Published:Updated:

`தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் தங்கம்!'- இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

ராம் பிரசாத்

'தண்ணீர் பிரச்னைக்கு தங்கம் மூலம் தீர்வு காணலாம்' என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கறுப்புத் தங்கம்
கறுப்புத் தங்கம்

`தண்ணீர் தங்கம் விலை விற்குது’. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டிய சூழல் உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில், தண்ணீர் லாரியின் வரவை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர். 'தண்ணீர் எவ்வளவு விலைக்கு வித்தாலும் வாங்கித்தான ஆகணும்' என்ற சூழல். இந்த தண்ணீர் பிரச்னைக்கு தங்கம் மூலம் தீர்வு காணலாம் என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வேதி வினை
வேதி வினை
TIFR

மும்பையைச் சேர்ந்த TIFR (Tata Institute of Fundamental Research) விஞ்ஞானிகள், தங்கத்தின் நானோ துகள்களுக்கு இடையேயான அளவு மற்றும் இடைவெளியை மறுசீரமைப்பதன்மூலம் ஒளி மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் என்பதனை கண்டுபிடித்துள்ளனர். தங்கத்திற்கு இயல்பிலே இந்தப் பண்புகள் இல்லை. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன்மூலம் கறுப்பு நிற தோற்றத்தில் புதிய பொருளை உருவாக்கியுள்ளனர். இது கறுப்பு நிறத்தில் இருப்பதால், கறுப்புத் தங்கம் எனப் பெயரிட்டுள்ளனர். 'தங்கத்துடன் வேறு எந்தப் பொருளையும் சேர்க்கவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள விஞ்ஞானிகள், ``இந்த கறுப்புத் தங்கத்திற்கு அருகில் உள்ள வெளிச்சத்தை ஈர்க்கும் திறன் உள்ளது. இதனை சோலார் கருவிகளில் பயன்படுத்த முடியும். கறுப்புத் தங்கத்தை நானோ ஹீட்டர்களில் பயன்படுத்தும்போது, கடல்நீரை குடிநீராக மாற்றலாம். இதன்மூலம் செயற்கை இலைகளைக்கொண்ட ஒரு செயற்கை மரத்தை உருவாக்கினால், அதன்மூலம் ஒளிச்சேர்க்கை செய்ய முடியும்.

வேதி வினை
வேதி வினை
TIFR

கார்பன் டை ஆக்ஸைடைக் கொண்டு பிற பயனுள்ள ரசாயனங்களைப் பெற முடியும். எதிர்காலத்தில் இதனை மேம்படுத்த முடியும். இந்தக் கண்டுபிடிப்பு, இந்தியாவில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என நம்புகிறோம்” என்றனர்.