Published:Updated:

கொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா!

கொரோனா போர்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா போர்

இந்தியாவைவிட குறைவான பாதிப்பு உள்ள நான்கு நாடுகளில், இந்தியாவைவிட கொரோனா இறப்புகள் அதிகம்

‘பிரமாதமாகத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தியது’ என்று புகழப்பட்ட சிங்கப்பூரில், இப்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ‘ஆரம்பத்திலேயே இறுக்கமான கட்டுப் பாடுகள் விதித்தது’ என்று கொண்டாடப்பட்ட ரஷ்யாவிலிருந்து சீனாவுக்குள் நுழையும் பலருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

ஆரம்பக்கட்டத்தில் திறம்படச் சமாளித்த ஜெர்மனி, இப்போது ரொம்பவே தடுமாறுகிறது. தென் கொரியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவும் அபாயம் இருப்பதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆயுதப் போர்முனைகளில் கிடைப்பதுபோல் ஒரு வைரஸுடனான யுத்தத்தில் உடனடி வெற்றி கிடைத்துவிடாது. அது நீண்ட போராட்டம். இத்தகைய தருணத்தில் இந்தியாவின் சூழலை நாம் ஒரேயடியாக அவநம்பிக்கையுடன் பார்க்கத் தேவை யில்லை. பெரிய மருத்துவச் செலவுகள் இல்லாமல், அதிக சேதாரமும் இல்லாமல் நடைபோடுகிறது இந்தியா. நம்பிக்கை தருகின்றன பல தகவல்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* ஏப்ரல் 19-ம் தேதி நிலவரப்படி, உலக அளவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 24. இந்தியாவுக்கு இதில் 17-வது இடம். ஏப்ரல் 14 அன்று இந்த இடத்தை இந்தியா அடைந்தது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனா பரவல் மெதுவாகவே உள்ளது.

கொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா!

‘100 நோயாளிகளிலிருந்து 10,000 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கு எவ்வளவு வேகத்தில் நாடுகள் சென்றன’ என்பதைவைத்து கொரோனா பரவல் வேகம் கணிக்கப்பட்டது. சீனா வெறும் 10 நாள்களில் 100 நோயாளிகளிலிருந்து 10,000 என்ற எண்ணிக்கைக்குச் சென்றது. துருக்கி 11 நாள்களில் சென்றது. இந்தியா 30 நாள்களுக்குப் பிறகே 10,000 என்ற எண்ணிக்கைக்குச் சென்றது. மிக மெதுவாக இந்த இடத்துக்குச் சென்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இந்தியா உள்ளது. தென் கொரியா 42 நாள்களுக்குப் பிறகு இந்த இடத்துக்குச் சென்றது.

* இந்தியாவைவிட குறைவான பாதிப்பு உள்ள நான்கு நாடுகளில், இந்தியாவைவிட கொரோனா இறப்புகள் அதிகம். பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் குறைவே!. பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் குறைவே!

* ஏப்ரல் 16 அன்று, இந்தியா 12,000 நோயாளிகள் என்ற எண்ணிக்கையைக் கடந்தது. அப்போது ஏழு நாள்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. அதற்கு முன்பு வரை நான்கு நாள்களுக்கு ஒருமுறை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொண்டிருந்தது.

* அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் தேசம் முழுக்க கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் அப்படியில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் 62 சதவிகித நோயாளிகள் உள்ளனர். அதிக பாதிப்புள்ள முதல் பத்து மாநிலங்களில் கணக்கிட்டால், 89 சதவிகித நோயாளிகள் உள்ளனர். இந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தினால், கொரோனாவைக் கட்டுக்குள் வைக்கலாம்.

* மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், உலகிலேயே மிகக் குறைவான பாதிப்பு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று! அமெரிக்காவில் பத்து லட்சம் பேரில் 2,100 பேர் கொரோனா நோயாளிகள். இத்தாலியில் இது பத்து லட்சம் பேருக்கு 2,900 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் பத்து லட்சம் பேரில் 12 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* உலகிலேயே அதிக பாதிப்புக்கு ஆளானபோதும், அமெரிக்கா தேசிய அளவிலான ஊரடங்கை அறிவிக்க வில்லை. ஆனால், உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, வெறும் 600 நோயாளிகள் இருந்த நேரத்தில் ஊரடங்கை அறிவித்தது. இது நல்ல பலன் தந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய் பரவும் வேகம் இந்த ஊரடங்கில் குறைந்துள்ளது.

மும்பை தாராவியில்  ஒரு மெடிக்கல் கேம்ப்...
மும்பை தாராவியில் ஒரு மெடிக்கல் கேம்ப்...

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தந்திருக்கும் புள்ளிவிவரங்களின்படி, கொரோனா பாதித்த 47 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

* பலரும் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு, ‘இந்தியாவில் பரிசோதனைகள் குறைவு’ என்பதே! நோய் அறிகுறி இருந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே பரிசோதனை நடைபெற்றது. இதில் சுவாரஸ்யமான ஒரு புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. அதாவது, இங்கிலாந்தில் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3.4 பேரில் ஒருவருக்கு பாசிட்டிவ் கண்டறியப்பட்டு, கொரோனா நோயாளி என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இது 5.3 பேரில் ஒருவர் என இருந்தது. இத்தாலியில் 6.7 பேரில் ஒருவரும், ஜப்பானில் 11.7 பேரில் ஒருவரும் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றனர். இந்தியாவில் இது 24 பேரில் ஒருவர் என்ற அளவில்தான் உள்ளது. அதாவது, ‘கொரோனா நோயாளி’ என்ற சந்தேகத்தில் பரிசோதிக்கப்பட்ட 24 பேரில் 23 பேர் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர்.

ஜம்முவில் தூய்மைப் பணியாளர்கள்...
ஜம்முவில் தூய்மைப் பணியாளர்கள்...

*கேரளாவின் வெற்றிக் கதை நாம் அறிந்ததே! ஆனால், மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பு கொண்ட பீகாரும் சாதனை புரிந்துள்ளது. ஏப்ரல் 19 நிலவரப்படி, பீகார் கொரோனா நோயாளிகளில் 43 சதவிகிதம் பேர் நலமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

* ‘கொரோனா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வருவோரை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும்’ என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்தது. ‘கொரோனா வைரஸ் தாக்கம் அப்போதுதான் தெரியும்’ என்பதால் இந்தப் பரிந்துரை. ஆனால், கேரளா இதைப் புறக்கணித்துவிட்டு 28 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கிறது. ‘கேரளா செய்ததே சரி’ என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது.

கொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா!

மார்ச் 17-ம் தேதி துபாயிலிருந்து 40 வயது நபர் ஒருவர் கேரளாவின் கண்ணனூர் வந்தார். வந்த 26 நாள்கள் கழித்து அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதுவரை அவர் ஆரோக்கியமாக இருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மார்ச் 15 அன்று வந்த 11 வயது சிறுவனுக்கு, 24 நாள்கள் கழித்து செய்யப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. மார்ச் 22 அன்று பாலக்காடு வந்த ஒருவருக்கு 23 நாள்கள் கழித்து செய்யப்பட்ட பரிசோதனை, பாசிட்டிவ் ரிசல்ட் காட்டியது.

ஒருவேளை 14 நாள்கள் கழித்து இவர்களை வெளியில் விட்டிருந்தால், பலருக்கும் கொரோனா பரவியிருக்கும். இப்படி தீர்க்கமாக முடிவுகள் எடுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கே வழிகாட்டுகிறது கேரளா.

நம்பிக்கையைப் பரப்பி, கொரோனா பரவலைத் தடுப்போம்!

முதல் நோயாளியின் வெற்றிக்கதை!

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி, கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி. கொரோனா முதலில் பரவிய சீனாவின் வூஹான் நகரில் படித்துக்கொண்டிருந்தவர். இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, ஜனவரி 31-ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 25 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாக குணமடைந்தார். தன் அனுபவம் குறித்து அவர் அளித்த பேட்டி, நமக்கெல்லாம் நம்பிக்கையளிக்கிறது.

‘‘சீனாவில் நிகழ்ந்த மரணங்களை, கேரள மருத்துவமனையிலிருந்தபடி கேள்விப்பட்ட நான் பயந்திருந்தேன். ஆனால், டாக்டர்களும் மருத்துவப் பணியாளர்களும் என்னிடம் நம்பிக்கையுடன் பேசினார்கள். எனக்கு பிரியாணி பிடிக்கும். ‘என்ன பிடிக்கிறதோ அதைச் சாப்பிடுங்கள்’ என மருத்துவர்கள் அனுமதி தந்தனர். வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி சிகிச்சையளித்தனர்.

சீனாவில் உள்ள எங்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆன்லைனில் வகுப்புகள் நடத்தினார்கள். அதற்காக அரசு மருத்துவ மனையில் எனக்கு வைஃபை வசதி செய்துகொடுத்தனர். நான் படிப்பதற்குத் தேவை யான உதவிகளையும் செய்தனர். படிப்பில் மூழ்கினேன். ஓய்வு நேரங்களில் மலையாள சினிமா காமெடிக் காட்சிகளைப் பார்த்து மனதை லேசாக்கிக்கொண்டேன்.

எனக்கு அடுத்தடுத்து இரண்டு பரிசோதனை களில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். சீனாவில் உள்ள என் பேராசிரியர்களுக்கு இந்தத் தகவல் ஆறுதல் தந்தது. அவர்கள் அங்கு பெரும்பாலும் மரணச் செய்திகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். நான் இந்தியாவிலிருந்து நல்ல செய்தியைச் சொன்னேன். நான் வீடு திரும்பிய பிறகும், எனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களும் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சில நாள்கள் இருக்க நேரிடும். அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதியான பிறகே வீடு திரும்ப முடியும். மருத்துவத் தொழிலின் மகத்துவம் இதுதான். மீண்டும் சீனாவின் வூஹான் சென்று மருத்துவப் படிப்பை முடிப்பேன். திரும்பிவந்து நம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்வேன்."

தேறியதும் சேவை செய்ய வந்தார்!

ராஜேஷ் அஸ்வாரா... கொரோனா மோசமாக பாதித்துள்ள மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர். அந்த நகரில் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நோயாளி. கொரோனா தாக்கிய பெண் நோயாளி ஒருவருக்கு மருந்தும் உணவும் கொடுத்துப் பராமரிக்கும் பணியைச் செய்துவந்தார் ராஜேஷ். அந்தப் பெண், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். அதன்பிறகுதான் ராஜேஷுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

‘‘அது தெரிந்த முதல் 15 நிமிடங்கள் என் கால்கள் நடுங்கின. தனிமை வார்டில் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட முதல் நாள் நரகமாகக் கழிந்தது. தினமும் இரண்டு, மூன்று மரணங்களைப் பார்த்து, ‘என் முறை எப்போது’ என்று கேட்டுக்கொள்வேன். ஆனால், டாக்டர்களும் பணியாளர்களும் நம்பிக்கை தந்தனர். எல்லோரும் பல ஆண்டுகள் எனக்குப் பழக்கமானவர்கள். ‘நீ குணமடைந்து வீடு திரும்புவாய். இங்கு இருக்கும் மற்ற நோயாளிகளுக்கு நீதான் நம்பிக்கை தந்து ஆறுதலாக இருக்க வேண்டும்’ என்றனர். அது என்னை மாற்றியது. சகநோயாளிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தேன். அதன்பிறகு என் நம்பிக்கையை துளியும் இழக்கவில்லை. அதனால் சிகிச்சை பலன் தந்து குணமடைந்தேன்’’ என்ற ராஜேஷ், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மறுநாளே கொரோனா வார்டில் பணியில் சேர்ந்துவிட்டார்.