Published:Updated:

''கொரோனாவால் தினமும் 25,000 இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள்'' - மோடி அரசு மரணங்களை மறைக்கிறதா?!

இந்தியாவில் கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல்

அமெரிக்காவின் மிக முக்கிய இதழான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்தும், மோடி அரசின் தவறான செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை தாண்டியிருக்கிறது இந்தியா. இதுவரை அமெரிக்காவில் ஒரே நாளில் 4,475 பேர் இறந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், நேற்று இந்தியா 4,529 மரணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், ''இந்தியாவில் உண்மைகள் மறைக்கப்படுகிறது, 25000- க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள்'' என்று தலையங்கம் எழுதியிருக்கிறது அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

அந்தத் தலையங்கத்தின் சுருக்கம் இங்கே!

''எந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும் இப்படிப்பட்ட பெருந்தொற்று காலத்தை சமாளிப்பது சிரமம்தான். ஆனால், அளவுக்கு மீறி தற்பெருமை, ஒற்றை அரசாட்சிக் கொள்கைகள், வாக்கரசியல் மீது குவிந்திருக்கும் அளவுகடந்த கவனம் ஆகியவை மோடி, கொரோனாவின் இரண்டாம் அலையை சமாளிக்கத் தகுதியில்லாதவர் என்று சொல்ல வைத்து விட்டது.

இந்தியாவில் தற்போது ஒருநாளுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாவதாகவும், 4000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. புள்ளிவிவரங்களின்படி இது உலகளவில் 30 சதவிகிதம். சியாட்டிலில் உள்ள ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் இவாலியுவேஷன் நிறுவனம் இந்தியாவின் உண்மை நிலை இதைவிட அதிகம் என்கிறது. இவர்களின் ஆய்வறிக்கை இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்கிறது.

''கொரோனாவால் தினமும் 25,000 இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள்'' - மோடி அரசு மரணங்களை மறைக்கிறதா?!
AMIT

அதேப்போல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையைத் தீவிரமாக கண்காணித்து வரும் நிபுணர்கள் பலரும் மோடி அரசு மரணங்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். இந்தியாவில் தினமும் 25,000 மரணங்கள் கொரோனாவால் நிகழ்கின்றன என்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தினமும் 12,360 முதல் 32,960 வரை இருக்கும் என்கிறது லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்.

கிடைக்கும் சாட்சிகளும், ஆதாரங்களும் இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்கும் என்று சொல்ல வைக்கின்றன. டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நெருங்கிய உறவினர்களையோ, நண்பர்களையோ கொரோனா தொற்றால் இழக்காத இந்தியர்களே இல்லை என்கிற நிலைதான் நிலவுகிறது.

அதிகமான மக்கள் தொகை, சுத்தமான காற்று இல்லாதது, பலவீனமான மருத்துவ கட்டமைப்பு எனப் பல குறைபாடுகள் இந்தியாவில் இருந்தாலும், உலகிலேயே தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதாலும், போலியோவை ஒழிக்க இந்தியா மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளை நேரில் பார்த்தவர்கள் என்பதாலும், இந்தியர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

ஆனால், கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், இந்தியா இதுவரை அதன் மக்கள் தொகையில் 3 சதவிகிதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 10 சதவிகிதத்தினர் ஒரு டோஸ் மட்டும் போட்டிருக்கின்றனர். மேலும், ஏப்ரலில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 43 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது மே மாதத்தில் அது ஒருநாளுக்கு 22 லட்சமாக குறைந்திருக்கிறது.

''கொரோனாவால் தினமும் 25,000 இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள்'' - மோடி அரசு மரணங்களை மறைக்கிறதா?!
Dar Yasin

எங்கே தவறு நிகழ்ந்தது?!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டே வந்ததை வைத்து மோடி அரசு கொரோனாவை வென்று விட்டதாக நம்பத்தொடங்கிவிட்டது. கடந்த பிப்ரவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய பிரதமர் மோடி, ‘’இந்தியாவில் சுனாமி போன்று கொரோனா பெருந்தொற்று பரவும் என்றார்கள். ஆனால், இந்தியா தன் நாட்டு மக்களை பெருமளவில் தொற்றில் இருந்து காத்ததோடு, 150 நாடுகளுக்கும் மருந்துகள் வழங்கி உதவி இருக்கிறது’’ என்று பேசினார்.

இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கிட்டத்தட்ட கொரோனாவை ஒழித்துவிட்டதாகவே அறிவித்தார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘தடுப்பூசி நட்பு' என ஒரு திட்டத்தை தொடங்கி இந்தியாவுக்குத் தேவையான தடுப்பூசிகள் இருக்கிறதா என்பதைக்கூட கவனிக்காமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போன மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் பிரசாரங்களில் முழு கவனத்தையும் செலுத்தினார் மோடி. இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு மோடி மட்டுமே காரணம் அல்ல என்பது உண்மைதான். எதிர்க்கட்சிகள், மக்கள் என எல்லோர் மீதும் தவறு இருக்கிறது. ஆனால், இந்தியாவை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளும் இந்த கொரோனா பெருந்தொற்றை ஒழுங்கற்ற முறையில் அணுகுவது மோடியின் மிகப்பெரிய தவறு. எல்லாம் நல்லபடியாக போன போது அதற்குரிய பாராட்டை, புகழை தனக்கே கொடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, இப்போது நிகழ்ந்திருக்கும் தவறுக்கும் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கம் எழுதியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு