Published:Updated:

பராக்... ட்விட்டரின் புது முகவரி!

பராக் அக்ரவால்
பிரீமியம் ஸ்டோரி
News
பராக் அக்ரவால்

இப்போது ட்விட்டரின் சி.இ.ஓ-வாகப் பதவியேற்கும் பராக் அக்ரவால் முன் பல சவால்கள் இருக்கின்றன.

சிலிக்கான் வேலியை ஆளும் இந்தியர்கள் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் பராக் அக்ரவால்.

38 வயதேயான பராக் அக்ரவால் பாம்பே ஐஐடி-யில் பி.டெக், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பி‌ஹெச்.டி முடித்தவர். மைக்ரோசாஃப்ட், யாஹு, ஏடி&டி லேப்ஸ் போன்ற முக்கிய டெக் நிறுவனங்களில் பணியாற்றியவர்.

இவரது லிங்க்டு-இன் பக்கத்தை அலசினால் ஒன்றைக் கவனிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் இடையே பல மாதங்கள் வேலை எதுவும் செய்யாமல் ஓய்வெடுத்திருக்கிறார் பராக். இப்படி வேலைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் ரெஸ்யூமை பத்தில் ஒன்பது நிறுவனங்கள் நிராகரித்துவிடும். ஆனால், 2011-ல் ட்விட்டர் அதைச் செய்யவில்லை. திறமையை மட்டுமே கணக்கிட்டு அவரை வேலைக்கு எடுத்தது.

இத்தனைக்கும் 2011-ல் சாதாரணப் பொறியியலாளராகத்தான் ட்விட்டரில் இணைந்தார் பராக். 10 வருடங்களில் தனது உழைப்பாலும் பிரச்னைகளுக்கு சடுதியில் தீர்வு காணும் திறனாலும் டெக் உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் CEO-வாகப் பதவி உயர்ந்திருக்கிறார்.

அமெரிக்க மக்கள் தொகையில் 1% மட்டுமே இந்தியர்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்களின் ஊழியர்களில் 6% மட்டுமே இந்தியர்கள். அப்படி இருந்தும் முக்கிய டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்களே இருக்க காரணம் என்ன?

பராக்... ட்விட்டரின் புது முகவரி!

‘‘அனைத்திலும் கடும் போட்டி நிலவும் இந்தியச் சூழலே காரணம்’’ என்கிறார் `The Made in India Manager' புத்தகத்தின் ஆசிரியரும் டாடாவின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான கோபாலகிருஷ்ணன். இதனால் இயல்பிலேயே பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணும் குணம் இந்தியர்களுக்கு வந்துவிடுகிறதாம். கணிதத்திற்கும் அறிவியலுக்கும் இந்தியக் கல்வியில் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் இந்தியர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாதிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

இப்போது ட்விட்டரின் சி.இ.ஓ-வாகப் பதவியேற்கும் பராக் அக்ரவால் முன் பல சவால்கள் இருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்திற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துவரும் நிறுவனம் ட்விட்டர். இதற்காகப் பல அரசுகளையும் எதிர்த்துத் துணிச்சலாகப் போர் தொடுத்திருக்கிறது. ட்விட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டார்ஸியின் அந்தப் போர்க்குணம் பராக்கிடமும் இருக்குமா, ட்விட்டரை எந்தப் பாதையில் பராக் அழைத்துச் செல்வார் என எந்தக் கேள்விக்கும் தற்சமயம் பதிலில்லை. சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா வரிசையில் டெக் உலகை இயக்கும் மற்றுமொரு இந்தியராக இணைந்திருக்கும் பராக்கிற்கு வாழ்த்துகள்!