Published:Updated:

“இழப்பீட்டுக்காக அலைஞ்சே செத்துருவேன் போலருக்கு!”

16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் ராணுவ வீரனின் தாய்

பிரீமியம் ஸ்டோரி

‘‘ஒரு ராணுவ வீரனின் தேசப்பற்றுக்கு, தியாக உணர்வுக்கு, உயிர்த் தியாகத்துக்கு அரசாங்கமும் ஆட்சியாளர்களும் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?’’ என்று கேள்வி கேட்கவைக்கிறது, நாட்டுக்காக மகனை இழந்த ஒரு தாயின் 16 ஆண்டுக்காலப் போராட்டம்.

செப்டம்பர் மாதம் 21-ம் தேதி, காலை 10 மணி... ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தடியில் பசியால் வாடிய முகமும், பரிதவிக்கும் கண்களுமாக கையில் மனுக் காகிதங்களுடன் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. கார் வரும்போதெல்லாம், ‘கலெக்டர் அம்மா வந்துட்டாங்களா ஐயா?’ என்று ஓடோடிச் சென்று பார்ப்பதும், ஏமாற்றத்துடன் திரும்புவதுமாக இருந்தார். அருகில் சென்று, “என்னம்மா பிரச்னை?” என்று கேட்டோம்.கேட்டதுதான் தாமதம்... பொலபொலவென கண்ணீர்வடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, தன் பிரச்னையை யாராவது தீர்க்க மாட்டார்களா என அல்லாடியிருக்கிறார் அந்தத் தாய். சோகம் தொண்டையை அடைக்க, வார்த்தைகள் வராமல் தடுமாறியவரைத் தேற்றி, பேச வைத்தோம்...

‘‘என் பேரு வள்ளியம்மாள்... சொந்த ஊரு சோளிங்கர் பக்கத்துல இருக்குற செங்கல்நத்தம்.

58 வயசு ஆகுது கண்ணு... என் வீட்டுக்காரர் பேரு கோபால். எங்களுக்கு மூணு ஆம்பளப் புள்ளைங்க, ரெண்டு பொம்பளப் புள்ளைங்க. மூத்த பையன் பேரு வெங்கடேசன். மிலிட்டரியில வேலை செய்யணும்கிறதுதான் சின்ன வயசுலருந்தே அவனோட கனவு. ‘நாட்டுக்காகத்தான் சாகணும். அப்பதான் நம்ம குடும்பத்துக்கே பெருமை’னு அடிக்கடி சொல்லுவான். 1997-னு நெனைக்கிறேன்... பத்தாம் வகுப்பு முடிச்சவுடனேயே, கஷ்டப்பட்டு அவன் நெனச்ச மாதிரியே ராணுவத்துல சேர்ந்துட்டான். ஏழு வருஷத்துக்கு மேல வேலையில இருந்தான்.

“இழப்பீட்டுக்காக அலைஞ்சே செத்துருவேன் போலருக்கு!”

அவன் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி வரைக்கும், நானும் என் வீட்டுக்காரரும் விவசாயக் கூலி வேலைக்குப் போயிட்டிருந்தோம். அவன் வேலைக்குப் போன பின்னாடிதான் அரை வயிறுக் கஞ்சி குடிச்சிக்கிட்டிருந்த நிலைமை மாறி, வயிறார சாப்பிட ஆரம்பிச்சோம். வறுமையிலருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்ட நேரம் அது... நமக்காகக் கஷ்டப்படுற புள்ளைக்குக் கல்யாணம் பண்ணிவெச்சு அழகு பார்க்கணும்னு நெனைச்சோம். ‘ஏளனமாப் பார்த்த சொந்தபந்தமெல்லாம் மூக்குமேல விரல்வெக்கிற அளவுக்குக் கல்யாணத்தை நடத்தணும்னு கனவு கண்டுக்கிட்டிருந்தோம்.

அவனோட போதாத நேரமோ என்னமோ தெரியலை சாமி... 2004-ம் வருஷம் காஷ்மீர் எல்லையில தீவீரவாதிங்ககூட நடந்த சண்டையில குண்டு பாய்ஞ்சு செத்துப்போயிட்டான். வெத்தல மாதிரி மடிச்சு, பொட்டியில பொணமாத்தான் வீட்டுக்கு அனுப்பிவெச்சாங்க. அப்போ அவனுக்கு 25 வயசுகூட ஆகலை. அப்போ இருந்த கலெக்டரு, போலீஸ் அதிகாரிங்க, மிலிட்டரி ஆபீஸருங்க நேர்ல வந்து ஆறுதல் சொன்னாங்க. என்னதான் ‘நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கான்’னு பெருமையா சொல்லிக்கிட்டாலும், எம்புள்ளையப் பறிகொடுத்த வலி இன்னும் நெஞ்சுலருந்து போகலை. அவன் செத்தப்பவே நானும் செத்துப்போயிருக்கணும்.

புள்ள செத்த கையோட முப்பதாயிரம் ரூபாயை ஈமச்சடங்குக்குனு கொடுத்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அஞ்சு லட்ச ரூபாய் நிவாரணம் கொடுத்தாங்க. ‘தரிசு நிலம்னா மூணு ஏக்கர் தர்றோம். இல்லைனா, நஞ்சை நிலமா பார்த்து ஒன்றரை ஏக்கர் தர்றோம். வீட்டுமனைப் பட்டாவும் தர்றோம்’னு அதிகாரிங்க வாக்குறுதியும் கொடுத்தாங்க. அஞ்சு லட்ச ரூபாயில பொண்ணுங்க கல்யாணத்தை முடிச்சோம். கல்யாணத்துக்கே அந்தப் பணம் பத்தாம போயிடுச்சு. மேற்கொண்டு கடன் வாங்கித்தான் பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சோம்.

குடும்பத்துல ஒருத்தருக்கு அரசாங்க வேலை தர்றோம்னு சொல்லி, ரெண்டாவது பையனுக்கு மீன்வளத்துறையில வேலை போட்டுக் கொடுத்தாங்க. இப்ப அவனும் பொண்டாட்டி புள்ளைகளை விட்டுட்டு, குடியாத்தம் தாண்டி இருக்கிற மோர்தானா அணையில மீன் வளர்க்கிற வேலை பார்க்குறான். அவனுக்கும் வெறும் பன்னிரெண்டாயிரம் ரூவாதான் சம்பளம். அது அவன் குடும்பத்து சோத்துக்கே பத்தலை. மூணாவது பையன் கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கான். அவன் சம்பாத்தியமும், அவங்க வயித்துகே சரியா போயிடுது.

“இழப்பீட்டுக்காக அலைஞ்சே செத்துருவேன் போலருக்கு!”

என்ன மாறுனாலும் கஷ்டம் மட்டும் மாறவே மாட்டேங்குது. சோத்துக்கே கஷ்டம். வயசான காலத்துல பசி காதை அடைச்சுது. நானும் வீட்டுக்காரரும் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். பழைய ஓட்டு வீடு. ஓடுங்க பழசாகி ஒடைஞ்சுபோச்சு. மழை பேய்ஞ்சா ஒழுகும்; வீட்டுக்குள்ள வெயிலடிக்கும். குடியிருக்குற வீட்டுமனையோ, பொழப்புக்கு நிலமோ கொடுத்தா உதவியா இருக்கும்னு தாலுகா ஆபீஸுக்கும் கலெக்டர் ஆபீஸுக்குமா நடையா நடந்தோம். ஆனா, அதிகாரிங்க மனசு கொஞ்சம்கூட இரங்கலை. எனக்கு ஒரே ஆதரவா இருந்த என் வீட்டுக்காரரும், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள்ல போகும்போது கார் மோதி செத்துப்போயிட்டாரு. எந்தக் கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... என் குடும்பத்துக்கு சோதனை மேல சோதனை... ஐயோ ஆண்டவா...” என்று ஆதங்கத்தில் விம்மியவரைச் சமாதானப் படுத்தினோம்.

“அம்மா, அம்மானு முந்தானையைப் புடிச்சிக்கிட்டு என்னையே சுத்திவந்த புள்ளையையும் பறிகொடுத்துட்டேன். `கடைசி காலத்துல உன்கூடயே இருப்பேன்டி’னு சொன்ன புருஷனையும் எமனுக்கு வாரிக்கொடுத்துட்டேன்.

என் பையன் செத்து, இதோட 16 வருஷம் ஆகுது. இத்தனை வருஷத்துல நூறு மனுவுக்கு மேல கொடுத்திருப்பேன். அரசாங்கம் தர்றேன்னு சொன்ன இழப்பீட்டைத்தானே கேட்கிறேன். அதைக்கூட கொடுக்க அதிகாரிகளுக்கு ஏன் மனசு வரமாட்டேங்குது... நாட்டுக்காக அவன் சிந்துன ரத்தத்துக்கு அரசாங்கம் கொடுக்கிற மதிப்பும் மரியாதையும் இவ்ளோதானா?

வேலூர் மாவட்டமா இருந்தப்போ... அங்கிருந்த கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். அவரு வாலாஜாபேட்டை தாலுகா ஆபீஸ் போகச் சொன்னாரு. தாலுகா ஆபீஸுக்கு நடையா நடந்தேன். பிரயோஜனம் இல்லை. அதுக்குள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைக் கொண்டுவந்தாங்க. சோளிங்கர் புது தாலுகான்னு அறிவிச்சாங்க. `வாலாஜாபேட்டையிலருந்து புது தாலுகாவுக்குப் போ’னு துரத்திட்டாங்க. அங்கே போனா, `கலெக்டர் ஆபீஸுக்குப் போம்மா’னு சொல்லிட்டாங்க. கலெக்டரைப் பார்க்கத்தான் இங்கே காத்துகிட்டிருக்கேன்’’ என்றவர், சற்று நேரம் மௌனமானார்.

பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவராக, ‘‘சரிங்க சாமி... எனக்கு நிலமோ பட்டாவோ வேணாம். என் புள்ளையத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க. அவன் உயிரோட வந்தா, என்னை உள்ளங்கையில தாங்குவான். எனக்கென்ன தலையெழுத்தா சாமி... இந்த வயசுலயும் ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு. கூலி வேலைக்குப் போய் வயித்தைக் கழுவுறேன். அதிகாரிங்க கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம, ‘அந்த பேப்பர் எடுத்துட்டு வா... இந்த பேப்பர் இல்லை’னு அலைக்கழிக்கிறாங்க. இப்படி அலைஞ்சு அலைஞ்சே என் உசிரும் போயிடும் போலருக்கு...’’ என்று ஆதங்கமும் துயரமுமாகக் கண்ணீர்விட்டார்.

வள்ளியம்மாள் பேசிக்கொண்டிருக்கும்போதே கலெக்டர் திவ்யதர்ஷினியின் கார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. ‘‘கலெக்டரம்மா கிட்ட மனு கொடுத்துட்டு வந்துடுறேன்’’ என்றபடி உள்ளே சென்றவர், மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தார். ‘‘நடவடிக்கை எடுக்குறதா கலெக்டரம்மா சொல்லியிருக்காங்க. இவங்களாவது பிரச்னையைத் தீத்து வெக்கிறாங்களான்னு பார்ப்போம்’’ என்றபடி தன் ஒழுகும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அந்த அப்பாவித் தாய்.

எல்லையில் இரவு பகலாகப் பனியிலும் வெயிலிலும் நின்று, உயிரையும் தியாகம் செய்த ஒரு வீரனின் தாய் நிம்மதியாக உறங்க ஓர் இடம் தருவதில் இந்த அரசுக்கு என்னதான் பிரச்னை? கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றித் தருவது ஓர் அரசாங்கத்தின் கட்டாயக் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு