Published:Updated:

ஆலங்குளம்: பிரதான கட்சிகளுக்கே டஃப்! - தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹரிநாடார்

ஹரிநாடார்

கழுத்து நிறைய நகைகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ஹரிநாடார், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அதற்கு பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவின் பிரசாரமும் முக்கிய காரணம்.

ஆலங்குளம்: பிரதான கட்சிகளுக்கே டஃப்! - தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹரிநாடார்

கழுத்து நிறைய நகைகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ஹரிநாடார், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அதற்கு பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவின் பிரசாரமும் முக்கிய காரணம்.

Published:Updated:
ஹரிநாடார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சி களமிறங்கியது. அக்கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் 44 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் சில தொகுதிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டபோதிலும் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் ஹரிநாடார்
தேர்தல் பிரசாரத்தில் ஹரிநாடார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரிநாடார் களமிறங்கினார். ஏற்கெனவே நாங்குநேரி இடைத்தேர்தலின்போது போட்டியிட்ட அவர், மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதனால் இந்தமுறை ஆலங்குளம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கழுத்து நிறைய நகைக்கடை போல நகைகளுடன் தோன்றிய ஹரிநாடார், ஆலங்குளம் தொகுதி மக்களுக்குக் காட்சிப் பொருளானார். அவரைப் பார்ப்பதற்காகவே, அவர் செல்லும் இடமெங்கும் கூட்டம் திரளத் தொடங்கியது.

அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன்
அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன்

மூன்றரை கிலோ எடைகொண்ட நகைகளுடன் காட்சியளித்த ஹரிநாடாரை தொட்டுப் பார்க்கவும் அவரது நகைகள் ஒரிஜினல் தானா என்பதை அறியவும் பெண்கள் திரண்டனர்.

ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடாரின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து அவருக்காக பங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா பிரசாரத்தில் குதித்தார். அதுவும் ஹெலிகாப்டரில் வந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதும் மக்களிடம் பிரமிப்பை பெற்றது.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜா பிரசாரம் செய்தபோது பெரும் கூட்டம் திரண்டது. சமுதாய மக்கள் கூட்டமாகக் கூடுவது, வாக்குகளாக மாறுமா என விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்களை மீறி ஹரிநாடார் கணிசமாக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆலங்குளம் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளரான பூங்கோதை ஆலடிஅருணாவுடன் போட்டியிடும் அளவுக்கு வாக்குகளைப் பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் இரண்டாம் இடத்துக்கான போட்டியில் ஹரிநாடார் இருப்பது தி.மு.க-வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திமுக வேட்பாளர் பூங்கோதை
திமுக வேட்பாளர் பூங்கோதை

ஐந்தாம் சுற்றின் முடிவில், ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க-வின் பால் மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க) 13,809 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஹரிநாடார் பனங்காட்டுப்படை) 12,518 வாக்குகளையும் பூங்கோதை (தி.மு.க) 12,142 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

5 சுற்றுகளில் முடிவில், ஹரிநாடார் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் தி.மு.க-வின் வாக்கு வங்கியில் பெருமளவு கைவைத்து விட்டதே, பூங்கோதையின் பின்னடைவுக்குக் காரணமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.