Published:Updated:

இந்தியப் பொருளாதாரம் 2020: கொரோனா தாக்குதலும் அரசின் மீட்பு நடவடிக்கைகளும்..!

இந்தியப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியப் பொருளாதாரம்

ECONOMY 2020

ம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கண்டிராத அளவுக்கு நடப்பு 2020-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்தது. ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டில் 23.9% வீழ்ச்சியைக் கண்டதைத்் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டிலும் (-7.5%) சரிவைச் சந்தித்திருப்பதால், நம் நாடு ‘பொருளாதாரப் பின்னடைவு (Economic Recession) என்னும் நிலையை அடைந்துவிட்டது’ என்றே பொருளா தார நிபுணர்கள் கருதுகிறார்கள். சரிந்துவரும் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசாங்கம் மேற்கொண்ட, இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று பார்ப்போம்.

கொரோனா ஆண்டு 2020...

2020-ல் முதல் இரண்டு மாதங்கள் மட்டும் நிம்மதியாகப் போனது. மார்ச்சில் அதிகரித்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா முழுமைக்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், நகர்ப்புறப் பொருளா தாரத்தின் பெரும்பகுதி செயலிழந்துப் போனது. இதனால் சரிந்த பொருளா தாரத்தைச் சரிசெய்வதற்காக ஏப்ரலில் மத்திய அரசும் மற்றும் மே மாதத்தில் ரிசர்வ் வங்கியும் ஏராளமான அறிவிப்புக்களை வெளியிட்டன.

தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவியை மேம்படுத்துதல், பொதுச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்தல், நேரடி நிதி உதவித் திட்டங்கள் மற்றும் பொருளா தாரக் கொள்கைச் சீர்திருத்தங்கள் எனப் பல பரிமாணங்களைக்கொண்ட இந்தப் பொருளாதார மீட்சித் திட்டத்தின் உண்மையான செலவின மதிப்பு மற்றும் செயல்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பின.

ரிசர்வ் வங்கி-ஹெவி வெயிட் சாம்பியன்...

ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார மீட்பு திட்டத்தில் சுமார் ரூ.8 லட்சம் கோடி ரிசர்வ் வங்கியின் தரப்பு நடவடிக்கைகள் ஆகும். பொருளாதாரத்தை மீட்பதற்காகப் புதுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்ட ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் மாதத்திலிருந்து மட்டும் 1.55% அளவுக்கு தனது கொள்கை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ‘ஆபரேஷன் ட்விஸ்ட்’ போன்ற நடவடிக்கைகள் மத்திய - மாநில அரசுகள் பொதுக் கடன் சந்தையிலிருந்து குறைந்த வட்டியில் நிதி திரட்ட உதவியாக அமைந்தது.

இந்தியப் பொருளாதாரம் 2020: கொரோனா தாக்குதலும் அரசின் மீட்பு நடவடிக்கைகளும்..!

நீண்டகால ரெப்போ திட்டங்கள், வங்கிகளின் பண இருப்பு விகிதத்தைக் குறைப்பது (Cash Reserve Ratio - 1.00%), வங்கிகளுக்கான கடன் வசதியை அதிகப் படுத்துவது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுக் கடன் பத்திரங்களைக் கடன் சந்தையிலிருந்து நேரடியாக வாங்குவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் வாயிலாக, பொதுச் சந்தையில் பெருமளவுக்குப் பணப் புழக்கத்தை (இந்தியாவின் ஜி.டி.பி-யில் 5.9%) ரிசர்வ் வங்கி அதிகரித்திருப்பதாக, சர்வதேச நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்குதலால் நலிந்துள்ள தொழில்துறைக்கும், பாதிப்படைந்துள்ள ஊழியர்களுக்கும் உதவிடும் வகையில் வாராக்கடன் விதிமுறையில் மாற்றங்கள், கடன் விடுமுறைக் காலம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய ரெப்போ கடன் திட்டம், ஒட்டுமொத்த நிதியமைப்பின் ஸ்திரத்தன்மை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவியாக அமைந்தது.

ஆத்மநிர்பார் திட்டம்..!

இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சிக்காக, மத்திய அரசு தரப்பிலிருந்தும், நேரடி நிதி உதவித் திட்டங்கள், கடன் உத்தரவாதத் திட்டங்கள், தொழில் துறை முன்னேற்றத் திட்டங்கள் என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கொரோனா காலகட்டத்தில், நிதித் தட்டுப்பாட்டின் காரணமாகப் பல தொழிற் நிறுவனங்கள் தடுமாறி வந்தன. ஆனால், வாராக்கடன் அச்சத்தால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கத் தயங்கின. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு நேரடியாகக் கடன் உத்தரவாதம் அளிக்க முன்வந்தது. மத்திய அரசின் சமீபத்திய தகவல் அறிக்கையின்படி, ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு இந்தத் திட்டத் தின்கீழ் கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் தற்போது 31.03.2021 வரை நீட்டிக் கப்பட்டிருப்பதுடன், விற்பனை உச்சவரம்பிலும் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விளிம்பு நிலையில் உள்ள பல நிறுவனங்கள் தப்பிப் பிழைக்க இந்தத் திட்டம் பெரும் உதவியாக அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனுக்காக...

கொரோனா முடக்கத்தைத் தொடர்ந்து பல மாநிலங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பணி இழந்ததுடன் தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பவும் நேரிட்டது. இவர்களின் வேலை யின்மையைக் கருத்தில்கொண்டு, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் கூடுதல் நிதியாக ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டு, தொடர்ச்சியாக 273.84 கோடி வேலை நாள்கள் புதிதாக உருவாக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் சொல்கிறது. ஆனால், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக அடைந்த துன்பத்தை அவர்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.

பல்வேறு சீர்திருத்தங்கள்...

தொழில்துறையில் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்தவும், பன்னாட்டு வணிகத்தில் இந்தியாவின் தற்சார்பு நிலையை உறுதிப் படுத்தவும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. உற்பத்தியின் அடிப்படையில் ஊக்கத் தொகை, இந்திய திவால் நெறிமுறைகளில் திருத்தம், நிலக்கரி சுரங்கத் துறையை வணிகமயமாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் போன்ற பல அறிவிப்புக்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமைந்தன.

நேரடி உதவித் திட்டங்கள்..!

‘மேலை நாடுகளைப்போல இந்தியாவிலும் அதிகப்படியான நேரடி நிதி உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்’ என்றும் ‘தனிநபர் கையில் போதுமான பணப்புழக்கம் இருந்தால் மட்டுமே விரைவான பொருளா தார மீட்சியை உருவாக்க முடியும்’ என்றும் ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி போன்ற பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், பொருளாதார சுணக்கத்தால் ஏற்கெனவே அரசின் நிதி நெருக்கடி அதிகரித் துள்ள நிலையில், நேரடி நிதி உதவித் திட்டங்கள் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்து விடுவதுடன் இந்தியாவின் சர்வதேச தர மதிப்பீட்டையும் பாதித்து விடும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்தது.

இந்திய வங்கிகளின் புதிய கடன் வழங்கும் அளவைவிட, வைப்புத் தொகை விகிதம் (இந்திய வங்கிகளில் உள்ள எஃப்.டி-யின் மதிப்பு ரூ.140 லட்சம் கோடிக்கு மேல்) வேகமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ், ‘நேரடி உதவித் திட்டங்கள் தனிமனித சேமிப்பை மேலும் அதிகரிக்க உதவுமே தவிர, நுகர்வை அதிகரிக்க உதவாது. எனவே, முதலீடு சார்ந்த திட்டங்களை ஊக்குவிப்பதே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கஷ்டப்படும் சிறு தொழில் நிறுவனங்கள்...

ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உதவித் திட்டங்களை ‘முறைசார்ந்த பொருளாதாரப் பிரிவினர் “(Formal Sector)’ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும் பான்மையான முறைசாராப் பிரிவின ருக்கும் (Informal Sector) போதுமான உதவி சென்று சேரும்படியான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தினால் நாடு பொருளாதார மீட்சியை விரைவில் அடையக்கூடும்.

பணக்கார தேசமாக மாறுவோம்..!

பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாகக் கடும் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், சில பெரும் தொழில் அதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிவேகமாக உயர்ந்து வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘கடும் நெருக்கடி என்பது தவற விட முடியாத ஓர் அரும் வாய்ப்பு’ என்ற ரீதியில் பெரும் தொழில் அதிபர் ஒருவர் பொதுவெளியில் பெருமைப் பட்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. சில பெரும் பணக்காரர்களின் தேசமாக மட்டுமே இருப்பதைவிட ஒட்டுமொத்த நாடும் பொருளாதார செழிப்பை அடைவதே நம் அனைவருக்கும் பெருமை!

பிட்ஸ்

வீடுகளுக்கு தொலைத் தொடர்பு சேவைக் கொண்டுவரும் டி.டி.ஹெச் (DTH)துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது!‘