`40 மணிநேரத்தில் புதிய நோயாளிகள் இல்லை!' – உற்சாகத்தை வெளிப்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் #corona
டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த 40 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. டெல்லியில் நேற்று மாலை முதலே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசானது மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , ``டெல்லி மக்களுக்கு கூடுதலாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். அதேபோல் ஏப்ரல் மாதத்துக்கான முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும் என்றார்.
மேலும், டெல்லி நிலவரம் தொடர்பாக ட்விட்டரில் தெரியப்படுத்தி வருகிறார். இன்று காலை செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்த கெஜ்ரிவால், ``கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை” எனப் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, ``டெல்லியைப் பொறுத்தவரையில், கடந்த 40 மணிநேரத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு நல்ல செய்திதான். ஆனாலும் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
கொரோனாவுக்கு எதிரான நம்முடைய சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எண்கள் எப்போது வேண்டுமானாலும் உயரலாம். நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டடத் தொழிலாளருக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது
அதேநேரத்தில் டெல்லியில் பணிபுரியும் தினக்கூலிகள் வாடகை வீடுகளில் குடியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலரால் வாடகை செலுத்த முடியாத சூழல் இருக்கும். எனவே, வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு 2 -3 மாதங்கள் சில சலுகைகள் வழங்கலாம். அதேபோல் டெல்லி நகரத்தில் இரவு தங்குமிடங்களை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரையில் கொரோனா இப்போது இரண்டாவது கட்டத்தில்தான் உள்ளது. 3-ம் கட்டத்தை எட்டவில்லை என்பதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு 3-ம் கட்டத்தை எட்டினாலும் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
டாக்டர் ஷெரின் தலைமையிலான 5 மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா குறித்த தகவல்களை 24 மணிநேரமும் என்னிடம் தெரிவிப்பார்கள். 3-ம் நிலையை எட்டினால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.