Published:Updated:

வெறும் 200 ரூபாய் நிலக்குத்தகையில் 60 லட்ச ரூபாய் வைரம் கிடைத்த கதை!

பன்னா வைரச் சுரங்கம்
பன்னா வைரச் சுரங்கம்

அவர் தேடியெடுத்து கற்களில் ஒன்று சற்று வித்தியாசமாக இருக்கவே, அதை மாவட்ட வைர அதிகாரியிடம் கொண்டு சென்றிருக்கிறார். அதிர்ஷ்டத்திற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக கவ்பாய் தொப்பி அணிந்து வந்த லக்கன் யாதவிற்கு அன்றுதான் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பன்னா நகரத்தில் வைரச் சுரங்கம் செயல்படுகிறது. இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய வைரச் சுரங்கம். இங்கு, வைரங்கள் குறைவான ஆழத்திலேயே கிடைக்கும் என்பதே இந்த சுரங்கத்தின் சிறப்பு. பன்னாவில் உள்ள உள்ளூர் வாசிகள், வைர வேட்டையில் ஈடுபடுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மாநில அரசே குறிப்பிட்ட அளவில் அம்மக்களுக்கு நிலம் குத்தகைக்கு வழங்குகிறது. சட்டப்படி மத்தியப்பிரதேச மாநில ராயல்டி,11.5 சதவிகித பணமும் வரியும் பிடித்தம் போக மீதிப் பணம் வைரத்தைக் கண்டெடுத்தவருக்கு வழங்கப்படுகிறது. இதனால் தனி நபர்கள் இங்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, வைர வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மக்கள் இதைச் செய்து வருகின்றனர்.

லக்கன் யாதவ்
லக்கன் யாதவ்
tv9hindi.com

இந்த வைர வேட்டையில் லட்சாதிபதிகளான உள்ளூர் அதிர்ஷ்டசாலிகள் ஏராளம். சமீபத்தில் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் லக்கன் யாதவ். 45 வயதான இவர் பல வருடங்களாகவே அப்பகுதியில் துண்டு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் வைரம் தேடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படித்தான் சமீபத்தில் 10mt X 10mt அளவுள்ள சிறு துண்டு நிலத்தை 200 ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளார். நவம்பர் 6-ம் தேதி வழக்கம் போல அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் தேடியெடுத்து கற்களில் ஒன்று சற்று வித்தியாசமாக இருக்கவே, அதை மாவட்ட வைர அதிகாரியிடம் கொண்டு சென்றிருக்கிறார். அதிர்ஷ்டத்திற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக கவ்பாய் தொப்பி அணிந்து வந்த லக்கன் யாதவிற்கு அன்றுதான் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

அவர் கண்டெடுத்த கல் 14.98 காரட் வைரக்கல். அந்த வைரத்தை அதிகாரிகள் ஏலத்தில் விட 60.6 லட்ச ரூபாய்க்கு சொந்தக்காரராகி இருக்கிறார் லக்கன் யாதவ். இதுகுறித்து பத்திரிகைகளிடம் பேசியவர், இந்தப் பணத்தை வாங்கி சேமிப்பில் வைத்து தன் நான்கு பிள்ளைகளின் படிப்பிற்காகப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லியிருக்கிறார். மீண்டும் அந்த நிலத்தில் குத்தகை காலத்தை நீடித்து, ஒரு வாரம் தேடப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

வைரம்
வைரம்

பன்னா நகர வரலாற்றிலேயே அதிக காரட் வைரக்கல் 1961-ம் ஆண்டு கிடைத்தது. அந்த வைரக்கல் 44.55 காரட் இருந்தது. அதன்பிறகு 2018-ம் ஆண்டு வைர வேட்டையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி மோதிலால் பிரஜாபதி (30) என்பவருக்கு, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 42.9 காரட் வைரம் கிடைத்தது.

அடுத்த கட்டுரைக்கு