Published:Updated:

மீனவர்கள் கழுத்தில் தூண்டிலா?

மீனவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மீனவர்கள்

இப்போது உப்புக்காற்றில் மெல்ல மெல்ல போராட்டக்கனல் வீசத்தொடங்கியிருக்கிறது.

மீனவர்கள் கழுத்தில் தூண்டிலா?

இப்போது உப்புக்காற்றில் மெல்ல மெல்ல போராட்டக்கனல் வீசத்தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
மீனவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மீனவர்கள்

தீப்பிடித்த வீட்டில் இடி இறங்கியது போல் அதிர்ந்துபோய் உள்ளார்கள், தமிழக மீனவர்கள். “கஷ்டத்தோடுதான் கடலுக்குப் போவோம், இனி கடலுக்குப் போறதே கஷ்டமாயிடும் போலயே...” என்கிறார்கள் பரிதாபமாக.

‘‘விளைநிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற, வனத்திலிருந்து பழங்குடியினரை வெளியேற்ற என எளிய மக்களுக்கு எதிரான பல சட்ட மசோதாக்களைக் கொண்டுவந்த நிலையில், தற்போது கடலிலிருந்து மீனவர்களை அந்நியப்படுத்தும் ‘கடல்சார் மீன் வள சட்ட மசோதா-2021’ கொண்டுவர மோடி அரசு ஆர்வமாக உள்ளது’’ என்று புலம்புகிறார்கள் மீனவர்கள். அப்படி என்ன பிரச்னை இந்தச் சட்டத்தில்?

மீனவர்கள் கழுத்தில் தூண்டிலா?

ஏ.ஐ.டி.யூ.சி மீனவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ‘‘கரைவலை, வீச்சு வலை மூலம் கரையிலிருந்து மீன் பிடித்தும் கட்டுமரம், வத்தை, வள்ளம், பாய்மர வள்ளம் எனப் பாரம்பரியமான முறையில் தேவைக்கு மட்டும் மீன் பிடித்தும், கடல் வளத்தை மாசுபடுத்தாமல், மீன் இனங்கள் அருகிடாத வகையில் தொழில் செய்து நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் மீனவர்கள். 50 வருடங்களுக்கு முன்பு, அரசும் அதன் ஆதரவுபெற்ற கடல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களும், பாரம்பரிய மீன்பிடி முறையை மாற்றின. படகுகளில் இயந்திரங்களைப் பொருத்தியும், நாசகார வலைகளைப் பயன்படுத்த வைத்தும், தங்கள் வணிக லாபத்துக்காக மீனவர்களிடம் ஆசையைப் புகுத்தி, நவீன மீன்பிடித் தொழிலுக்குப் பழக்கப்படுத்தினார்கள். அதிலும் பல கஷ்டங்களைச் சந்தித்துத் தொழில் செய்துவரும் மீனவர்களுக்கு நன்மையைச் செய்யாமல், அவர்களின் தொழிலை அழித்து, கடல் வளத்தைப் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. அதன் விளைவுதான் இந்த மசோதா.

கடந்த 2009-ம் ஆண்டில் காங்கிரஸ் அரசும், 2019-ம் ஆண்டில் பா.ஜ.க அரசும் இந்தியக் கடல் மீன்பிடி ஒழுங்கு முறை மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டுவந்தன. நாடு முழுவதும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை கைவிடப்பட்டன. இந்தக் கூட்டத் தொடரில் மூன்றாவது முறையாக இம்மசோதாவைக் கொண்டுவருகிறார்கள்.

1982-ல் சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட கடல் எல்லை ஒப்பந்தத்திற்குப் பிறகு நம் நாட்டிற்கு 2.02 பில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட தனிப்பட்ட பொருளாதார மண்டலக் கடல் பகுதி கிடைத்தது.

மீனவர்கள் கழுத்தில் தூண்டிலா?

‘இந்திய கடல் மண்டலப் பகுதியில் எப்படி மீன் பிடிக்க வேண்டும், எந்தக் காலத்தில் எந்த வகையான மீன்களைப் பிடிக்க வேண்டும், எந்த வகையான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்பவற்றை ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புதான் (FAO) தீர்மானிக்கிறது. இந்த அமைப்பு 1995-ல் ரோமில் கூடி முடிவு செய்த, ‘பொறுப்பார்ந்த மீன்பிடித்தலுக்கான சர்வதேச நடத்தை விதிகளை’ இந்தியா ஏற்றுக்கொண்டது. 2001-ல் தோஹாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் மீன்வள மானியங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. நம் மீன்பிடிக் கொள்கை சர்வதேச வரம்புக்குள் வந்தது. அதன் பின்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச நாடுகளின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் மீன்பிடிக் கொள்கையை இந்தியா உருவாக்கி வருகிறது.

உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தத்தால்தான், இதுபோன்ற மோசமான மசோதாக்களை அரசு கொண்டுவருகிறது. அவர்கள் ஜூலை 15-ல் நடத்திய சர்வதேசக் காணொலிக் கூட்டத்தில் 104 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், ‘உலகக் கடல் வளத்தில் 60 சதவிகித மீன்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டன. அதை முறைப்படுத்த புதிய மீன்பிடி விதிகளை உருவாக்க வேண்டும். வளரும் நாடுகள் தங்கள் மீனவர்களுக்குக் கொடுக்கும் மானியங்களை நிறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டது.

மீன் வளங்களை முறைப்படுத்த உலக வர்த்தக அமைப்பின் 12-வது மாநாடு ஜெனிவாவில் நவம்பரில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனவர்களுக்கான மானியங்களை நிறுத்தவும், கடுமையான சட்டங்கள் மூலம் கடலில் மீன்பிடிக்கும் முறையைக் குறைக்கவும், அதற்கு மாற்றாக மீன் வளர்க்கும் முறையைக் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டு, இந்த மசோதாவைக் கொண்டுவரத் தீவிரமாகியுள்ளது. இந்தியாவில் மீனவர்களுக்கு மத்திய அரசு 770 கோடி ரூபாய் மட்டுமே மானியமாக வழங்குகிறது. அதில் பாதி, கப்பல் வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், மீனவர்களால் அரசுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியோ அதிகம். உண்மையிலேயே கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பகாசுர மீன்பிடிக் கப்பல்களைக் கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகள் முன்வந்திருக்க வேண்டும்.

அதேபோல், இந்தியா கொண்டு வர உள்ள மசோதா, பெரிய மீன்பிடிக் கப்பலையும் கட்டுமரத்தையும் ஒரே அளவுகோலில் பார்க்கிறது. நம் நாட்டில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் என இரண்டு லட்சம் உள்ளன. இதன் மூலம் இரண்டு கோடிப் பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு கோடி சாமானிய மீனவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பெரும் கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீன்களைப் பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன் வளர்ப்பது, கடல் பரப்பை பிளாட் போட்டு தனியாருக்கு வழங்குவது பற்றித்தான் மசோதாவில் அதிகம் குறிப்பிட்டுள்ளார்கள். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 கடல் மைலுக்கு அப்பாலுள்ள பகுதியில் பாரம்பரிய மீன் பிடிப்பதில் விதிமுறைகளை உருவாக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படவுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளது. இந்த நிலையில், இனி 12 நாட்டிக்கல் மைல் கடந்து மீன்பிடிக்கச் செல்ல மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மீறிச் சென்றால் அபராதம், தண்டனை என்று மசோதா சொல்கிறது. படகுகளில் என்ன வகையான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இனி மத்திய அரசு ஆய்வு செய்யும். மீன் பிடிக்கச் செல்ல இனி படகுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். படகுகளை சோதனையிடும் பணியை மீன் வளத்துறை யிடமிருந்து கடலோரக் காவல்படைக்கு மாற்ற உள்ளார்கள்.

செந்தில்
செந்தில்

எவ்விதத் தங்குதடையுமின்றி, வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய கடல் பரப்பில் மீன்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அரசின் பல்வேறு கொள்கைகள் வழிவகை செய்கின்றன. அதில் எந்த மாற்றமும் செய்ய முன்வராத மத்திய அரசு, இந்தியப் பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, அவர்களைக் கடலை விட்டு அந்நியப்படுத்துகிறது” என்று விரிவாக விளக்கினார்.

நீரோடி முதல் பழவேற்காடு வரை, 13 மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள தமிழகக் கடல் பரப்பில், லட்சக்கணக்கான மீனவர்கள் கடலை மட்டுமே நம்பியுள்ளனர். அவர்களைச் சார்ந்து மீனவர்கள் அல்லாதவர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உள்மாவட்டங்களில் வாழ் வாதாரம் கொண்டுள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், விவசாயிகளும் மீனவர்களைச் சார்ந்து பிழைக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த மசோதா வேட்டு வைக்கிறது என்பதே மீனவர்களின் குற்றச்சாட்டு.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி, ‘‘ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு இடையே தொழில் செய்துவருகிறார்கள். அதிலிருந்து மீனவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத அரசு, தன் பங்குக்கு இதுபோன்ற கொடுமையான சட்டங்களைக் கொண்டு வருகிறது. கடலுக்குச் செல்ல கட்டணம் செலுத்துவது உட்பட, படகைச் செலுத்த நேவிகேஷன் படித்திருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது வரை பல பாதகமான விஷயங்கள் மசோதாவில் உள்ளன. படகு செலுத்துவது சம்பந்தமாக, பாரம்பரிய மீனவனைப் பாடம் படிக்கச் சொல்வது வேடிக்கையாக இல்லையா? இப்படியெல்லாம் விதிகளைக் கொண்டுவருவது மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தடுக்கத்தான். தொடர்ந்து எங்கள் எதிர்ப்புகளைப் போராட்டங்கள் மூலம் தெரிவித்துவருகிறோம். எங்கள்மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். டெல்லி சென்று தலைவர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

இப்போது உப்புக்காற்றில் மெல்ல மெல்ல போராட்டக்கனல் வீசத்தொடங்கியிருக்கிறது.