Published:Updated:

`சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா!’ - முறியடித்த இந்திய ராணுவ வீரர்கள்

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இதை கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியைக் கைவிடாமல் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. டோக்லாம் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை பல்வேறு இடங்களில் சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து முறியடித்ததோடு, கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும் முக்கியமான பகுதிகளையும் கைப்பற்றியது.

அதேபோல், யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்ததோடு, அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய - சீன எல்லையின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடிவருகிறது. எல்லைப் பகுதியில் வழக்கமான சீரமைப்பை சீனா அங்கீகரிக்காததால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே அரசியல் மற்றும் ராணுவரீதியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்திய - சீன எல்லை
இந்திய - சீன எல்லை
Representational Image

இந்தநிலையில், கடந்த ஜனவரி 20-ம் தேதி சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். வடக்கு சிக்கிம் மாநிலத்திலுள்ள நகு லா (Naku La) என்ற சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைவழியாக சீன வீரர்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதை கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 சீன வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``வடக்கு சிக்கிமின் நகு லா பகுதியில் ஏற்பட்ட மோதல் பிரச்னை நெறிமுறைகளின்படி தீர்க்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு லடாக்கில், இந்திய சீன எல்லைப் பதற்றங்களைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தைகளை நடத்திய ஒரு நாள் கழித்து, சிக்கிமில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

ஒன்பதாம்கட்டப் பேச்சுவார்த்தை:

இரு நாடுகளுக்கிடையேயான 9-ம்கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை 10:30 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து 16 மணி நேரம் நடைபெற்றது. சீன எல்லையைத் தாண்டி அமைந்திருக்கும் மால்டோ (Moldo) என்ற இடத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் லே பிராந்திய 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் (Lt Gen P G K Menon) தலைமையிலான இந்தியக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் கடந்த ஒன்பது மாதங்களாக எல்லைப் பகுதியில் நீடித்துவரும் பதற்றத்தைக் குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. சீன அதிகாரிகள் அதற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு