`கல்வி, செல்வத்தால் ஆணவம் வருகிறது; விவாகரத்து நடக்கிறது!' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
கல்வியும் செல்வமும் மக்களுக்கு ஆணவத்தைக் கொடுக்கிறது இதனால் மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மோகன் பகவத்தும் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பின்னர் கூட்டத்தில் பேசியவர், ``இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன. அற்பமான விஷயங்களுக்கெல்லாம் மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். படித்த மற்றும் வசதிபடைத்த குடும்பத்தில்தான் அதிகப்படியான விவாகரத்துகள் நடக்கின்றன.
கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக மக்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. இங்கும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர். மில் முதலாளிகளும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிருப்தியுடனே வாழ்கின்றனர்.
இந்த சமூகம் என்பது நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டும். சமூகம் என்று நான் சொல்வது ஆண்களை மட்டும் இல்லை. இரண்டு உலகப்போர்கள் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மூன்றாம் உலகப்போருக்கான நிகழ்வுகள் இங்கு அரங்கேறி வருகிறது.
மூன்றாம் உலகப்போருக்கான யுத்தம் வேறு வடிவில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. வன்முறையும் எதிர்ப்பு உணர்வும் இங்கு அதிகரித்து காணப்படுகிறது” எனக் கூறினார்.