Published:Updated:

விவசாயிகளுக்காகப் பதவியைத் துறந்த டி.ஐ.ஜி... யார் இந்த `சர்ச்சை மனிதர்' லக்மிந்தர் சிங் ஜாகர்?

டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர்
டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் ( Lakhminder Singh/Facebook )

தற்போது தான் செய்த ராஜினாமாவிற்கும் தன் மேல் இருக்கும் குற்றச்சாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் லக்மிந்தர் சிங் ஜாகர்.

"புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாகப் போராடிவரும் எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்க விரும்புகிறேன். இதன் காரணமாக நான் என் பணிக்காலம் முடியும் முன்னரே ஓய்வு பெறுகிறேன்."
பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர்
தனது பதவியை ராஜினாமா செய்வதாக தன் மாநில முதன்மை செயலாளரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இவை.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் போராட்டம் கவனம் பெறுவதுடன் ஆதரவும் அதிகரித்து வருகிறது. முதலில், 'விவசாயிகளுக்கு இந்தச் சட்டங்கள் குறித்த தெளிவை ஏற்படுத்துங்கள்' என்று வலது பக்கமிருந்து ஒலித்த குரல்கள்கூட விவசாயிகளின் போராட்டங்களையும் அவர்கள் ஒவ்வொரு பேட்டிகளிலும் முன்வைக்கும் தெளிவான கேள்விகளையும் கண்டு சற்றே தங்களின் வால்யூமை குறைத்துக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பிரதமர் விவசாயிகளின் போராட்டத்தை இன்னமும் வளரவிடாமல் இதற்கு சுமூகத் தீர்வை எட்ட முயலவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் விருப்பமாக உள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இது இப்படியிருக்க, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோ, அவர்கள் போராடும்போது எனக்குப் பிறந்தநாள் முக்கியமில்லை, கொண்டாட்டம் அவசியமில்லை எனக் கூறி பல பிரபலங்கள் பல இதயங்களை வென்று லைக்ஸை அள்ளி வருகிறார்கள். பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் ராஜினாமா முடிவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சாரர் அவரின் 'சர்ச்சை' வரலாற்றைத் தோண்டி எடுத்து, ''இது ஒரு சந்தர்ப்பவாத முடிவாகத் தெரிகிறதே'' எனச் சந்தேகம் கிளப்பிவருகிறார்கள்.

யார் இந்த லக்மிந்தர் சிங் ஜாகர்?

1989 முதல் 1994-ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லக்மிந்தர் சிங் ஜாகர், அதன் பிறகு பஞ்சாப் சிறைச்சாலைத் துறையில் 1994-ம் ஆண்டு துணைக் கண்காணிப்பாளராக இணைந்தார். இந்த ராஜினாமாவிற்கு முன்பு வரை சண்டிகரில் சிறைத்துறையின் துணைத் தலைவராக இருந்தவர். 2022-ல் ஓய்வுபெற வேண்டியவர். இதற்கு முன்னர் இதே 2020-ம் வருடம் மே மாதம் செய்திகளில் அடிபட்டார். அவர்மேல் லஞ்சம் வாங்கியதாகப் புகார் வாசிக்கப்பட்டது. விசாரணை நடந்து வந்தபோது தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 7, 2020 அன்று, ஜாகரும் அவரின் சிறை பணியாளர்களும் மாத மாதம் தன்னிடம் லஞ்சம் பெற முயன்றதாக துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் என்பவர் குற்றம் சுமத்தினார். விஜய் குமார், ரூ.10,000-த்தை டி.ஐ.ஜி ஜாகருக்கும், சிறை வார்டன்கள் ரூ.3,000-த்தை ஜாகரின் டிரைவருக்கும் கொடுத்ததாக தன் புகாரில் தெரிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜாகர் இதை மறுக்க, விசாரணையும் இழுத்துக்கொண்டே போக, குற்றம் நிரூபிக்கப்படாத வேளையில் ஒருவரை அதிக நாள்கள் பணி இடைநீக்கம் செய்ய முடியாது என்ற சட்டரீதியான முகாந்திரத்தைப் பயன்படுத்தி, அக்டோபர் மாதமே மீண்டும் பணியில் சேர்ந்தார் லக்மிந்தர் சிங் ஜாகர்.

டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர்
டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர்
ANI

தற்போது தான் செய்த ராஜினாமாவிற்கும் தன் மேல் இருக்கும் குற்றச்சாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஜாகர்.

"என்னுடைய 32 வருட சர்வீஸில், ராணுவத்திலிருந்ததையும் சேர்த்து என் மீது எங்குமே யாருமே புகார் அளிக்கவில்லை. நான் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்திற்குள் தற்போது செல்ல விரும்பவில்லை. இந்திய அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானவை. எதிர்காலத்துக்கு எதிரானவை. நான் பதவியை ராஜினாமா செய்ததற்கு விவசாயிகள் பிரச்னை தொடர்பான என் தனிப்பட்ட மனக்கசப்பே காரணம். அவர்கள் குளிரில் அந்த சாலைகளில் அமைதியாகப் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவாகத்தான் இந்த முடிவு!"
என்று விளக்கியுள்ளார் லக்மிந்தர் சிங் ஜாகர்

ஆனால், இன்னும் 8 வருடங்கள் முன்னே சென்றால், அதாவது கடந்த 2012-ம் ஆண்டு, இதே ஜாகர், பட்டியாலா சிறை கண்காணிப்பாளராக இருந்தபோது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனையை நிறைவேற்றாமல் அதற்கான வாரன்டுகளைத் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் இவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 'Show-cause' நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவுகளில் தலையிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் லாகர் இது தொடர்பாக நீதிபதிகளிடம் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, அவர் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
"என் ராஜினாமாவிற்குக் காரணம் நான் விவசாயியின் மகன் என்ற ஒரே காரணம்தான். எங்களுக்கு அபோஹரில் நிலம் உள்ளது. என் அப்பா அதில் விவசாயம் செய்துதான் என்னைப் படிக்கவைத்தார். என் அப்பா இறந்தபிறகு என் அம்மாதான் நிலத்தைப் பார்த்துக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார். 81 வயதான அவர், இன்னமும் பயிர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்!"
என்றும் சொல்கிறார் லக்மிந்தர் சிங் ஜாகர்.

"நான் விவசாயியின் மகன்!" - எங்கேயோ கேட்ட குரல்(கள்).

அடுத்த கட்டுரைக்கு