Published:Updated:

ஒரே நேரத்தில் மாறுபட்ட வானிலை - வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் இந்தியா!

பருவமழை காலம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வானிலை மாறுபாடுகள் நிலவி வருகின்றன.

பல்வேறு வானிலை
பல்வேறு வானிலை

தமிழக மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் பல வடமாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவமழைக் காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள பல பகுதி மக்கள் பல்வேறு மாறுபட்ட வானிலையைச் சந்தித்து வருகின்றனர்.

வெள்ளம்
வெள்ளம்

அஸ்ஸாம், பீகார், நாகாலாந்து

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களாகக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 145 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குள்ள 63,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள 6 வட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பல ஆறுகளில் அபாயக்கட்டத்தைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் நாகாலாந்திலும் கனமழை பொழிந்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை
தண்ணீர் பற்றாக்குறை

ஹைதராபாத், சென்னை, பெங்களூரு

தெலங்கானாவில் பருவமழை தொடங்கியிருந்தாலும் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இன்னும் மழை பொழியவில்லை. குறிப்பாக, அம்மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் ஹைதராபாத் குடிநீர் இல்லாத நகரமாக மாறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீர்ப்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்தியாவின் ஆறாவது மிகப் பெரிய நகரமான சென்னையில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் போதுமான மழை இல்லாதது மற்றும் இந்த வருடம் தாமதமான பருவமழை போன்ற காரணங்களால் சென்னையில் அதிக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போலவே பெங்களூரு மக்களும் தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்து வருகின்றனர். இங்கும் பருவமழை குறைந்த காரணத்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மழை
மழை
ANI

மும்பை, லக்னோ

மும்பை, லக்னோ போன்ற நகரங்களில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நதிகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த இரு நகரங்களிலும் பருவமழை முன்கூட்டியே தொடங்கி அதிகளவு மழையும் பொழிந்து வருகிறது.

நாக்பூர்

நாக்பூரில் மிகவும் தாமதமான பருவமழையால் வறட்சியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள மக்கள். அந்த நகரில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தங்கள் வறண்ட நிலங்களைப் பருவமழை விரைவில் ஆசீர்வதிக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்குள்ள விவசாயிகள் வானம் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

புழுதி புயல்
புழுதி புயல்

டெல்லி

இந்தியாவின் பல மாநிலங்களில் வறட்சி, வெள்ளம் என இருக்கத் தலைநகர் டெல்லியில் மட்டும் முற்றிலும் மாறுபட்டு புழுதிப் புயல் வீசி வருகிறது. கடந்த சில நாள்களாக அங்கு வீசிவரும் புழுதிப் புயலால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். பருவமழை தடைப்பட்டு மூடுபனி நிலவுவதால் அதிக மாசுபாட்டை சந்தித்துள்ளது.