Published:Updated:

` இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்களே அதிகம்!' - ஐ.நா சொல்லும் புள்ளிவிவரம்

உலகிலேயே அதிகமாக வெளிநாடுகளில் வசிப்பது இந்தியர்கள்தாம்.

Indian Flag
Indian Flag

உலகம் முழுக்க வெளிநாடுகளில், இந்தியர்கள் 1.74 கோடி பேர் வசிப்பதாக ஐ.நா புள்ளி விவரம் சொல்கிறது. அந்தவகையில், உலகிலேயே அதிகமாக வெளிநாடுகளில் வசிப்பது இந்தியர்கள்தாம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 27.2 கோடி. அதில், இந்தியர்கள் 6 சதவிகிதம். இரண்டாவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. இங்கு, 1.8 கோடி பேர் தாய்நாட்டைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவுக்குப் பட்டியலில் 3-வது இடம். 1.7 கோடி சீனர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

அமெரிக்காவில் இந்தியர்கள்
அமெரிக்காவில் இந்தியர்கள்

ரஷ்யர்கள் 1.5 கோடி பேர் வெளிநாடுகளில் உள்ளனர். சிரியா, வங்கதேசம், பாகிஸ்தான், உக்ரைன், பிலிப்பைன்ஸ் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. கண்டங்கள் என்று பார்த்தால் ஐரோப்பியக் கண்டத்தில் அதிகபட்சமாக 8.2 கோடி வெளிநாட்டவர்கள் உள்ளனர். வட அமெரிக்கக் கண்டத்தில் 5.9 கோடி பேர் உள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் 4.9 கோடி பேர் உள்ளனர்.

அமெரிக்காவில், அதிகபட்சமாக 5.1 கோடி இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கின்றனர். ஜெர்மனியும் சவுதியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் தலா 1.3 கோடி பேர் இடம்பெயர்ந்தவர்களாக வசிக்கின்றனர். ரஷ்யாவில் 1.2 கோடி பேரும் பிரிட்டனில் 1 கோடி பேரும் அமீரகத்தில் 90 லட்சம் பேரும் வசிக்கின்றனர். பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 80 லட்சம் பேரும் இத்தாலியில் 60 லட்சம் பேரும் உள்ளனர்.

இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழர்கள்
இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழர்கள்

இந்தியாவில் 51 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இதில், 4 சதவிகிதம் பேர் அகதிகள். அதாவது 2,07,000 பேர் வாழ்வாதாரம் தேடி வந்தவர்கள். அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்த ஆய்வறிக்கையின்படி, 2010 -17-ம் ஆண்டுக்குள் உள்நாட்டுப் போர் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்துள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகள், மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைகின்றனர்.