Published:Updated:

அறியப்படாத தமிழகத்தை அறிய வைத்த அறிஞர்!

தொ.பரமசிவன்
பிரீமியம் ஸ்டோரி
தொ.பரமசிவன்

ஒரு சாதி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வைதீகம் இவற்றுக்கு எதிராகவே தமிழ்ப்பண்பாடு இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் வழியே நிறுவிய ஆய்வாளர்.

அறியப்படாத தமிழகத்தை அறிய வைத்த அறிஞர்!

ஒரு சாதி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வைதீகம் இவற்றுக்கு எதிராகவே தமிழ்ப்பண்பாடு இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் வழியே நிறுவிய ஆய்வாளர்.

Published:Updated:
தொ.பரமசிவன்
பிரீமியம் ஸ்டோரி
தொ.பரமசிவன்

நீண்ட வரலாறும் தொன்மையும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டை, பன்முகத்தன்மைகொண்ட மக்கள் பண்பாடாக அணுகி, அதன் நுண்ணரசியலை ஆவணப்படுத்திய தொ.பரமசிவன் மறைந்தார். பெருந்தெய்வங்கள், பெருமதம், ஒரு சாதி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வைதீகம் இவற்றுக்கு எதிராகவே தமிழ்ப்பண்பாடு இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் வழியே நிறுவிய ஆய்வாளர்.

கல்வெட்டுகளும் பயணக்குறிப்புகளும் மட்டுமே வரலாறு எழுதுவதற்குப் போதுமானவை அல்ல, மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வாய்மொழிக்கதைகள் ஆகியவையும் வரலாற்றெழுத்தியலுக்கு முக்கியம் என்பதை நிறுவியவர் தொ.ப. தன்னைப் பெரியாரியவாதியாக அடையாளப்படுத்தி க்கொண்டே நாட்டார் தெய்வங்கள் வழி உணர்த்தப்படும் அரசியலையும் பண்பாட்டையும் எழுத்தாக்கினார். வெறுமனே ஆய்வுத்தளத்துடன் நின்றுவிடாமல் சமகால அரசியல் தேவைகளையொட்டி மதவாதம், சாதியம் ஆகியவற்றுக்கு எதிரான வெளியீடுகளையும் கொண்டுவந்தார். தொ.பரமசிவன் தமிழ்ப்பண்பாட்டின் மாபெரும் கொடை. அவருடைய மறைவை தமிழையும் தமிழரையும் நேசிக்கும் அனைவருமே சொந்த இழப்பாகக் கருதுகின்றனர்.

பாளையங்கோட்டையில் ஒரு ஓட்டுநருக்கு மகனாகப் பிறந்த தொ.பரமசிவன், சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இளங்கலையில் பொருளாதாரம் படித்த தொ.ப, ஆய்வின் மீதிருந்த நாட்டத்தால் முதுகலையில் தமிழ் படித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அழகர் கோயில் குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். தொ.ப-வின் ஆய்வுப் பிரதியை நூலாக்கியதோடு மட்டுமன்றி, பிற்காலத்தில் ஆய்வுசெய்ய வந்த மாணவர்களுக்கு முன்னுதாரணப் பிரதியாகவும் அதைப் பரிந்துரைத்தது பல்கலைக்கழகம்.

அறியப்படாத தமிழகத்தை அறிய வைத்த அறிஞர்!

சர்க்கரை நோய் வதைக்க, விருப்ப ஓய்வுபெற்று சிகிச்சையில் இருந்த தொ.ப, கடந்த 24-ம் தேதி மறைந்தார். அவரின் பங்களிப்புகள் பற்றியும் அவருடனான நட்பு பற்றியும் நெகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறார்கள் மூன்று ஆளுமைகள்.

அ.கா.பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்:

தமிழகத்தில் சமூகவியல், மானுடவியல் சார்ந்த ஆய்வாளர்களில் தொ.பவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்; மார்க்சியத்தின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால், எழுதிய எந்தப் புத்தகத்திலும் தன் கொள்கைகளைத் திணித்ததில்லை. கோயிலுக்குச் சென்றால் அங்கிருக்கும் சிற்பங்களில் பண்பாட்டு ரீதியான படிமங்களைத் தேடுவார்.

ஒவ்வொரு விஷயத்தையும் தொ.ப பார்க்கும் விதமே நுட்பமாக இருக்கும். நாட்டார் வழக்காறுகள் குறித்து ஆய்வு செய்பவர்கள், வெள்ளைச்சாமி, கருப்பசாமி, விருமாண்டி போன்ற தெய்வங்களைப் பேசும்போது பெயரை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய் விடுவார்கள். தொ.ப பழைய பிரதிகளையெல்லாம் அலசி ஆராய்ந்து, ‘அக்கால பலராமன்தான் வெள்ளைச்சாமி என்று சொல்லப்படுகிறான்’ என்பார். வைதீக மரபும் நாட்டார் மரபும் எப்படி ஒன்றையொன்று கலந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக விளக்குவார்.

‘சம்பளம்’ என்ற சொல்லின் வேர் பற்றி தொ.ப சொல்வது வியப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பா நெல்லையும், அளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட உப்பையும்தான் கூலியாகக் கொடுத்தார்கள். இன்று உப்பு சாதாரணப் பொருளாக மாறிவிட்டது. சங்க காலத்தில் ‘நெல்லும் உப்பும் நேரே’ என்று பாடியிருக்கிறார்கள். ‘சம்பா நெல்லும் அளத்து உப்பும் சேர்ந்தே சம்பளமானது’ என்பார் தொ.ப. இந்தப் பார்வைதான் தொ.ப மீது மிகுந்த மரியாதையை உருவாக்கியது.

கோயில்களைப் பற்றி எழுதப்படும் புத்தகங்கள், வைதீகத்தின் பின்னணியில் புனிதத்தன்மையைக் கட்டமைப்பதாகவே இருக்கும். கோயிலுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு, தனி மனிதர்கள் கோயிலோடு கொண்டிருந்த உறவு பற்றிய பார்வையிலிருந்து தொ.ப வரலாற்றை எழுதுகிறார். வைதீக மரபை முன்னிறுத்தி எழுதப்படும் நூல்களில் இந்த உறவு மறைக்கப்பட்டுள்ளது. தொ. ப. அதை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

நாகர்கோவிலில் நெய்தல் அமைப்பு சார்பில் சுனாமி நேரத்தில் ஒரு கருத்தரங்குக்கு அவரை அழைத்திருந்தேன். வைணவ சம்பிரதாயத்தில் இடம்பெற்றுள்ள நெய்தல் சார்ந்த செய்திகள் பற்றி அதில் பேசினார். அதையும்கூட அவர் கட்டுரையாக வாசிக்கவி ல்லை. ஒரு துண்டுக் காகிதத்தில் குறிப்புகள் எழுதிக்கொண்டு வந்து பேசினார். அதைப் பதிவுசெய்து எழுதிப் பதிப்பித்தேன். இதுமாதிரி அவர் ஆங்காங்கே பேசிய பல விஷயங்கள் காற்றோடு போய்விட்டன. . படிப்பு, உரையாடல் இரண்டுமே அவரது வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்தன. எழுத்து குறைவாகவே இருந்தது. அவரது மரணம், ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு!

முனைவர் ந.முத்துமோகன்,

மார்க்சிய சிந்தனையாளர்:


திராவிட இயக்கச் செயல்பாடுகளின் போக்கை நான் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். முதலில் பெரியார், சுயமரியாதை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிந்தனைப் போக்கு. இரண்டாவது, அண்ணாவில் தொடங்கிய அடுத்த தலைமுறை. மொழி, இனம், இலக்கியப் பெருமிதம் சார்ந்த நிலைப்பாடுகளைக்கொண்டு நகர்ந்தது. மூன்றாவது தலைமுறையின் முக்கியமான ஆளுமை, தொ.பரமசிவன். பெரியாரிய சிந்தனை, தமிழுணர்வைத் தாங்கி நாட்டார் வழக்காற்றியல் சார்ந்து வெகுஜன மக்களை நோக்கியும் தொ.ப நகர்த்திச் சென்றிருக்கிறார். பேராசிரியர் நா.வானமாமலையின் தொடர்பும் தாக்கமும் அவரை நன்கு பண்படுத்தின. இளையான்குடியிலும் மதுரையிலும் பணியாற்றிய காலத்தில் இடதுசாரி நண்பர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். ஆசிரியர் சங்கப் போராட்டங்களில் முதல்வரிசையில் நின்றார். மதுரையில் நானும் ஆனந்தகுமாரும் ‘ஆராய்ச்சி’ பத்திரிகையில் பொறுப்பேற்றிருந்த காலத்தில் அதில் நிறைய எழுதினார்.

அறியப்படாத தமிழகத்தை அறிய வைத்த அறிஞர்!

மிக நுட்பமான தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளை அடித்தள மக்களின் பார்வையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் எடுக்கக்கூடிய ஒட்டுமொத்தமான அணுகுமுறை அவரிடமிருந்தது. எனக்கும் அவருக்குமான உறவு, 1987-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்த சில மாதங்களில் தொடங்கியது. அவர் காலமாகும் காலம்வரை அண்ணன் தம்பி உறவாகத் தொடர்ந்தது. அவரது மறைவு மனதை உலுக்குகிறது.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பண்பாட்டு ஆய்வாளர்:

தமிழ்ச்சமூக வரலாற்று வரைவின் வழிகாட்டியாகவும் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளராகவுமே அறிவுலகம் அவரை அடையாளம் கண்டிருக்கிறது. தொல்லியல், சமூக வரலாறு, கல்வெட்டு, மானுடவியல், நாட்டார் வழக்காறு, சமயக்கோட்பாடுகளுடன் பொருத்திக்கூறியவர். இவற்றுடன் நம் பண்டைய இலக்கியங்களையும் பக்தி இலக்கியங்களையும் ஆராயும் மனப்பாங்கு கொண்டவர். இதை மாணவர்களிடமும் வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியங்களையும் புராணங்களையும் ஏற்றுக்கொள்வது வேறு, அவற்றை பகுத்தாராய்வது வேறு என்று உணர்த்தினார். பின்னர் அதுவே அவரின் தனித்த அடையாளமாகவும் மாறிப்போனது.

நூல்வடிவம் பெற்ற முனைவர் பட்ட ஆய்வேடான ‘அழகர் கோயில்’ தவிர, ஏனைய நூல்கள் அனைத்தும் அளவில் சிறியவை. அவர் எழுதிய கட்டுரைகளும்கூட சிறியவைதான். ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு உரிய மேற்கோள்கள், துணைநூற்பட்டியல் போன்றவற்றை கூடுமானவரை அவர் தவிர்த்தே வந்தார். ‘அழகர் கோயில்’ மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதையெல்லாம் அவர் அறியாதவர் அல்லர். ஆனால், சராசரி மனிதர்களிடமும் தான் எழுதும் கருத்துகள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியே தவிர்த்தார்.

அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம்... மூன்றின்மீதும் அவருக்கு அழுத்தமான ஈடுபாடு இருந்தது. தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கு இவை மூன்றும் தேவை என்று உறுதியாக நம்பினார்.

ஆய் அண்டிரன் என்ற வள்ளல் இறந்தபோது அவனுடைய சிறப்பைப்பற்றி ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் இப்படித் தொடங்குகிறது... ‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன்..!’ இதைப்போல, தொ.பவும் தம் எழுத்துகளின் வாயிலாகப் புகழ் விரும்பியாக, விருதுகள் சேகரிப்பாளராக இல்லாமல் சாமான்ய மக்களின் குரலை ஒலித்து மறைந்தார். அவருடைய எழுத்துகள் இன்றும் தேவை, எதிர்காலத்திலும் தேவை!