Published:Updated:

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

Edappadi K.Palaniswami
பிரீமியம் ஸ்டோரி
Edappadi K.Palaniswami

பொருளாதாரம்

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

பொருளாதாரம்

Published:Updated:
Edappadi K.Palaniswami
பிரீமியம் ஸ்டோரி
Edappadi K.Palaniswami

மிழ்நாடு அரசு மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) இணைந்து நடத்திய 18-வது கனெக்ட் சர்வதேச மாநாடு சென்னை வணிக வளாகத்தில் நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு, ‘இந்தியப் பொருளாதாரத்தின் 5 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தொடங்கிவைத்தார்கள்.

ஐ.ஓ.டி மூலம் மக்கள் சேவை

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “இ-கவர்னன்ஸில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு (AI), மெதட் பிளானிங், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT), ட்ரோன்ஸ், ஆகுமெண்டடு ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி (AR, VR) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) ஆகிய மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்களின் மூலம் மக்கள் சேவையை எளிதாக்கியிருக்கிறது. மேலும், தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் மூலம் 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், 528 நகரப் பஞ்சாயத்துகள், 121 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளுக்கு இன்டர்நெட் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் செய்துதரப் பட்டிருக்கின்றன’’ என்றார்.

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

அதிகரித்த ஐ.டி ஏற்றுமதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிக அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் நுகர்வதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்திய அரசு வெளியிட்டிருக்கும், அதிக அளவில் புதுமைகளைப் படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற கனெக்ட் மாநாட்டில் நான் கேட்டுக்கொண்டதன் விளைவாக, தமிழ்நாடு தொழில்துறைக்கு ரூ.6,500 கோடி முதலீடு பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 60,000 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவை ஏற்றுமதி 10% உயர்ந்திருக்கின்றன; வேலை வாய்ப்புகள் 4% உயர்ந்துள்ளன’’ என்றார்.

தொழில்நுட்பம் + திறமை + வெற்றி

இந்த மாநாட்டில் காக்னிஸன்ட் நிறுவனத்தின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி பேசும்போது, “தொழில்துறை வளர்ச்சியில் நான்காம் அலையான டிஜிட்டல் அலையில் நாம் பங்கேற்க வேண்டியது மிக அவசியம். இன்று ஒரு நாடு தொழில்நுட்பத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ, அதைப் பொறுத்தே தனிநபர் வருமானம் அமையும். தற்போதைய நிலையில் அனைத்து நிறுவனங்களுமே தங்களை தொழில்நுட்ப நிறுவனங்களாக பார்க்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்கள் விரைவாகத் தொழில்நுட்பம் நோக்கித் திரும்ப வேண்டியது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் நிறைய புதிய நிறுவனங்கள் வரத் தொடங்கிவிட்டன. இதனால் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ரோபோடிக்ஸ் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களால் நம் தொழில்களை எப்படி மேம்படுத்த முடியும் என கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை அறிந்து, அதற்கென பிரத்யேகத் துறையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவாக்கியிருக்கிறது. இன்று நம் கையிலிருக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகளைத் தவறவிடாமல், திறனுடன் பயன்படுத்தினால் `இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கு நிச்சயம் எட்டக்கூடியதுதான்’’ என்றார்..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுநகரங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!

ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு. “நம் நாட்டில் திறன்மிக்க மாணவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்; தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரும் இந்தியாவுக்கு வெளியே வேலை செய்வதால், இந்தியப் பொருளாதாரம் இன்னும் தன் உயரத்தை எட்டாமலேயே இருக்கிறது. இந்தியாவிலிருக்கும் திறமைசாலிகளைக் கண்டுபிடித்துச் சரியான வாய்ப்புகளை வழங்கினால், இந்தியாவால் எளிதில் அதன் இலக்கை அடைய முடியும்.

நம் தொழில்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு (R&D) அதிக முக்கியத்துவத்தை அளிக்க வேண்டிய நேரமிது. ஜப்பான், தன் பொருள்களை உருவாக்கும் சாதனங்களையும் தானே உருவாக்குகிறது. இந்தியாவும் அதைச் செய்யத் தொடங்க வேண்டும். இதன் மூலம் அதிக மதிப்புமிக்க தொழில் வாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கித்தர முடியும்.

நம் கலாசாரமும் பண்பாடும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும்தான் உயிர்ப்புடன் இருக்கின்றன. எனவே, இந்தியாவின் தொழில் வளர்ச்சி கிராமங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அதனால்தான் தனது ஆர் அண்ட் டி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை தென்காசி மற்றும் கும்பகோணத்தில் தொடங்க முயன்று வருகிறது எங்கள் ஜோஹோ நிறுவனம். சிறு நகரங்களிலிருந்துதான் இந்தியாவுக்கான வளர்ச்சி தொடங்குகிறது” என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர வேண்டும்!

சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் சமீர் கார்டே முக்கியமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ``இந்தியாவின் ஜி.டி.பி-யில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதாவது, இந்தியாவின் 9% ஜிடி.பி 6% மக்கள்தொகையிலிருந்து வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 200 பில்லியன் டாலராக இருக்கிறது. இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடி. எனவே, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினால், `5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை எளிதாக எட்டிவிடலாம்.

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்துவதில் பெரிய நிறுவனங்களைவிட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத்தான் பெரும்பங்கு உண்டு. இந்தியாவில் மொத்தம் 55-60 மில்லியன் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில்தான் இவை அதிக அளவில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இரண்டு மில்லியன் நிறுவனங்கள் மட்டுமே தங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றியிருக்கின்றன. இந்த மாற்றம் மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் நடக்க வேண்டும். அப்போதுதான் முழு வளர்ச்சியை அடைய முடியும்’’ என்றார் அவர்.

மென்பொருள், வன்பொருள் வளர்ச்சி

அடுத்ததாகப் பேசிய ஃபாக்ஸ்கானின் இந்தியத் தலைவர் ஜோஷ் ஃபோல்கர், “ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டும் கடந்த 13 ஆண்டுகளில் 1.1 பில்லியன் தொலைபேசிகளைத் தயாரித்திருக்கிறது. இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது தொழில்துறை வளர்ச்சி டிஜிட்டலையே பெரிதும் சார்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியால் மின்சாதனப் பொருள்கள் இந்திய ஜி.டி.பி-யில் தற்போதைய அளவில் 2.7% பங்களித்திருக்கின்ரன. இது 2025-ம் ஆண்டில் 8 சதவிகிதமாக உயரும்.

முக்கியமான நான்கு விஷயங்களை மேம்படுத்தினால் இந்தியப் பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் காணும். முதலாவதாக, க்ளவுட் கம்ப்யூட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதிலிருக்கும் டேட்டாக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக, இன்டெர்நெட் ஆஃப் திங்ஸை (IoT) வளர்ச்சிப் பாதையில் பயன்படுத்துவது அவசியம். 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் ஐ.ஓ.டி சாதனங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, 5ஜி தொழில்நுட்பம் வரவிருக்கிறது. அதைத் தொழில்துறையில் சரியாகப் பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சியடைய முடியும்” என்றார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

இந்திய தேசியக் கட்டண வாரியத்தின் (National Payment Corporation of India) தலைவர் சூர்ய நாரயண்சிங், “மூன்று வருடங்களுக்கு முன்னர் பண மதிப்பு நீக்கத்தின்போது இந்திய அரசால் யூ.பி.ஐ தொடங்கப்பட்டது. தொடங்கிய மூன்று மாதங்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் இந்தியரிடமும் யூ.பி.ஐ-யைக் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் இலக்கு. இதற்கென கிராமப்புறங்களிலுள்ள மக்கள் சாதாரண தொலைபேசி வைத்திருந்தாலும் அதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைபேசியிலுள்ள செயலியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

இந்தியாவின் ரூபே (RuPay) கார்டுகள் தற்போது பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பூடானிலும் யூ.பி.ஐ அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தொழில்துறை மற்றும் இதர துறைகளில் இருப்பவர்கள் இணையம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்தால், இந்தியா எளிதில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்” என்றார்.

`ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை அடைய தொழில்நுட்பரீதியில் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பேசப்பட்டன.

பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் ஈர்த்த கருத்தரங்குகள்!

இந்த மாநாடு நடந்த இரண்டு நாள்களிலும் பல தலைப்புகளில் கருத்தரங்குங்கள் நடந்தன. ‘அறிவார்ந்த சாதனங்கள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்தைத் தீர்மானம் செய்யும்’ என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் லேடன்ட்வியூவின் நிறுவனர் வெங்கட் விஸ்வநாதன் பேசினார்.

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

“தொழில்துறையை நாம் எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதலில் வாடிக்கையாளர்களைப் பற்றி 360 டிகிரியில் அறிந்துகொள்ள வேண்டும். அடுத்து, தொழில் செய்யும் இடங்களை நாம் டிஜிட்டல்மயமாக்க வேண்டும். அதன் மூலம்தான் நம்மால் உண்மையான தகவல்களை எளிதில் பெற முடியும். இன்று கார்களில் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதனால் நம்மால் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப கார்களை மாற்றியமைக்க முடியும்.

தெர்மோ ஸ்டாட், ஹெட் கவர், ஆயில் பில்டர்ஸ் ஆகியவற்றை டிஜிட்டலோடு இணைத்துவிட்டால், அதில் ஏற்படப்போகும் பழுதுகளை முன்னரே கண்டறிந்து சரிசெய்யலாம் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் தொழிலில் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்; இந்தியப் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம்’’ என்றார்.

செயற்கை நுண்ணறிவும் முக்கியம் பாஸ்!

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

அடுத்ததாகப் பேசிய டி.சி.எஸ் தலைவர் பி.ஆர்.கிருஷ்ணன், “செயற்கை நுண்ணறிவு மூலம் பல வேலைகளைத் தொழில்துறையில் மாற்றியமைக்கலாம். இதனால் தொழில்கள் பாதிக்கப்படாது, மாறாக, சுலபமாக்கப்படும். மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு சாதனங்களுடன் வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொழில்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பத்தில் புதுமையை அறிமுகப்படுத்தினால் தொழில்துறையின் மூலம் பொருளாதாரம் பல மடங்கு உயரவே செய்யும்” என்றார்.

ஐ.ஓ.டி-யைப் பயன்படுத்த ஐந்து சவால்கள்!

வோடோஃபோனின் இந்தியத் தலைவர் தீபக் பாண்டே பேசும்போது, “நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் `ஐ.ஓ.டி’ என்னும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் சிறந்த பங்களிப்பைத் தருகிறது. ஆனால், இதில் நாம் ஐந்து சவால்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. முதலில் இதன் அளவை நாம் தீர்மானிக்க வேண்டும். அடுத்து இதன் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நாம் சேகரிக்கும் தகவல்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதும் அவசியம். கடைசி இரண்டு காரணிகளாகக் கூட்டு முயற்சி மற்றும் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் 74% நிறுவனங்கள் ஐ.ஓ.டி-யை தங்கள் சேவைகளில் பயன்படுத்தவில்லையென்றால், அடுத்த ஐந்து வருடங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழில்துறைகளில் ஐ.ஓ.டி-யைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை எளிதில் முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச்செல்லலாம்” என்றார்.

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

அடுத்தாக இந்தியப் பொருளாதாரத்தைப் பணமில்லாமல் பரிவர்த்தனை செய்யும் பொருளாதாரமாக மாற்ற வேண்டிய அவசியங்கள் ஆராயப்பட்டன. `சுமார் 300 மில்லியன் இந்தியர்கள் இந்தப் பரிமாற்றத்துக்கு மாறிவிட்டால், மக்களின் வருமானம் 5 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக முன்னேற்றமடையும். இதன் மூலம் எல்லாப் பணத்தையும் கணக்கில் கொண்டுவர முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

`தொழில்நுட்பத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால்தான் வளர்ச்சி’ என்பதே இவர்கள் எல்லோரும் பேசிய உரைகளின் சாராம்சம்.