Published:Updated:

அதிகரிக்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனை... பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

டெக்னாலஜி

பிரீமியம் ஸ்டோரி

வ்வொரு வருடமும் இந்தியாவில் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. புதிய மொபைல் களுக்கான சந்தையின் வளர்ச்சி ஒருபக்கம் இருக்க, Refurbished எனப்படும் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்கான சந்தையும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது.

கடந்த வருடத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களின் பங்கு என்பது சராசரியாக 11% எனக் கூறுகிறது Cashify என்ற நிறுவனத்தின் அறிக்கை. இந்த எண்ணிக்கையானது ஒட்டுமொத்த மொபைல் சந்தைகளில் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட மொபைல்களை வாங்குவது பாதுகாப்பானதுதானா?

அதிகரிக்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனை... பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

ஆன்லைன் அமைத்துக் கொடுத்த வாய்ப்பு

புதிய மொபைல் போன்களுக்கான சந்தை மட்டுமல்ல, இதுபோன்ற புதுப்பிக்கப்பட்ட போன்களுக்கான சந்தையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் வணிகத்தை மிக முக்கியமான ஒரு காரணமாகக் கூறலாம். மொபைல் சந்தை கடந்த சில வருடங்களில் ஆன்லைனுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. நிறுவனங்களும் அதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. மக்களைக் கவர்வதற்காக பல ஆஃபர்களையும் வழங்குகின்றன. மேலும், ஆஃப்லைன் ஸ்டோர் களைவிடவும் விலையும் குறைவாக இருப்பதால், ஆன்லைனில் விற்பனை அதிகமாகவே இருக்கிறது.

ஒரு புதிய மொபைலின் செயல்திறன் எப்படி இருக்குமோ, அதே நிலைக்குப் பழைய மொபைல்போன் கொண்டு வரப்படுகிறது. மொபைலுக்கான அக்சஸரீஸ்களும் சோதனை செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன.

இப்போதெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை புதிய மொபைல்கள் அறிமுகமாவது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக, ஒருவர் மொபைலைப் பயன் படுத்தும் காலஅளவு குறைந்துகொண்டே வருகிறது. ஒருவர் புதிதாக ஒரு மொபைல் போனை வாங்கிப் பயன்படுத்துகிறார் எனில், அடுத்த ஆறு மாதங்களில் அது பழைய போனாக மாறிவிடும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் அந்த மொபைல் போன் பழையதாகி, அதை மாற்றும் மனநிலைக்கு வந்துவிடுவார். அவர் மீண்டும் புதிய மொபைலை வாங்கும்போது, பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் முறையில் கொடுத்து, கூடுதலாகக் கொஞ்சம் பணம் தந்து புது மொபைலை வாங்கிவிடுகிறார்.

இதுபோன்று, ஒருவரிடமிருந்து எக்ஸ்சேஞ்ச் முறையில் பெறப்படும் மொபைல்கள் புதுப்பிக்கப் பட்ட மொபைல் போன்களாகக் குறைந்த விலைக்கு மீண்டும் விற்பனைக்கு வருகின்றன.

பழைய மொபைல்கள் எப்படி வாங்கப்படுகின்றன?

ஒருவரிடமிருந்து பழைய மொபைல்களை நிறுவனங்கள் பல வகையான பரிசோதனை களுக்குப் பின்னரே வாங்குகின்றன. முதலில், மொபைலை விற்பனை செய்ய நினைப்பவர் அதற்கேற்ற தளத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மொபைல் குறித்த சில கேள்விகள் கேட்கப்படும். அதன் அடிப்படையிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சில சோதனைகள் நடத்தப்பட்டு மொபைல் போனுக்கு உத்தேசமாக ஒரு விலை நிர்ணயம் செய்யப்படும்; ஆனால், அது மட்டுமே இறுதியானது கிடையாது.

அதிகரிக்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனை... பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

மொபைலுக்கான மதிப்பீடு போதுமானதாக இருக்கும்பட்சத்தில் பழைய மொபைலை விற்பனை செய்ய முடிவு செய்யலாம். அதை வீட்டிற்கே வந்து வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனங்களே செய்து தருகின்றன. வீட்டில் வந்து வாங்கும்போது டெக்னீஷியன் அதன் தோற்றம், கீறல்கள் போன்ற சில விஷயங்களை உறுதிசெய்து மொபைலுக்கான மதிப்பு எவ்வளவு என்பதை இறுதி செய்வார். இணையத்தில் தெரிவித்த தகவல்களில் ஏதாவது வேறுபட்டிருந்தால், மொபைல் போனின் மதிப்பு குறைக்கப்படும். வாடிக்கையாளர் அந்த இறுதி விலைக்கு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே பழைய மொபைல்கள் வாங்கப்படுகின்றன. இப்படிப் பெறப்படும் மொபைல்கள் அவற்றின் நிலையைப் பொறுத்து மறுசுழற்சிக்கோ அல்லது புதுப்பிக்கப்படவோ அனுப்பப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செகண்ட்ஹேண்டு போன்களும் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களும் ஒன்றா?

புதுப்பிக்கப்பட்ட மொபைல்களை வாங்குவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கவே செய்கிறது. உள்ளூர் சந்தையில் கிடைக்கும் செகண்ட்ஹேண்டு போன்கள் ஒருவரிடமிருந்து பெறப்பட்டு அப்படியே விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள் இந்த விஷயத்தில் முற்றிலும் வேறுவிதமாகக் கையாளப்படுகிறது. வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு பழைய போனும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பேட்டரி, டிஸ்ப்ளே, கேமரா, மற்றும் பட்டன்கள் ஆகியவற்றின் மேல் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மொபைலில் ஏதாவது பழுதுபட்ட பாகங்கள் இருந்தால் அவை மாற்றப்படுகின்றன. அடுத்ததாக, உள்ளே இருக்கும் டேட்டா அனைத்தும் அழிக்கப்பட்டு வேறு ஏதாவது பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறதா என்பது சோதிக்கப்படுகிறது. ஒரு புதிய மொபைலின் செயல்திறன் எப்படி இருக்குமோ, அதே நிலைக்குப் பழைய மொபைல் போன் கொண்டு வரப்படுகிறது. மொபைலுக்கான அக்சஸரீஸ்களும் சோதனை செய்யப்படுகின்றன. பின்னர் அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

அதிகரிக்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனை... பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள், செகண்ட்ஹேண்டு போன்கள் போல இல்லாமல், புதிய மொபைல்களைப் போன்றே பேக் செய்யப் பட்டு அதற்கேற்ற அக்சஸரீஸ்களுடன் கிடைக்கின்றன. புதுப்பிக்கப் பட்ட மொபைல்களை விற்பனை செய்வதற்கென்றே ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் தனியாக இணையதளங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் தொடங்கி 50,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

புதிய மொபைல்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 30 முதல் 35% வரை குறைந்த விலையில் இந்த புதுப்பிக்கப்பட்டப் போன்கள் கிடைக்கின்றன. செகண்ட்ஹேண்டு மொபைல்களுடன் ஒப்பிடும் போது இவற்றில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் இந்த மொபைல்களுக்கும் 6 முதல் 12 மாதம் வரை வாரன்டி வழங்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்பதால், இவற்றை வாங்கிப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு