’ என்று பல ஆண்டுகளாக இவர்கள்மீது குற்றச்சாட்டு இருக்கிறது.

பால் தினகரன்
பால் தினகரன்

தினகரன் இறந்த பிறகு அவரின் மகன் பால் தினகரனும், அவரின் குடும்பத்தினரும் மதப் பிரசார நிகழ்ச்சிகளோடு சில நிறுவனங்களையும் நடத்திவருகிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களோடு இணக்கமாக இருப்பது பால் தினகரனின் வழக்கம். அந்தவகையில் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்துப் பேசினார். ‘ஆட்சி மேலிடத்துடன் தொடர்பில் இருப்பதால், தங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் பாயாது’ என்ற நம்பிக்கையில் இருந்தது பால் தினகரன் தரப்பு.

இந்தநிலையில்தான், ஜனவரி 20-ம் தேதி காருண்யா பல்கலைக்கழகம், மருத்துவமனை, ஊழியர்கள் குடியிருப்பு, சென்னையிலுள்ள ‘இயேசு அழைக்கிறார்’ கட்டடம் என 28 இடங்களுக்குள் வருமானவரித் துறையினர் நுழைந்தனர். வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அதிகாரிகள் கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்கள்.

ரெய்டு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம், “சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கே.பி.யோஹன்னன் என்ற பாதிரியார் தொடர்புடைய இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டும் நடந்துவருகிறது. இந்தியாவிலுள்ள டாப் 10 மதபோதகப் பணக்காரர்களில் பால் தினகரனும் ஒருவர். காருண்யாவில் மாணவர் சேர்க்கையில் மோசடி நடத்தியும், வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்துக்கு முறையாகக் கணக்கு காட்டாமலும் இருந்திருக்கிறார்கள். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சி ஒன்றுக்காகச் சில வேலைகளைச் செய்வதாகவும் புகார் வந்தது. அதையொட்டியே சோதனை நடத்தப்பட்டது’’ என்றார்கள்.

இந்தத் திடீர் சோதனை, காருண்யா நிர்வாகத்துக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ‘‘பால் தினகரனுக்கு, வெளியிலிருக்கும் எதிரிகளைவிட நிர்வாகத்துக்குள்ளிருக்கும் எதிரிகள் அதிகம். பணப் பரிவர்த்தனை, சம்பளம் உட்பட பல்வேறு விவகாரங்களில் நிர்வாகத்துடன் சிலர் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள். அவர்களில் சிலர் செய்த சதி வேலையாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார்கள் காருண்யா ஊழியர்கள்.

கோவையில்...
கோவையில்...

காருண்யா நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞர் பி.ரங்கராஜுவிடம் பேசினோம். ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் நடத்திவரும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல. இவர்களின் பெரும்பாலான சொத்துகள் மத்வராயபுரம் கிராமத்தில் உள்ளது. அங்கு இவர்கள் வைத்ததே சட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வார்டு உறுப்பினர் முதல் ஊராட்சித் தலைவர் பதவி வரை பழங்குடியினருக்குக் கிடைக்க வேண்டிய ரிசர்வேஷனைக்கூட கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். இதற்குச் சில அரசு அதிகாரிகளும் உடந்தை. இது குறித்து, பழங்குடியினப் பிரதிநிதி ஒருவரைவைத்து வழக்கு தொடர்ந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஊராட்சித் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது.

அதேபோல காருண்யாவுக்கு எதிரில் நல்லூர்பதி என்றொரு பழங்குடியினர் கிராமம் இருக்கிறது. அங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்வியல், தங்களின் கல்வி நிறுவனச் சூழலைக் கெடுப்பதாக நினைத்து, அம்மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்டங்களைக் கிடைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சிறுவாணி தண்ணீர்கூட அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது. இதையெல்லாம் அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகே நியாயம் கிடைத்தது.

பி.ரங்கராஜு
பி.ரங்கராஜு

நல்லூர் வயல் என்ற கிராமத்தின் பெயரை ‘காருண்யா நகர்’ என்று தங்கள் இஷ்டத்துக்கு மாற்றினார்கள். தங்கள் வளாகத்துக்குள் காவல் நிலையம் கொண்டுவந்தவர்கள், அதையும் `காருண்யா நகர்’ என்ற பெயரிலேயே செயல்பட வைத்தார்கள். அதிகாரபூர்வ ஆவணங்களில் `காருண்யா நகர்’ என்ற பெயரே இல்லை. காருண்யாவின் `பெதஸ்தா’ ஜெபக்கூடம், மதமாற்றம் செய்யும் இடமாக இருக்கிறது. காருண்யா வருவதற்கு முன்பு அங்கு ஒரு தேவாலயம்கூடக் கிடையாது. இப்போது 15 தேவாலயங்கள் வந்துவிட்டன. இதைக் குறிப்பிட்டு `மேற்படி வழிபாட்டுத்தலங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?’ என ஆர்.டி.ஐ மூலம் கேட்டேன். `பெதஸ்தா உட்பட எந்த மத வழிபாட்டுத் தலத்துக்கும் அனுமதியளிக்கப்படவில்லை’ என்று பதில் கிடைத்துள்ளது. நில உச்சவரம்புச் சட்டத்துக்கு எதிராக, 750 ஏக்கர் விவசாய நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்துவைத்திருக்கிறார்கள். அதன்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. யானை வழித்தடங்களில் எத்தனை இடங்களில் இவர்கள் வேலி போட்டுவைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் சென்று ஆய்வு நடத்தினால் மட்டுமே அறிய முடியும்’’ என்றார் ஆதங்கத்தோடு.

‘‘காருண்யாவில் அட்டூழியங்கள் அப்பட்டமாகத் தெரிந்தும், இத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்த்துவிட்டு இப்போதுதான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க நேரம் கிடைத்ததா?’’ என்று கொந்தளிக்கும் சூழல் ஆர்வலர்கள், ‘‘காருண்யா மீது வருமான வரித்துறை ரெய்டு மட்டுமே இப்போது நடந்திருக்கிறது. அவர்கள் மீது முன்வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளை, சர்ச்சை விவகாரங்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளின்பேரிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், பல நேரங்களில் நீர்த்துப்போய்விடுகின்றன. அந்த வரிசையில் காருண்யா ரெய்டும் சேர்ந்துவிடக் கூடாது என்பதே எங்களின் கோரிக்கை’’ என்கிறார்கள்.

சென்னையில்...
சென்னையில்...

இது தொடர்பாக, காருண்யா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ஜெபசிங்கைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. காருண்யா மீதான புகார்களுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை. இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய காருண்யா பல்கலைக்கழக உயர் பொறுப்பிலுள்ள அலுவலர் ஒருவர், ``பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அனைத்தும் வெளிப்படையாக நடந்துவருகின்றன. அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை காருண்யா வழங்குகிறது. மாணவர்களிடமிருந்து பெறக்கூடிய கட்டணத்தில் 70 சதவிகிதத்தைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கே செலவிடுகிறார்கள். எந்தவிதத் தவற்றுக்கும் இடம் கொடுக்காமல் காருண்யா நிர்வாகம் செயல்பட்டுவருகிறது” என்றார்.

‘ஊசியின் காதுக்குள் ஒட்டகம்கூட நுழையலாம். ஆனால், ஒரு செல்வந்தன் இறைவனின் ராஜ்ஜியத்தில் நுழைவது கடினம்’ என்கிறது பைபிள். ஆன்மிகம் என்றில்லை, “அளவுக்கு அதிகமான பணமும் அதிகாரமும் மிகுந்திருக்கும் எந்த இடமும் குற்றங்களுக்கு வாய்ப்புள்ள இடம்தான்” என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

தேர்தல் கணக்குகளைத் தாண்டி, காருண்யா விவகாரங்களின்மீது இப்போதைய இதே தீவிரத்தோடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா அரசு?