அரசியல்
அலசல்
Published:Updated:

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

அன்டோனியோ கோஸ்டா
பிரீமியம் ஸ்டோரி
News
அன்டோனியோ கோஸ்டா

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை அனிரூத் ஜெகநாத், தாய் சரோஜினி இருவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தாம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவில் பெரும் பேசுபொருளானது. அதேபோல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் பதவியேற்றபோதும், இந்தியாவே அதைக் கொண்டாடித் தீர்த்தது. இவர்கள் மட்டுமல்ல... வேறு சில நாடுகளிலும் ஆளும் நாற்காலியைத் தன்வசப்படுத்தியிருக்கின்றனர் இந்திய வம்சாவளியினர்!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

போர்ச்சுக்கல் பிரதமர் - அன்டோனியோ கோஸ்டா!

போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவின் தாத்தா லூயிஸ் கோஸ்டா கோவாவைச் சேர்ந்தவர். அன்டோனியோவின் உறவினர்கள் பலரும் கோவாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். 1961-ல் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் பிறந்த அன்டோனியோ, 1980-கள் முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2015-ம் ஆண்டு முதல் போர்ச்சுக்கலின் பிரதமராகவும் இருந்துவருகிறார். ஒருமுறை தன்னுடைய இந்திய அடையாளத்தைப் பற்றிய கேள்வி எழுந்தபோது, ``என் தோலின் நிறத்தை நான் சாதாரணமாகவே பார்க்கிறேன். அது என்னை எந்த வேலை செய்வதிலிருந்தும் தடுக்கவில்லை’’ என்றார் கோஸ்டா!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

மொரீஷியஸ் பிரதமர் - பிரவிந்த் ஜெகநாத்!

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை அனிரூத் ஜெகநாத், தாய் சரோஜினி இருவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தாம். அனிரூத் ஜெகநாத், மொரீஷியஸின் பிரதமர், அதிபர் பதவிகளை வகித்தவர். தந்தை வழியில் அரசியலுக்கு வந்த பிரவிந்த், 2000-ம் ஆண்டிலிருந்து பல்வேறு அமைச்சர் பதவிகளை நிர்வகித்தார். 2017-ல் முதன்முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக வாரணாசிக்கு வந்திருந்தார் பிரவிந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொரீஷியஸ் அதிபர் பிரித்விராஜ் சிங் ரூபனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்.

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

அயர்லாந்து துணைப் பிரதமர் - லியோ வரத்கர்!

தற்போது அயர்லாந்து நாட்டின் துணைப் பிரதமராக இருப்பவர் லியோ வரத்கர். இவரின் தந்தை அசோக் வரத்கர் மும்பையைச் சேர்ந்தவர். 1960-களில் இங்கிலாந்துக்குச் சென்று மருத்துவராகப் பணியாற்றியபோது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மிரியம் என்பவரை மணந்துகொண்டார் அசோக். இந்தத் தம்பதிக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைதான் லியோ. அயர்லாந்தில் மருத்துவராக இருந்துவந்த லியோ, அரசியல் ஈடுபாட்டால் `ஃபைன் கேல்’ கட்சியில் இணைந்தார். பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தவர், 2017-ல் பிரதமரானார். `அயர்லாந்தின் முதல் இந்திய வம்சாவளிப் பிரதமர்’, `இளம் பிரதமர்’ என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரானார் லியோ. மேலும், அயர்லாந்து பிரதமராகப் பதவி வகிக்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர். உலக அளவில் ஆட்சித் தலைமையில் இருப்பவர்களில் நான்காவது தன்பாலின ஈர்ப்பாளர். 2020 தேர்தலுக்குப் பிறகு, அங்கு கூட்டணி ஆட்சி அமைந்ததால், ஃபியானா ஃபெயில், ஃபைன் கேல் கட்சிகள் பிரதமர் பதவியை இரண்டரை ஆண்டுகள் பங்குபோட்டுக்கொள்ள ஒப்பந்தம் போட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் அயர்லாந்தின் பிரதமராகச் செயல்படப்போகிறார் லியோ!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

செஷெல்ஸ் அதிபர் - வேவல் ராம்கலவான்!

செஷெல்ஸ் நாட்டின் அதிபர் வேவல் ராம்கலவானின் முன்னோர்கள் பீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பாதிரியாராக இருந்துவந்த ராம்கலவான், 1990-லிருந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார். 2020 முதல் செஷெல்ஸ் நாட்டின் அதிபராகவும் இருந்துவருகிறார். இவரைப் பற்றி பிரதமர் மோடி, ``ராம்கலவான் இந்தியாவின் மகன். இன்று, அவரது சாதனைகளால், கோபால்கஞ்ச் கிராமம் மட்டுமல்ல, இந்தியாவே பெருமைகொள்கிறது’’ என்று கூறியிருக்கிறார்!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப்!

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகோப்பின் தந்தை ஓர் இந்தியர். தாய் மலேசியாவைச் சேர்ந்தவர். 2011 முதல் அரசியலில் ஈடுபட்டுவரும் ஹலிமா, 2013-ல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2017 முதல் தற்போது வரை சிங்கப்பூரின் அதிபராகவும் இருந்துவருகிறார்!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

கயானா அதிபர் - இர்ஃபான் அலி!

கரீபியன் தீவு நாடான கயானா அதிபர் இர்ஃபான் அலியின் முன்னோர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தாம். 2006 பொதுத்தேர்தலில் வென்று முதன்முறையாக கயானா நாடாளுமன்றத்தில் காலடியெடுத்துவைத்த இர்ஃபான், 2020-ல் கயானாவின் 10-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

உலக நாடுகளை ஆளும் இந்திய வம்சாவளி அதிபர்கள் - பிரதமர்கள்!

சுரிநாம் அதிபர் - சந்திரிகா பிரசாத் சந்தோகி!

தென் அமெரிக்க நாடான சுரிநாமின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்து முடித்த பிறகு காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தவர், 2006-ல் நீதி மற்றும் காவல்துறை அமைச்சரானார். 2020-ம் ஆண்டில் சுரிநாமின் அதிபராகப் பதவியேற்றார் சந்தோகி!