Published:Updated:

எல்லைதாண்டி ஆற்றில் அடித்துவரப்பட்ட பாகிஸ்தான் சிறுவனின் உடல்! - இந்திய ராணுவத்தின் மனிதநேய நடவடிக்கை

கலிலுல்லா.ச

`மனிதத்தன்மைக்காக புரோட்டோகாலை மீறுவது ஒன்றும் பெரிய தவறில்லை. அந்த அடிப்படையில் இந்திய ராணுவம் எல்லைதாண்டி ஆற்றில் விழுந்த சிறுவனை பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது.'

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

பாகிஸ்தானில் உள்ள மினிமார்க் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஆபித் ஷேக். கடந்த திங்கள்கிழமையிலிருந்து சிறுவனைக் காணவில்லை என்று அவரின் பெற்றோர்கள் தேடியுள்ளனர். சிறுவன் கிஷான்கங்கா ஆற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடல் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியா எல்லைக்குள் தண்ணீரில் அடித்து வரப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள ஆச்சுரா கிராமத்துக்கு அருகில் சிறுவனின் உடலை இந்திய ராணுவ வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

இது தொடர்பாகப் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், தன் மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சிறுவன் ஆபித்தின் தந்தை சமூக வலைதளங்கள் மூலமான உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில், ஆபித்தின் உடலை பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க இந்திய ராணுவம் நேற்று 3 முறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

புரோட்டோகாலின்படி, ஏற்கெனவே முடிவு செய்துவைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து, இதுபோன்ற ஒப்படைப்பு சம்பவங்கள் நடைபெற வேண்டும். ஆனால், சிறுவன் ஆபித்தின் தந்தையின் கோரிக்கையை ஏற்று, அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்ட குரேஸ் பகுதியையொட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்து இந்திய ராணுவம் உடலை ஒப்படைத்திருக்கிறது. மனிதநேயத்தின் அடிப்படையில் புரோட்டோகாலை மீறி சிறுவனின் உடலை அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.