அரசியல்
அலசல்
Published:Updated:

மீனவரைச் சுட்ட இந்திய கடற்படை! - பின்னணி என்ன?

செல்வகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வகுமார்

எங்கள் விசைப்படகுகளில் 10 நாட்டிகல் மைல் வேகத்தில்தான் செல்ல முடியும். ஆனால் நேவி படகில், அதி நவீன இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன

தமிழக மீனவர்மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கும் விவகாரம் பலத்த விவாத அலைகளை எழுப்பியிருக்கிறது!

கடந்த 15-10-2022 அன்று காரைக்காலிலிருந்து, மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். கடந்த 21-ம் தேதி நள்ளிரவு நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.

மீனவரைச் சுட்ட இந்திய கடற்படை! - பின்னணி என்ன?

அந்தத் துப்பாக்கிச்சூட்டில் தப்பித்துக் கரை சேர்ந்த மீனவர் செல்வகுமார், இது தொடர்பாக வேதாரண்யம் தமிழக கடலோர காவல் குழும போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார். அதில், ‘இந்திய கடற்படை தங்கள் கைகளைக் கட்டி ஷூ காலால் எட்டி உதைத்ததாகவும், இரும்பு ராடால் அடித்துத் துன்புறுத்தியதாகவும்’ கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சகாயம், “எங்கள் விசைப்படகுகளில் 10 நாட்டிகல் மைல் வேகத்தில்தான் செல்ல முடியும். ஆனால் நேவி படகில், அதி நவீன இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எங்கள் படகைவிட நூறு மடங்கு வேகத்தில் இலக்கை அடையக்கூடியது. இப்படி ஒரு படகை வைத்துக்கொண்டு, அருகில் சென்று பார்த்து விசாரிக்காமல் தூரத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மீனவரைச் சுட்ட இந்திய கடற்படை! - பின்னணி என்ன?

இந்த விவகாரம் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முயன்றோம். ஆனால், பதிலளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘சீன தலையீட்டுக்குப் பிறகு, இலங்கை கடல் எல்லையில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம், இந்திய கடற்படையினர் எச்சரித்தும் நிற்காமல் சென்றதன் காரணமாகவே நடத்தப்பட்டிருக்கிறது. சுடப்பட்டது தமிழக மீனவர் மீது என்று தெரிந்தவுடன், அவரை உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருப்பதும் இந்திய கடற்படைதான்’’ என்றார்.

சகாயம்
சகாயம்

இதையடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர்மீது ஒன்றிய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள்மீது ஒன்றிய அரசு அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என்று சுருக்கமாக முடித்தார்.

சொந்தக் குடிமக்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தியதை எப்படி நியாயப்படுத்தினாலும் ஏற்க முடியாது!